Perambalur: An accident occurred when a motorcycle collided with a funeral procession vehicle, causing it to catch fire; 2 people died and one sustained burn injuries!
பெரம்பலூர் மாவட்டம், ஒதியம் அருகே உள்ள மூங்கில்பாடி கிராமத்தில் உயிரிழந்தவரின் உடலத்தை பெரம்பலூரை சேர்ந்த தனியார் சொர்க்க ரத வாகனம் நேற்று சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று எரித்து விட்டு, நேற்றிரவு பெரம்பலூரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது அரியலூர் சாலையில், 4 ரோடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் எதிரே வந்த போது, 4ரோட்டில் இருந்து அருமடல் பிரிவு பாதையை நோக்கி சென்ற பைக் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்தது.
இந்த திடீர் சாலை விபத்தில் அருமடல் பிரிவு பாதையில் உள்ள ஒரு கிரஷரில் வேலை பார்த்து வந்த கூலி தொழிலாளிகளான கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள பெண்ணாடம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் மகன் திருச்செல்வம் (20), என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவருடன் பயணித்த திருச்சி, திருவெறும்பூர், செடி மலை முருகன் கோவில் தெருவை சேர்ந்த மணி மகன் கருப்பசாமி (30), என்பவரும் மருத்துவமனையில் சிகிச்சையின் போது உயிரிழந்தார்.
இதற்கிடையே சொர்க்க ரத வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி தூக்கி வீசப்பட்டதில் டூ வீலர் தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. இதை அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்து தீ மேலும் சாலையில் பரவாமல் தடுத்தனர்.
இந்த விபத்தில் முகத்தில் ரத்த காயமும், கைகளில் தீக்காயமும் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சொர்க்க ரத வாகன ஓட்டுனரான பெரம்பலூர் ஆலம்பாடி சாலையைச் சேர்ந்த விஜயகுமார்(31), என்பவரிடம் பெரம்பலூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்தவரின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று விட்டு இருப்பிடம் திரும்பிய சொர்க்க ரத வாகனத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில், கூலித் தொழிலாளிகள் இருவர் உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தார் உள்ளிட்ட உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.