Perambalur: Awareness rally for International Day of the Deaf and Indian Sign Language Day.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகை மொழி தினத்தினை முன்னிட்டு செவித்திறன் மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கான சைகை மொழி தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அப்துல் ராசிக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உலகெங்கிலும் உள்ள காது கேளாதோரின் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், சமூகத்தில் அவர்களுக்கான சம வாய்ப்புகளை உறுதி செய்யவும் உலக சைகை மொழி தினமானது செப்டம்பர் 23ஆம் தேதி முதல் துவங்கி ஏழு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் காது கேளாதோர் மற்றும் சைகை மொழி விழிப்புணர்வு குறித்த பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாற்றுத்திறனாளிகள் மீதான சமூகப் பார்வையை மேம்படுத்தவும், அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், செவித்திறன் மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கான சைகை மொழி தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் (செவித்திறன் மற்றும் வாய்பேச இயலாத) கலந்து கொண்டனர். சைகை மொழியின் முக்கியத்துவத்தையும், காது கேளாதோரின் உரிமைகளையும் வலியுறுத்தும் விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர். இப்பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி பாலக்கரை பகுதி வரை சென்று முடிவுற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் க.கண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வ.சீனிவாசன், பெரம்பலூர் மாவட்ட காது கேளாதோருக்கான நல சங்க உறுப்பினர்கள், ஸ்ரீகௌதமபுத்தர் செவி மற்றும் பேச்சுத்திறன் குறையுடையோருக்கான சிறப்பு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.