பெரம்பலூர்: ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த பிற்சோழர் கால ஐயனார் சிற்பம் கண்டுபிடிப்பு!

schedule
2026-03-30 | 20:37h
update
2026-03-30 | 20:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Ayyanar Sculpture Dating Back Over 1,000 Years to the Later Chola Period Discovered!

ஐயனார் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் பரவலாக வழிபடப்படும் ஒரு பழமையான காவல் தெய்வம் ஆகும். பெரும்பாலான ஊர்களில் நீர்நிலைகள் , வயல்வெளிகள் மற்றும் வனப் பகுதிகளில் ஐயனார் கோயில்களில் அமைந்திருக்கின்றன.

பொதுவாக, ஐயனார் கோயில்களில் பரிவார தெய்வங்கள், குதிரை ,யானை ஆகியவற்றின் சுடுமண் அல்லது சுதைச் சிற்பங்கள் , ஈட்டி ,சூலம்,அரிவாள் போன்ற ஆயுதங்கள் காணப்படுகின்றன. ஐயனார், சமண சமயத்தில் “பிரம்ம சாத்தன்” எனவும் பௌத்த சமயத்தில் “சாத்தன்”, “சாஸ்தா” எனவும் அழைக்கப் படுகிறார்.

சங்க இலக்கியங்கள் முதல் சிற்றிலக்கியங்கள் வரை ஐயனார் வழிபாடு குறித்த பல்வேறு சான்றுகள் காணப்படுகின்றன. தமிழகத்தில் ஐயனார் கோயில்கள், அவற்றுக்கு வழங்கப்பட்ட நிலக் கொடைகள் குறித்த ஏராளமான கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. வழிபாடு இன்றி வயல்வெளிகளிலும் காட்டுப் பகுதிகளிலும் தனித்த ஐயனார் சிற்பங்கள் ஆங்காங்கே தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகின்றன.

வரலாற்று ஆய்வாளர் முனைவர் ம. செல்வபாண்டியன் , அரும்பாவூர் பகுதியில் கள ஆய்வினை மேற்கொண்ட போது, பிற்சோழர் காலத்தைச் சேர்ந்த ஐயனார் சிற்பம் ஒன்றைக் கண்டறிந்துள்ளார்.இது குறித்து வரலாற்று ஆய்வாளர் முனைவர் ம. செல்வபாண்டியன் கூறியதாவது:

Advertisement

இந்த சிற்பம் பிற்சோழர் காலத்தை ,குறிப்பாக கி. பி. 10-12ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகலாம். பொதுவாக ஐயனார் தனியாகவோ அல்லது தம் துணைவியர்களான பூரணி, பொற்கலை ஆகியோரில் ஒருவருடனோ அல்லது இருவருடனோ காணப்படுவார். சில சிற்பங்களில் அவரது வாகனமான யானை அல்லது குதிரை காட்டப்படும். அபூர்வமாக சில சிற்பங்களில் நாய் மற்றும் பறவைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

அரும்பாவூர் ஐயனார் : பெரம்பலூர் மாவட்டம் , வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள அரும்பாவூர் கிராமத்தில் தொடக்கப் பள்ளியில் இருந்து தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் சாலையின் வடபுறத்தில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான வயல்வெளியில் ஐயனார் சிற்பம் உள்ளது. இது அரும்பாவூர் சிற்றேரியின் கரையோரப் பகுதி வயலாகும்.

சிற்பத்தின் அமைப்பு: 68 செமீ. உயரமும் 51 செமீ அகலமும் கொண்ட இச்சிற்பம் அமர்ந்த நிலையில் -உத்குடி ஆசனத்தில்- அமைக்கப்பட்டுள்ளது. தலைப் பகுதியில் மகர பூரிமத்துடனான ஜடாபாரம். நெற்றிப்பட்டம் காதுகளில் பனையோலைக் குண்டலங்கள் வலது கரத்தில் செண்டாயுதத்துடனும் இடது கரம் தண்ட ஹஸ்தத்திலும் அமைகிறது . கழுத்தில் சரப்பளி. சரிந்த தோள் மீது தோள் மாலை. பிரம்ம முடிச்சுடனான முப்புரி நூல் (உபவீதம்). கேயுரத்துடன் தோள் வளை. உதர பந்தம். இடையில் இடைக் கட்டுடன் குறங்கு செறி. கால்களில் வீரக் கழல்கள்.

பராமரிப்பற்ற நிலையில் முகமும் உடல் பகுதிகளும் சிதைந்து காணப்படுகின்றன. இந்த சிற்பம் வழிபாட்டில் இல்லை என்பதை இதற்கு அணிவிக்கப்பட்டுள்ள பழந்துணியும் எண்ணெய் காணாத அகல் விளக்கும் உணர்த்துகின்றன. அருகில் உள்ள பயிரிடப்படாமல் தரிசாக விடப்பட்ட வயல் பகுதியில் பெரும் காடென முளைத்துள்ள முட்செடிகள், புதர்கள் ஆகியவை சுகாதாரக் கேட்டிற்கும் வழிவகுக்கின்றன.

அரும்பாவூர் சிவன் கோவிலில் இருக்கும் மூன்றாம் இராஜராஜனின் (கி.பி. 1229) கல்வெட்டு, இவ்வூரில் உள்ள ஐயன் கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலக் கொடை குறித்து குறிப்பிடுகிறது. எனவே இந்த பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு ஐயனார் கோயில் இருந்திருக்க வேண்டும். காலப் போக்கில் வழிபாடு இன்றி கோயில் சிதைந்து விளை நிலங்களாய் மாறி இருக்கலாம்‌ . அப்போது இங்கு இருந்த ஐயனார் கோயிலில் வழிபாட்டில் இருந்த சிற்பம்,இதுவே ஆகலாம்.

அரும்பாவூரின் தொன்மைக்குச் சான்றாக விளங்கும் இந்த ஐயனாரை மழை வெயிலில் இருந்து பாதுகாக்க உடனடியாக ஒரு நிழற் குடை அல்லது சிற்றாலயம் அமைத்துப் பாதுகாக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் வேண்டுகோளாகும், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.04.2026 - 18:39:25
Privacy-Data & cookie usage: