பெரம்பலூர்: சிறுவர்

சிறுமிகள் இந்திய ராணுவக் கல்லூரியில் பயில விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்!

schedule
2024-09-11 | 12:07h
update
2024-09-11 | 12:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Boys and girls can apply to study in Indian Army College; Collector Info!

டேராடுனில் உள்ள ராஷ்டரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜீலை 2025 பருவத்தில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்கான தேர்வு இந்திய நாட்டில் குறிப்பிட்ட சில மையங்களில் 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது. சென்னை நகரிலும் இத்தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும். எழுத்துத் தேர்வு, ஆங்கிலம், கணக்கு மற்றும் பொது அறிவு ஆகிய தாள்கள் கொண்டது.

கணக்குத்தாள் மற்றும் பொது அறிவுத் தாள் ஆகியன ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் விடையளிக்கப்பட வேண்டும். நேர்முகத்தேர்வானது விண்ணப்பதாரர்களின் அறிவுக் கூர்மை, தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு பெற நேர்முகத் தேர்வு உட்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 விழுக்காடு ஆகும்.

இத்தேர்விற்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை ‘கமாண்டன்ட், இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடுன், உத்தரகாண்ட் 248003. என்ற முகவரிக்கு வரைவோலையை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். அல்லது இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி www.rimc.gov.in என்ற இணையவழி மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

வரைவோலை மூலமாக (BY Sending Demand Draft) கமாண்டன்ட் ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடுன், உத்தரகாண்ட், அஞ்சல் குறியீட்டு எண் 248 003. என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் வாயிலாக எழுத்து மூலம் விண்ணப்பித்து ‘கமாண்டன்ட் ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, டேராடுன். என வரைவோரைக்குரிய கிளை எச்.டி.எப்.சி வங்கி, பல்லூபூர் சவுக், டேராடுன் (வங்கி குறியீடு 1399) உத்தரகாண்ட். செலுத்தத்தக்க வகையில் பொதுப் பிரிவினர் ரூ.600-யும் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் சாதிச்சான்றுடன் ரூ.555-க்கான வரைவோலையை அனுப்பி விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம்.

Advertisement

இணையவழி மூலமாக (Online Payment) இராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியின் இணையவழியான www.rimc.gov.in மூலமாக பொதுப் பிரிவினர் ரூபாய் 600- யும் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் ரூ.555-யும் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். (கட்டணம் பெறப்பட்ட பின் விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பு விரைவு அஞ்சல் வாயிலாக இராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடுன், உத்தரகாண்ட் 248 003 லிருந்து அனுப்பப்படும்).

விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு ஆகியன சென்னையிலுள்ள இத்தேர்வாணைய அலுவலகத்திலிருந்து விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படமாட்டாது. ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியின் விண்ணப்பப்படிவங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும், தனிப்பட்ட முறையில் அச்சிடப்பட்ட விண்ணப்பப்படிவங்கள், ஒளிநகல் எடுக்கப்பட்ட விண்ணப்பப்படிவமோ அல்லது இராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி ஹாலோகிராம் (Hologram) முத்திரையிடப்படாத விண்ணப்பப் படிவங்கள் நிராகரிக்கப்படும்.

அஞ்சல் துறையின் தாமதத்திற்கு இராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி பொறுப்பல்ல. தவறான அல்லது முழுமையடையாத முகவரியில் விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு போக்குவரத்தில் ஏற்படும் அஞ்சல் துறையின் தாமதம் அல்லது இழப்புக்கு ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி பொறுப்பேற்காது. எந்தவொரு சூழ்நிலையிலும் விண்ணப்பக் கட்டணம் திரும்பச் செலுத்தப்படமாட்டாது.

விண்ணப்பதாரர்களின் (சிறுவர்களின் மற்றும் சிறுமிகளின்) பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும், விண்ணப்பதாரர் 01.07.2025 அன்று 11½ வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது அவர்கள் 02.07.2012க்கு முன்னதாகவும் 01.01.2014 க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது. இந்த வயது வரம்பில் எந்த தளர்த்தலும் கிடையாது. விண்ணப்பதாரர் மேற்குறிப்பிட்ட இராணுவக் கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும் பொழுது, அதாவது 01.07.2025ல் அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில் (Recognised School) ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை, பூங்கா நகர், சென்னை 600 003 என்ற முகவரிக்கு 30.09.2024 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும், மற்ற விவரங்களுக்கு இராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் கிரெஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.08.2026 - 15:18:43
Privacy-Data & cookie usage: