பெரம்பலூர்: கால்நடைகளில் இருந்து மனிதனுக்கு பரவும் தொற்று நோயான கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம்; கலெக்டர் அறிவிப்பு!

schedule
2024-09-16 | 13:24h
update
2024-09-16 | 13:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Brucellosis – Calf Distemper Immunization Camp; Collector Notice!

பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டம் மூலமாக 4-வது கட்ட புருசெல்லோசிஸ் எனப்படும் கன்று வீச்சு நோய்க்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்நோய்க்கான தடுப்பூசி 4 மாதம் முதல் 8 மாதம் வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு மட்டும் செலுத்தப்பட உள்ளது. இந்த தடுப்பூசியை ஒரு முறை செலுத்திக்கொண்டால் கிடேரி கன்றுகளுக்கு அதன் ஆயுள் முழுவதும் இக்கிருமிக்கு எதிரான எதிர்ப்பு சக்தி கிடைக்கும் காளை கன்றுகளுக்கும், சினை மாடுகளுக்கும் இத்தடுப்பூசி செலுத்தக்கூடாது.

கன்று வீச்சு நோய் கால்நடைகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய உலகளாவிய ஒரு தொற்று நோயாகும். இது புருசெல்லா அபார்ட்டஸ் எனும் நுண்ணுயிரியினால் ஏற்படுகிறது. இக்கிருமி பெரும்பாலும் மூட்டு மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றது. பல வகையான புருசெல்லா நுண்ணுயிரிகள் கண்டறியப்பட்டுள்ளது. இது பொது சுகாதாரத்திற்கும் உலகளாவிய பொருளாதாரத்திற்கும் ஒரு சவாலாக உள்ளது. கன்று வீச்சு நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் உற்பத்தி திறன் குறைவு மற்றும் சினைபிடிக்காமை காணப்படும். இந்நோய் பெரும்பாலும் மாடு, ஆடு, எருமை, யாக், ஒட்டகம், நாய், குதிரை மற்றும் பன்றிகளை தாக்குகின்றது. வெள்ளாடுகளில் புருசெல்லா மெலிட்டென்சிஸ், மாடுகளில் புருசெல்லா அபார்ட்டஸ், நாய்களில் கேனிஸ், பன்றிகளில் புருசெல்லா குயிஸ் கிருமிகள் தாக்கும். மேலும் நான்கு வகை கிருமிகளும் மனிதர்களுக்கும் பரவும்.

நோய் அறிகுறிகள்: மனிதர்களிலும் மற்றும் விலங்குகளிலும் மாறுபட்டு காணப்படும். இந்நோயினால் மனிதர்களுக்கு அதிக காய்ச்சல், குளிர், உடல்வலி, தலைவலி, மனச்சோர்வு, சோம்பல், பசியின்மை, எடை குறைதல், வயிறு, மூட்டு, முதுகு பகுதிகளில் வலி மண்ணீரல் / கல்லீரல் வீக்கம் மற்றும் எடை குறைவு ஆகியவை ஏற்படும். இந்நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் உணவு உட்கொள்ளாமை, பால் உற்பத்தி குறைதல், சினைபிடிக்காமை, கன்று வீச்சு மற்றும் விரை வீக்கம் காணப்படும்.

Advertisement

நோய் தடுப்பு முறைகள் : மாட்டின் நஞ்சுக்கொடி போன்றவற்றை கவனமாக கையாள வேண்டும். சமைக்கப்படாத மாமிசம் மற்றும் பதப்படுத்தப்படாத பாலை உட்கொள்ளக்கூடாது. கால்நடைகளில் தடுப்பூசி செலுத்தி இந்த நோயினை தடுப்பதன் மூலம் மனிதர்களுக்கு பரவுவதை தடுக்கலாம். செயற்கைமுறை கருவுருதலுக்கு பயன்படும் காளைகளை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும். கால்நடைகளில் உரிய உயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். கன்றுவீச்சு நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை தனிமைப்படுத்த பால் மற்றும் பால் பொருட்கள், நன்கு சமைக்கப்பட்ட இறைச்சி பொருட்களை உட்கொள்ளுதல் வேண்டும்.

தடுப்பூசிப்பணி: சிறந்த பராமரிப்பும், தடுப்பூசி செலுத்துவதும் இந்நோயினை தடுக்க உகந்த வழி ஆகும். பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இத்தடுப்பூசி கிடேரி கன்றுகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் முதல் தவணையில் 13500 இரண்டாம் தவணையில் 10670 மூன்றாம் தவணையில் 9240 கிடேரி கன்றுகளுக்கு இதுவரையில் கன்றுவீச்சு நோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டது. தற்போது நான்காம் தவணையாக பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் தோராயமாக 5200 கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 37 கால்நடை மருந்தகங்கள், 5 கால்நடை கிளை நிலையங்கள் மற்றும் 2 பார்வை கால்நடை கிளை நிலையங்களிலுள்ள கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 37 குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்ற 18.09.2024 முதல் 15.10.2024 வரை தடுப்பூசி இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது. இத்தடுப்பூசி நான்கு முதல் எட்டு மாதத்திற்குள்ள கிடேரி கன்றுகளுக்கு அதன் ஆயுள் முழுவதும் நோய் கிருமிக்கு எதிரான எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மக்களுக்கு இத்தடுப்பூசி முகாம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் வரும்பொழுது முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விவசாயிகளுக்கு தங்களது கிராமத்தில் எந்த நாட்களில் தடுப்பூசி பணி நடைபெறும் என்ற விபரம் முன்கூட்டியே சம்மந்தப்பட்ட கால்நடை மருந்தகத்தால் அக்கிராமத்திற்கு தெரிவிக்கப்படும் அல்லது பொது மக்கள் தங்கள் பகுதி கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையத்ததை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். கன்றுவீச்சு நோய் தடுப்பூசி முகாம் போடும் நாட்களில் விவசாயிகள் கால்நடை பராமரிப்புத்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தவறாது தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும்.

 பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும் 18.09.2024 முதல் 15.10.2024 வரையிலான 28 நாட்கள் தொடர்ந்து இலவசமாக கன்றுவீச்சு நோய் தடுப்பூசி செலுத்தி பயனடையுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.07.2026 - 06:03:03
Privacy-Data & cookie usage: