பெரம்பலூர்: கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி ; கலெக்டர் தகவல்!

schedule
2025-09-01 | 17:11h
update
2025-09-01 | 17:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Vaccination of cattle against skin disease; Collector informs!

தோல் கழலை நோய் என்பது எளிதில் பரவக்கூடிய வைரஸ் தொற்றுநோய் ஆகும். தோல் கழலை நோய் என்பது பாக்ஸ் விரிடேயின் குடும்பத்தைச் சேர்ந்த கேப்ரிபாக்ஸ் வைரசினால் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட கால்நடைகளில் இருந்து கொசுக்கள், ஈக்கள், பேன்கள் மற்றும் பிற, புற ஒட்டுண்ணிகள் மூலம் மற்ற ஆரோக்கியமான கால்நடைகளுக்கு பரவுகிறது.

கடுமையான காய்ச்சல் ,கண்ணில் நீர் வடிதல் ,மூக்கில் சளி ஒழுகுதல் போன்றவை இந்நோயின் ஆரம்ப அறிகுறிகள் ஆகும். பிறகு உடல் முழுவதும் கண்டு கண்டாக வீக்கம் காணப்படும். உருண்டையாக உள்ள கட்டிகள் உடைந்து அதன் மத்தியில் இருந்து புண்ணாகும். இந்த கட்டியின் அகலம் அரை சென்டிமீட்டர் முதல் 5 சென்டிமீட்டர் வரை இருக்கும். நிணநீர் சுரப்பிகள் பெரியதாக காணப்படும். முகம் கழுத்து, வாய்,மூக்கு கண்ணிமைகள் ஆகியவற்றில் கட்டிகள் ஏற்படும். கால்களில் வீக்கம், பால் உற்பத்தி குறைதல், கருக்கலைப்பு, சினை பிடிக்காமை மற்றும் நோயின் வீரியம் அதிகமாகும் போது கால்நடைகள் இறக்க நேரிடுகிறது. பாதிக்கப்பட்ட கால்நடைகள் இரண்டு முதல் மூன்று வாரங்களில் நோய்கள் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும். பால் உற்பத்தி திறன் பல வாரங்களுக்கு குறைவாக காணப்படும். நோயுற்ற விகிதம் 10 -20% மற்றும் மரண விகிதம் ஒன்று முதல் ஐந்து சதவீதம் இருக்கும்.

Advertisement

கொசு,ஈ உண்ணிக்கடி மற்றும் பாதிக்கப்பட்ட மாடு மூலமாக இந்த நோய் பரவும். கோடைகாலத் தொடக்கத்தில் இந்த நோய் அதிக அளவில் பரவுகிறது. பால் கறவையாளர்கள் மூலமாகவும் பரவ வாய்ப்புள்ளது. கன்று குட்டிகள் பாதிக்கப்பட்ட மாட்டின் பாலை அருந்தும்போது நோய் தொற்று ஏற்படுகிறது. நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மாட்டினை வாங்கி வரும்பொழுது அதன் மூலமாகவும் நோய் பரவும். இந்த வைரஸ் கிருமியானது மாட்டின் தோல் மற்றும் காயங்களில் 18 முதல் 30 நாட்கள் வரை வாழும்.

பால் உற்பத்தி குறையும். சினை பிடிப்பதில் பாதிப்புகள் ஏற்படும். தீவனம் சரியாக உட்கொள்ளாததால் உடல் எடை குறைந்து காணப்படும். காயங்களால் மாட்டின் தோல் முற்றிலும் பாதிப்படையும். இளம் சினை மாடுகளில் கரு சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. சில மாடுகளில் மடி நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதிக அளவில் நோய் தொற்று ஏற்பட்டாலும் இறப்பு சதவீதம் மிகவும் குறைவாகும்.

பாதிக்கப்பட்ட கால்நடைகளை, ஆரோக்கியமான கால்நடைகளில் இருந்து தனிமைப்படுத்துதல் வேண்டும். பாதிக்கப்பட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. கொசு ,ஈ மற்றும் உண்ணிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் நோய் பரவுவதை தடுக்கலாம் . பாதிக்கப்பட்ட கால்நடைகளை சந்தைக்கு கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீர் பாத்திரம் தனியாக இருக்க வேண்டும். கறவையாளர்கள் பாதிக்கப்பட்ட மாடுகளை தொட நேர்ந்தால், உடனடியாக கைகளை கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த பிறகே மற்ற மாடுகளை தொட வேண்டும். சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

கால்நடைகளை தோல் கழலை நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில், தற்பொழுது பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து பசு மற்றும் எருமைகளுக்கும் வரும் 3.09.2025 அன்று முதல் தொடங்கி 28 நாட்களுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர் தங்களது பசு மற்றும் எருமைகளுக்கு தவறாமல் இந்த தடுப்பூசியினை போட்டுக்கொண்டு தங்கள் கால்நடைச் செல்வங்களை இக்கொடிய நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும்படி கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2026 - 11:51:41
Privacy-Data & cookie usage: