Perambalur; Citizens blocked the road with empty jugs demanding drinking water!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் கிராம மக்கள் குடிநீர் வழங்க கோரி, காலி குடங்களுடன் சாலையில் மறியல் போரட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணாபுரத்தில், குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் கிணற்றில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீரும் கடந்த ஆறு மாத காலமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

இதனால் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்ததாகவும், இது பொது மக்களுக்கு போதுமானதாக இல்லை என்பதால் ஆத்திரம் அடைந்த அக்கிராமவாசிகள் இன்று காலை, கிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தத்தில் காலி குடங்களுடன் பெரம்பலூர்-ஆத்தூர் மற்றும் அரும்பாவூர் செல்லும் வழி சாலைகளில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதாஸ், ஊராட்சித் தலைவர் ராஜ்பிரபு மற்றும் அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 4 நாட்களுக்கு ஒரு முறை டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து குடிநீர் வினியோகம் செய்வதாக உறுதி அளித்தனர்.

இதனை தொடர்ந்து சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டு சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது. பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் உரிய நேரத்திற்கு செல்லுமிடங்களுக்கு செல்ல முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!