பெரம்பலூர்: செம்மொழி நாள் விழா; பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள்; கலெக்டர் தகவல்!

schedule
2025-04-24 | 17:47h
update
2025-04-24 | 17:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Classical Language Day celebration; Essay and speech competitions for school and college students; Collector’s information!

FILE COPY

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான சூன்-03 அன்று செம்மொழிநாள் விழாவாக 2025-ஆம் ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத் தந்த முத்தமிழறிஞர் கலைஞர் பெருமையைப் போற்றிடும் வகையில் அவர் பிறந்த நாளான ஜுன் 3ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் செம்மொழி நாள் விழாவாகக் கொண்டாடப்பட உள்ளது.

செம்மொழியின் சிறப்பையும் முத்தமிழறிஞரின் தமிழ்த்தொண்டின் பெருமையையும் மாணவர்களிடம் உணர்த்திடும் வகையில் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி 03.06.2025ஆம் நாளன்று நடைபெறவுள்ள செம்மொழிநாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்டுவார்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 09.05.2025 வெள்ளிக்கிழமை அன்றும், கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 10.05.2025 சனிக்கிழமை அன்றும் பெரம்பலூர், பாரத சாரண, சாரணியர் பயிற்சி மையத்தில் நடைபெறும். இப்போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்கள் விண்ணப்பப் படிவங்களைத் தமிழ் வளர்ச்சித் துறையின் https://tamilvalarchithurai.tn.gov.in. இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்தோ அல்லது பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாகப் பெற்று பள்ளி மாணவர்கள் தலைமையாசிரியரின் பரிந்துரைக் கடிதத்துடனும், கல்லூரி மாணவர்கள் முதல்வர் / துறைத் தலைவரின் பரிந்துரைக் கடிதத்துடனும் 05.05.2025ஆம் நாளுக்குள் நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.

Advertisement

பள்ளிப் போட்டிகளில் அரசு, தனியார், பதின்ம, அரசு நிதியுதவிபெறும் பள்ளிகள் மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) பயிலும் மாணவர்கள் அனைவரும் பங்குபெறலாம். கல்லூரிப் போட்டிகளில் கலை மற்றும் அறிவியல், கல்வியியல், பொறியியல், பல்தொழில்நுட்பம், மருத்துவம், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பங்குபெறலாம். காலை 9.30 மணிக்குப் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் தொடங்கப்பெறும். போட்டிக்கான தலைப்புகள் போட்டியின்போது அறிவிக்கப்படும். “செம்மொழியின் சிறப்பு மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் தமிழ்த்தொண்டின் பெருமை” தொடர்புடைய தலைப்புகள் அளிக்கப்பெறும்.

போட்டிகளில் பங்குபெறும் மாணவர்கள் அனைவருக்கும் தேநீர், மாச்சில், மதிய உணவு மற்றும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும். மாவட்டப் போட்டிகளில் முதல் பரிசுபெறும் மாணவர் 17.05.2025 அன்று சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெறுவர். அதில் முதல் 3 பரிசுபெறும் பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு 03.06.2025 அன்று நடைபெறும் செம்மொழிநாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்படுவார்கள்.

மாவட்டப் போட்டியில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெறுபவர்களுக்கு ரூ. 10,000-மும், இரண்டாம் பரிசு பெறுபவர்களுக்கு ரூ. 7,000-மும், மூன்றாம் பரிசு ரூ. 5,000-மும், வழங்கப்படும். மாநிலப் போட்டியில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெறுபவர்களுக்கு ரூ. 15,000-மும், இரண்டாம் பரிசு பெறுபவர்களுக்கு ரூ. 10,000-மும், மூன்றாம் பரிசு ரூ. 7,000-மும், வழங்கப்படும்.

மேற்கண்ட போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ / மாணவியர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.06.2026 - 13:01:13
Privacy-Data & cookie usage: