Perambalur: Collector announces insurance coverage for Kuruvai paddy crops!
பெரம்பலூர் மாவட்டத்தில் பாரத பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத் 2026 திட்டத்தின் கீழ் காரீப் பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் குறுவை பயிரானது எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் பொழுது விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கிட காப்பீடு நிறுவனத்தினால் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டமானது ஷீமா ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனியால் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் நெல் குறுவை பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் 31.07.2026 ஆகும். ஒரு ஏக்கருக்கான நெல் (குறுவை) பிரீமியம் தொகை ரூ.786 ஆகும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இவ்வாண்டு பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் பின்வரும் குறு வட்டங்களில் நெல் பயிரிடும் விவசாயிகள் இப்பயிர் காப்பீடு திட்டத்தில் இணையலாம். ஆலத்தூர் வட்டாரத்தில் செட்டிகுளம், வேப்பந்தட்டை வட்டாரத்தில் உள்ள அனைத்து குறு வட்டங்களும், வேப்பூர் வட்டாரத்தில் வரகூர் குறு வட்டத்தை சார்ந்த விவசாயிகள் நடப்பில் உள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா மற்றும் நடப்பு பசலி அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரிமியம் தொகை செலுத்தி மேற்குறிப்பிட்ட கால கெடுவுக்குள் பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், விவசாயிகள் விண்ணப்பிக்கும் பொழுது இறுதி நேர கூட்ட நெரிசலை தவிர்த்திட முன்கூட்டியே பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என கலெக்டர் சரண்யா தெரிவித்துள்ளார்.