Perambalur: Collector issues order to student who requested a place in government hostel over cell phone!
பெரம்பலூர் கலெக்டர் ந.மிருணாளினி நேற்று, மாணவி கிருத்திகா என்பவர் செல்போனில் தொடர்புகொண்டு, தான் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், பொன்பரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முதலாமாண்டு பி.பி.ஏ பாடப்பிரிவில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தாய்,தந்தை கூலி வேலை செய்து வரும் நிலையிலும் தன்னை படிக்க வைப்பதாகவும், கள்ளக்குறிச்சியில் இருந்து தினமும் பெரம்பலூருக்கு பேருந்தில் கல்லூரி சென்று வர சிரமமாக இருப்பதால் தனக்கு அரசு விடுதியில் தங்கி படிப்பதற்கு உதவிட வேண்டும் என மாணவி மற்றும் மாணவியின் தாயார் கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையை பரிசீலித்த கலெக்டர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரி மாணவிகளுக்கான சமூக நீதி விடுதியில் அந்த மாணவிளை சேர்க்க உத்தரவிட்டார். அதனடிப்படையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அந்த மாணவிக்கு சமூகநீதி விடுதியில் சேர்வதற்கான ஆணையினை கலெக்டர் ந.மிருணாளினி வழங்கினார்.