பெரம்பலூர்: மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்ய கலெக்டர் உத்தரவு!

schedule
2026-05-18 | 17:49h
update
2026-05-18 | 17:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Collector Orders Officials to Ensure Regular Supply of Drinking Water to the Public!

பெரம்பலூர் கலெக்டர் மிருணாளினி தலைமையில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பான வாராந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வழங்கப்படும் நீரின் அளவு எவ்வளவு, அதில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு என்ன, எவ்வளவு கால இடைவெளியில் குடிநீர் வழங்கப்படுகின்றது என்பது குறித்து விரிவாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.

Advertisement

மேலும், நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் குடிநீர் பற்றாக்குறை, குழாய் உடைப்பு, பொதுமக்களுக்கு சரிவர குடிநீர் வழங்கப்படாதது உள்ளிட்ட குடிநீர் வழங்குவதில் இடர்பாடுகள் உள்ளதாக வெளிவந்த செய்திகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார்.

மேலும், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறை இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்து, போதுமான அளவு குடிநீர் விநியோகம் செய்திடவும், பொதுமக்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் சீரான குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்றும் ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநருக்கும், நகராட்சி ஆணையர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கும் கலெக்டர் உத்தரவிட்டார். குடிநீர் விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவித்தால் தனிக்கவனம் செலுத்தி அந்த புகாரின் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் ரமேஷ், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.05.2026 - 17:52:15
Privacy-Data & cookie usage: