பெரம்பலூர்: மக்கள் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வுகாண புதிய வாட்ஸ்அப் குழு உருவாக்கினார்; கலெக்டர் ஷரண்யா!

schedule
2026-06-05 | 13:32h
update
2026-06-05 | 13:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Collector Sharanya creates a new WhatsApp group to address public grievance petitions.

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது மக்களிடமிருந்து வரப் பெற்ற மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல் நிலை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ஷரண்யா தலைமையில் நடந்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது மக்களிடமிருந்து வரப் பெற்ற மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறைகளின் முதல் நிலை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ஷரண்யா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. அப்போது கலெக்டர் ஷரண்யா தெரிவித்ததாவது:

தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற ஆசையோடு உங்களிடம் கோரிக்கைகளை தெரிவிக்கும் பொதுமக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திடும் வகையில் உங்கள் நடவடிக்கைகள் அமைந்திட வேண்டும் கோரிக்கை மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். நடவடிக்கை எடுப்பதற்கு காலதாமதமானால் என்ன காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து மனுதாரருக்கு விரிவாக எடுத்துக் கூற வேண்டும். நிராகரிக்கப்படும் மனுக்களுக்கு அதற்கான தெளிவான காரணங்களையும் மனுதாரர்களுக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும்.

Advertisement

சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகளில் மக்களுக்கு தேவைப்படும் தேவைகளின் அடிப்படையில் வரப்படும் செய்திகளும், தினந்தோறும் தொலைபேசி மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளும் பிரத்தியேக வாட்ஸ்அப் குழுவில் பகிரப்படும்.

அந்தக் கோரிக்கைகளின் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையினை இந்த வாட்ஸ்அப் குழுவில் சம்பந்தப்பட்ட அலுவலர் பகிர்ந்திட வேண்டும்.

இந்த நடைமுறையின் முன்னேற்றம் குறித்து கண்காணிக்க வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் கலெக்டர் தலைமையில் சிறப்புக் கண்காணிப்புக் கூட்டம் நடைபெறும். குறிப்பிட்ட காலத்திற்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாத துறை அலுவலர்கள், வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் அதற்கான உரிய விளக்கத்தை நேரில் அளிக்க வேண்டும். பொதுமக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் ஏதேனும் நிர்வாகச் சிக்கல்களோ அல்லது நடைமுறைத் தாமதங்களோ இருந்தால், அதனை அலுவலர்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். அதற்கான தீர்வுகளுக்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கும்.

ஒவ்வொரு துறைசார்ந்த முதல்நிலை அலுவலர்களும் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு காண்பதில் தனி கவனம் செலுத்திட வேண்டும். இதற்காக ஒவ்வொரு முதல்நிலை அலுவலர்களும் தங்களது துறையிலிருந்து ஒரு பொறுப்பு அலுவலரை நியமித்து கண்காணிக்கலாம். மனுக்களை கள ஆய்வு மேற்கொண்டு, மனுதாரர்களின் குறைகளுக்கு முழுமையான மற்றும் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, அரசு நலத்திட்டங்கள் தடையின்றி அவர்களைச் சென்றடைவதை அனைத்துத் துறை அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும், என தெரிவித்தார்.

இதில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், வருவாய் கோட்டாட்சியர் மு.அனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சொர்ணராஜ் மற்றும் அனைத்து துறைகளின் முதல் நிலை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.06.2026 - 13:56:30
Privacy-Data & cookie usage: