Perambalur: Desilting work at Thuraimangalam Lake with Rs. 25 lakh funding from SkyBlue; Collector inaugurates the project!
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் ஏரியில் MEGA தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் SkyBlue உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு பணியின் கீழ் சுத்தப்படுத்தி, தூர்வாரி, கரைகளை பலப்படுத்தும் பணிகளை கலெக்டர் ஷரண்யா தொடங்கி வைத்தார்.
துறைமங்கலம் பெரிய ஏரியானது இப்பகுதியின் மிக முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. ஏரிக்கரையின் நீளம் 1064 மீட்டர். இரண்டு பாசன மதகுகளும், தலா 16.25 மீட்டர் மற்றும் 5.75 மீட்டர் நீளம் கொண்ட இரண்டு உபரி நீர் வழிந்தோடிகளும் உள்ளன. ஏரியின் முழு கொள்ளளவு 17.22 மில்லியன் கன அடி. ஏரியின் மொத்த பரப்பளவு 48.50 ஹெக்டேர். இந்த ஏரியில் உள்ள பாசன மதகுகள் மூலம் 273.80 ஏக்கர் நிலங்கள் தொடர்ச்சியாக பாசன வசதி பெற்று வருகின்றன.
முதற்கட்டமாக, புதுச்சேரியை பூர்விகமாக கொண்டவரும், மலேசிய தொழிலதிபருமான டத்தோ மணி என்பவர் நடத்தி வரும் ஸ்கை புளு என்ற நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு பணியின் கீழ் ஏரியை சுத்தப்படுத்த தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மெகா பவுண்டேஷன் என்ற தன்னார்வ அமைப்பிற்கு ரூ. 25 லட்சம் வழங்கி உள்ளது. இந்த சமூக பொறுப்புணர்வு பணியின் கீழ் ஏரியினை முழுவதுமாக சுத்தப்படுத்தி, தூர்வாரி, கரைகளை பலப்படுத்தும் பணிகளை இன்று தொடங்கப்பட்டுள்ளது.
முன்னதாக பேசிய கலெக்டர் ஷரண்யா தெரிவித்தாவது: எனது தந்தை இன்ஸ்டாகிராமில் பார்த்து மேகா பவுண்டேசனை அறிமுகம் செய்தார். மேலும:. பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் உள்ள மிக முக்கியமான ஏரிகளை கணக்கெடுப்பு செய்து சுத்தப்படுத்தி தூர்வாரும் பணிகள் படிப்படியாக தன்னார்வல தொண்டு நிறுவனம் மூலம் செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது, எனவே, இந்த திட்டத்திற்கு தன்னார்வல தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் தங்களுடைய பங்களிப்பை வழங்கி மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். சப் -கலெக்டர் அனிதா, பெரம்பலூர் தாசில்தார் பழனிச்செல்வன், ஏரிபாசன சங்கத்தின் தலைவர் கண்ணபிரான், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.