வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

schedule
2016-02-04 | 12:06h
update
2026-04-22 | 21:13h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் புதிய பால்பண்ணை, பொது பயன்பாட்டு மையம், அரசு தொழிற்பயிற்சி நிலையம் கட்டப்பட உள்ள இடம் உள்ளிட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் இன்று நேரில் பார்வையிட்டார்.

15.1.2015 அன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அறிவித்தபடி பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூரில் ரூ.9 கோடியே 8.56 லட்சம் மதிப்பில் விடுதியுடன் கூடிய புதிய தொழிற்பயிற்சி நிலையம் கட்டுவதற்காக நாரணமங்கலம் அருகே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 ஏக்கர் பரப்பிலான இடத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். அப்போது, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்திற்கான வரைபடங்களை பார்வையிட்டு வட்டாட்சியரிடம் புதிய கட்டடம் கட்ட மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து பாடாலூரில் ஜவுளிப்பூங்கா அமைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 100 ஏக்கர் பரப்பிலான இடத்தினையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தினை தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றமடையச்செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் கிராமத்தில், சுமார் 22 ஏக்கர் நிலப்பரப்பளவில், நாளொன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட 36 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பால்பண்ணை அமைக்க (15.7.2015) அன்று தமிழக முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

இந்த புதிய பால் பண்ணைக்கான கட்டுமானப் பணிகள் உடனடியாக துவங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த கட்டுமானப்பணிகளை இன்று நேரில் பார்வையிட்ட, மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார், கட்டுமானப் பொறியாளர்களிடம் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆலோசனை நடத்தினார். கட்டுமானப் பணிகளுக்கு தேவையான உதவிகள் சம்மந்தப்பட்ட அலுவலர்களால் வழங்கப்படுகிறதா என்றும் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து ஆலத்தூர் ஒன்றியத்தின் சார்பில் மாநில சமச்சீர் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ரூ. 1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பொது மைய பயன்பாட்டிற்கான கட்டிடத்தையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார். ஆயத்த ஆடை தொழில் துவங்க விருப்பமுள்ளவர்களிடம் கோரிக்கைகளை பெற்று, அரசு விதிகளுக்குட்பட்டு ஆயத்த ஆடை தயாரிக்கும் வகையில் இக்கட்டடம் பயன்படுத்தப்படவுள்ளது.

இக்கட்டடத்திற்கான கட்டுமானப்பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் குறித்த காலத்திற்குள் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென்று வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்வில் பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மஞ்சுளா தேவி, ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முரளிதரன், உதவிப்பொறியாளர் லதா, ஆலத்தூர் வட்டாட்சியர் சிவக்குமார், பாடாலூர் ஊராட்சி மன்றத் தலைவர் வேல்முருகன், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.04.2026 - 21:13:29
Privacy-Data & cookie usage: