பெரம்பலூர் மாவட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

schedule
2017-01-05 | 21:40h
update
2026-09-16 | 14:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com


அரையாண்டுத் தேர்வு முடிவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

நடந்து முடிந்த அரையாண்டுத் தேர்வில் அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் மற்றும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சிவிகிதம் குறித்தும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் மற்றும் ஆதிதிராவிடர் நல மேல் நிலைப் பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Advertisement

இக்கூட்டத்தில் அரையாண்டுத் தேர்வு முடிவுகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ள பள்ளிகளின் தலையாசிரியர்களிடத்தில் அதற்கான விளக்கங்களை கேட்டறிந்த மாவட்ட ஆட்சிப் பணியாளர் தேர்ச்சி வகிதம் குறைவதற்கான காரணங்களை கண்டறிந்து அவற்றைக்களைய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும், தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ள மாணவர்களின் மீது தனிக்கவனம் செலுத்தி அவர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்கி தேர்ச்சியினை அதிகப்படுத்த வேண்டுமென்று அறிவுரை வழங்கினார்.

மேலும், நமது மாவட்டத்திலுள்ள அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் மற்றும் ஆதிதிராவிடர்நல மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித்திறனை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.

அதிலும் குறிப்பாக இந்த கல்வியாண்டு இறுதியில் நடைபெற உள்ள அரசுப்பொதுத் தேர்வில் பங்கேற்க உள்ள பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகள் முழுதேர்ச்சி பெறும் வகையில் அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், பெரம்பலூர் மாவட்டம் இந்த ஆண்டு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி விகிதத்தை பெற ஆசிரியர்கள் முழு ஈடுபாட்டுடன் உழைக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சிப் பணியாளர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி, ஆதிதிராவிடர் நல அலுவலர் மூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் சுகுமார் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பிரேம்குமார், மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.09.2026 - 14:00:32
Privacy-Data & cookie usage: