Perambalur District Transgender Grievance Redressal Camp; Led by Collector Karpagam!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலத்துறையின் சார்பில், திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் க. கற்பகம் தலைமையில் நடந்தது.

தமிழ்நாடு முதலமைச்சர், திருநங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டும், அவர்களின் குறைகளை நலத்திட்டங்கள் மூலம் தீர்க்கவும், திருநங்கையர்களுக்கான நல வாரியத்தை அமைத்துள்ளார்கள். திருநங்கையர்களை பொருளாதார ரீதியாக மேம்பட, அடையாள அட்டை, குடும்ப அட்டை, வீட்டுமனை பட்டா, குடியிருப்பு வீடுகள், இலவச தையல் இயந்திரம், உயர்கல்வி பயில உதவி, சுய உதவி குழுக்கள், சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதி, இலவச திறன் பயிற்சி, வருமானத்தை ஈட்டும் தொழில் செய்திட ரூ.50,000/- வரை மானியம் போன்ற பல்வேறு சேவைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்திடும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் சமூக நலத்துறையின் மூலம் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நடத்த தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 54 திருநங்கைகள் வசித்து வருகின்றனர். 10 நபர்களுக்கு சுயதொழில் புரிய நபருக்கு 20 ஆயிரம்- வீதம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. 19 நபர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது. 40 திருநங்கைகளுக்கு மின்னனு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

நயன்தாரா என்ற திருநங்கைக்கு மகளிர் திட்டம் மூலம் ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. தனலெட்சுமி என்ற திருநங்கைக்கு சத்துணவு அமைப்பாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. 40 வயதிற்கு மேற்பட்ட 16 திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1500/- வீதம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. 28 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. 11 திருநங்கைகளுக்கு தையல்பயிற்சி வழங்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. Covid -19 காலங்களில் ஒவ்வொரு திருநங்கைகளுக்கும் அரிசி மளிகை பொருட்கள் மற்றும் முதல், இரண்டாம் தவணையாக ரூ. 4000/- வீதம் வழங்கப்பட்டுள்ளது. 13 திருநங்கைகளுக்கு ரூ 50,000/- வீதம் சுயதொழில் புரிய மானியம் வழங்கப்பட்டுள்ளது. 21 திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்று பல்வேறு திட்டங்கள் திருநங்கைகளுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களையெல்லாம் திருநங்கைகள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இனிவரும் காலங்களில் மாதந்தோறும் முதல் வெள்ளிக் கிழமைகளில் சமூக நலத்துறையின் மூலம் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெறும், என கலெக்டர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதில் மாவட்ட சமூக நல அலுவலர், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்), பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!