பெரம்பலூர்: குன்னம் ஐஜேகே வேட்பாளர் சரண்யா மீது, திமுக வேட்பாளர் சிவசங்கர் போலீசில் புகார்! ரீல்ஸில் பதில்!!

schedule
2026-04-08 | 15:10h
update
2026-04-08 | 15:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: DMK Candidate Sivasankar Files Police Complaint Against Kunnam IJK Candidate Saranya! A Reply on Reels!!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சருமான சிவசங்கர் இன்று மதியம் குன்னம் போலீஸ் ஸ்டேசனில இன்ஸ்பெக்டர் கண்ணனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தெரிவித்துள்ளதாவது:

நான், தமிழ்நாடு அரசின் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சராக உள்ளேன். எனது அரசியல் வாழ்வை 1978-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருச்சியில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்றதில் இருந்து தொடங்கினேன். 1996 முதல் 2001 வரை நான் பெரம்பலூர் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவராக பதவி வகித்தேன். பின்பு நான் 2006 வரை பெரம்பலூர் மாவட்ட பஞ்சாயத்தின் உறுப்பினராக பதிவி வகித்தேன். பின்னர் நான் 2006 ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபைக்கு ஆண்டிமடம் சட்டமன்ற தொகுதியின் மூலம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். பின்னர் 2011 ல் குன்னம் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் 2021 ல் குன்னம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 6,329 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். தற்பொழுது, தமிழக அரசின் போக்குவரத்து மற்றும் மின்சாரதுறை அமைச்சராக பொறுப்பில் உள்ளேன். இதனால் எனக்கு சமூகத்தில் பெரும் மதிப்பும் நற்பெயரும் உள்ளது.

இந்நிலையில் என் நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் விதமாக குன்னம் சட்டமன்ற தொகுதி IJK வேட்பாளர் சரண்யா அன்பழகன் பல்வேறு சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது https://www.facebook.com/share/r/18AUPvf7ku/ அதில் எனது கட்சி சட்டமன்ற தொகுதியில் போதை பொருட்கள் தாராளமாக புழங்கவிட்டு தொகுதி மக்களை உங்கள் கட்சிக்காரர் சீரழிக்கிறார்கள் என்றும், அனிதாவை கொலை செய்துவிட்டு அனிதாவின் அண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரை ஏன் கொடுமைப்படுத்துகிறீர்கள் என்று என்னை பார்த்து கேள்வி கேட்பதாக வீடியோவில் உள்ளது.

மேற்படி வீடியோவில் உள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானது மற்றும் பொய்யான சங்கதிகள் ஆகும். மேற்படி சங்கதிகள் பொய்யானது என்று நன்கு தெரிந்தும் என் பெயருக்கும், புகழுக்கும் கலங்கம் விளைவிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் வேண்டுமென்றே IJK வேட்பாளர் சரண்யா கூறப்பட்டு அது பல்வேறு சமூக வளைதளங்களில் வெகுவாக பரவி எனது மதிப்பிற்கும், மரியாதைக்கும், புகழுக்கும் இழுக்கு ஏற்படுத்தியுள்ளது. மேற்படி, சரண்யா அன்பழகன் கூறிய கூற்றுகள் அனைத்தும் எந்த சாட்சிகளும் ஆவணங்களும் இல்லாமல் உண்மைக்கு புறம்பான அவதூறான சங்கதிகள் ஆகும். மேற்படி, வீடியோவை பார்த்த பல்வேறு நபர்கள் எனது கட்சிக்காரர்கள் என்னை தொடர்புகொண்டு இது சம்மந்தமாக விசாரிக்க இதனால் எனக்கு மனஉலைச்சலும், இன்னலும், கஷ்டமும் ஏற்பட்டது. மேற்படி சரண்யா அன்பழகன் செயல் BNS சட்ட பிரிவு 356 ன் படி தண்டிக்கப்படவேண்டிய குற்ற செயலாகும். IT Act 2000 ன் படியும் குற்ற செயலாகும் என அந்த புகாரில் தெரவித்துள்ளார்.

Advertisement

பின்னர், குன்னத்தில் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தாவது:
நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி உயிரை மாய்த்துக் கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு அமைச்சரே காரணம் என்று சரண்யா அன்பழகன் சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டியுள்ளார். அனிதாவின் குடும்பத்திற்குத் தான் என்றும் துணையாக இருந்ததாகவும், அரசியல் லாபத்திற்காக இத்தகைய அபாண்டமான பொய்களைப் பரப்புவது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.

மேலும் வேட்பாளர் சரண்யா தொகுதிப் பிரச்சனைகளைப் பேசாமல், தன்னைப்பற்றி அவதூறு பரப்புவதிலும் ரீல்ஸ் போடுவதிலும் அதிக கவனம் செலுத்துவதாகவும், தவறான தகவல்களைப் பரப்புவதைத் தடுக்கும் வகையில், அவர் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அரசியலுக்குப் புதியவரான சரண்யா, மற்றவர்களின் தூண்டுதலின் பேரில் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார். அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காவிட்டால், நீதிமன்றம் மூலம் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்தார்.

நான் 1996 முதல் உள்ளாட்சிப் பிரதிநிதியாகவும், பலமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவன் என்றும், முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி தொகுதி மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலில் நாகரிகமான விவாதங்கள் இருக்க வேண்டுமே தவிர, இத்தகைய தரம் தாழ்ந்த விமர்சனங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றார். மேலும், சென்னையில் இருந்து வந்துள்ள ஐடி டீம் ( புரோமோசன் டீம் ) ஆலோசனைப்படி தவறான தகவல்களை பரப்பி வருகிறார், என தெரிவித்தார்.

குன்னம் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக நான் போட்டியிடுவது நீங்கள் எல்லாம் அறிந்தது. எதிர்த்துப் போட்டியிடுகின்ற இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் திருமதி சரண்யா அன்பழகன் என்பவர், தொடர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.

பொதுமக்களைச் சந்திப்பதைத் தவிர்த்து, இது போன்ற ரீல்ஸ் வெளியிடுகின்ற பணியைத் தான் செய்து வருகிறார். அது எங்களுக்கு வருத்தமில்லை. ​அதேபோல என்னைக் குறித்துக் கேள்வி கேட்கிறார். என்னுடைய தொகுதிப் பணி குறித்துக் கேள்வி கேட்கும்போது அதற்குப் பதில் சொல்ல நான் தயாராக இருக்கிறேன். ஆனால், அபாண்டமாகச் சில செய்திகளைப் பரப்பி வருகிறார். ​நீட் தேர்வை எதிர்த்து மனமுடைந்து குழுமூர் மாணவி அன்புச்சகோதரி அனிதா தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டது தமிழ்நாடு முழுவதும் அறிந்த செய்தி. அந்த நேரத்தில் அந்த குடும்பத்தினர் எவ்வளவு துன்பப்பட்டார்கள், வேதனைப்பட்டார்கள், அந்த நேரத்தில் நான் அவர்களுக்கு எப்படி உறுதுணையாக இருந்தேன் என்பது எல்லோரும் அறிந்த செய்தி. ஆனால் அவர் ஐ.ஜே.கே வேட்பாளராகப் போட்டியிடுகின்ற சரண்யா அன்பழகன் அவர்கள், ‘அனிதாவைக் கொலை செய்தீர்கள், அனிதாவைக் கொலை செய்துவிட்டு நீங்கள் இப்பொழுது ஓட்டு கேட்க வருகிறீர்கள்’ என்று ஒரு வீடியோவை வெளியிட்டார்.

​நான் 2 நாட்கள் அமைதியாக இருந்தேன். ஏனென்றால் அவர் அரசியலுக்குப் புதியவர். ஆனால் அறிந்தோ அறியாமலோ இது போன்ற பிழைகளைச் செய்கிறார் என்று இருந்தேன். இப்போது அடுத்த ஒரு வீடியோ வெளியிடுகிறார். ‘இந்தப் பகுதியிலே போதைப்பொருட்கள் நடமாடுகிறது, அது இளைஞர்கள் எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள், அது கண்டும் காணாமல் இருக்கிறேன்’ என்றார். அடுத்து மீண்டும் அனிதா குடும்பத்தைச் சம்பந்தப்படுத்தி, ‘அனிதாவின் மரணத்திற்குச் காரணமாக இருந்தீர்கள், இப்போது அனிதா குடும்பத்தைச் சித்திரவதை செய்கிறீர்கள், கொடுமைப்படுத்துகிறீர்கள்’ என்றெல்லாம் செய்தி வெளியிடுகிறார்.

​ ஒரு அடிப்படை நாகரிகம் கூட இல்லாமல், அரசியல் அறிவு இல்லாமல், தேவையற்ற தனிமனிதத் தாக்குதலில் இறங்குவது என்பது தவறானது. எனவே அதனை நான் சட்டப்படி அணுக விரும்புகிறேன். அதனால் அவர் மீது குற்ற நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறையிடம் மனு அளித்திருக்கிறேன். அவர் வேண்டுமானால் இதை விளையாட்டாக நினைக்கலாம். அவர் பின்னாடி இருந்து இயக்குபவர்கள், சென்னையிலிருந்து வந்திருக்கின்ற ஊடக ஏஜென்சிகளாக இருப்பவர்கள் கொடுக்கின்ற ஆலோசனையை ஏற்று, அதனுடைய சாதக பாதகம் தெரியாமல் அவர் பேசிக்கொண்டிருக்கிறார்.

​இது மிகுந்த சட்டரீதியாக அணுகும்போது அவர் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஒரு பெண்ணாக இருக்கிறார், ஒரு சகோதரி என்ற முறையில் நானும் இரண்டு நாட்கள் பொறுமையாக இருந்தேன். ஆனால் அவர் மீண்டும் மீண்டும் இதையே தவறு செய்து வருகின்ற நேரத்தில், திட்டமிட்டு அவர் செய்கிறாரோ என்கின்ற சந்தேகம் எழுகிறது. தேர்தலிலே வெற்றி வாய்ப்பு அவர்களுக்கு மிகக் குறைவு என்பதை உணர்ந்திருக்கின்ற காரணத்தினால், தவறான குற்றச்சாட்டுகளைச் சொல்வது ஒருபுறம், தேவையில்லாத இந்த அபாண்ட குற்றச்சாட்டுகளைச் சொல்லி இதன் மூலம் சட்டம் ஒழுங்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுத்தி அதிலே ஏதாவது லாபம் பார்க்கலாமா என்று நினைக்கிறாரோ என்று சந்தேகமாக இருக்கிறது.

​எனவே, இதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும். நான் புதிதாக அரசியலுக்கு வந்தவன் அல்ல. 96-லேயே மாவட்ட ஊராட்சி உறுப்பினராகத் தேர்வு பெற்று பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராகப் பணியாற்றியவன். அதற்குப் பிறகு அரியலூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினராகப் பணியாற்றியவன். 2006-ல் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர், 2011-ல் குன்னம் சட்டமன்ற உறுப்பினர், மீண்டும் 2021 குன்னம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அமைச்சர் பொறுப்பளிக்கப்பட்டு, மிகக் கடமையுணர்வோடு இந்தத் தொகுதிக்கு பணியாற்றி இன்றைக்கு மக்களை நான் சந்திக்க வந்திருக்கிறேன்.

அவர் செய்யக்கூடிய ‘நான் இதைச் செய்வேன், அதைச் செய்வேன்’ என்று சொல்லி வாக்கு கேட்டால் தவறில்லை. ஆனால், தனிப்பட்ட முறையில், உண்மைக்குச் சிறிதும் பொருத்தமில்லாத செய்திகளை, மிக மிக பொய்யான செய்திகளைச் சொல்லி இந்தத் தனிமனிதத் தாக்குதல் நடத்துவது என்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. வேண்டுமானால் நான் இன்னும் வழக்கறிஞர்களைக் கலந்து ஆலோசித்து நீதிமன்றத்தையும் அணுகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. பிறகு அவர் காலத்திற்கெல்லாம் நீதிமன்றத்திற்கு அலையக்கூடிய சூழல் வரும். எனவே இதை வெளியிட்டது தவறு, நான் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று சொன்னால் நான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருப்பேன். இல்லை என்றால் மிகக் கடுமையான விளைவுகளைச் சட்டரீதியாக அவர் சந்திக்க வேண்டி வரும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

மேலும், திமுக சார்பில் தேஜ கூட்டணியின் ஐஜேகே வேட்பாளர் சரண்யா கேள்விகளை கேட்டு வெளியிட்ட வீடியோவிற்கு ஆதாரங்களுடன் முழுவிளக்கமாக திமுகவினர் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர். தற்போது குன்னம் தொகுதியில் சமூக வலைத்தளங்களில் வீடியோ போர் நடந்து வருகிறது.

இந்த புகார் குறித்து ஐஜேகே தரப்பில் எவ்வித விளக்கமோ, பதிலோ அளிக்கமால் மவுனம் காத்து வருகின்றனர்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.04.2026 - 15:50:12
Privacy-Data & cookie usage: