பெரம்பலூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஓவியத்திறன் மேம்பாட்டு பயிற்சி

schedule
2016-12-27 | 01:03h
update
2026-09-16 | 16:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

#Perambalur drawing Skill development training to government school students

பெரம்பலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளிடையே உள்ள படைப்பாற்றலை குறிப்பாக ஓவியத்திறமையை வெளிக்கொணரும் வகையில், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 8 வரை பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கிடையே கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதியன்று ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

இதில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 60 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், 46 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 39 அரசு மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 145 பள்ளிகளை சேர்ந்த 17,794 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 1,60,146 சதுர அடி பரப்பளவில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு, இயற்கை பேரிடர், மின்சார சேமிப்பு, தேச தலைவர்கள், இலக்கிய நீதிக் கதைகள், நுகர்வோர் விழிப்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு,

Advertisement

பெரம்பலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்கள், புவி வெப்பமயமாதல், வரலாற்றுச் சுவடுகள், பாரம்பரிய கலைகள், கல்வியின் முக்கியத்துவம், வளரிளம் பருவம், தூய்மை பாரதம், நிலத்தடி நீர் சேமிப்பு, மாற்று எரிசக்தி, வனவிலங்கு பாதுகாப்பு, தண்ணீர் சேமிப்பும் எதிர்காலமும், சாலை பாதுகாப்பு, ரத்ததானம், தேசிய சின்னங்கள், அறிவியல் விஞ்ஞானிகள், இயற்கை காட்சிகள், கவிஞர்கள், சமூக ஒற்றுமை, தலை கவசம் உயிர் கவசம், தன் சுகாதாரம் பேணல் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் ஓவியங்களை வரைந்தனர்.

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் முதல் 3 இடங்களைப் பிடித்த 435 மாணவ மாணவிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களின் ஓவியத் திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று ஓவியத்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.

இம்முகாமினை மாவட்ட கல்வி அலுவலர் (பொ) சுகுமாரன் தொடங்கி வைத்தார். இப்பயிற்சி முகாமில் சென்னை அரசு நுண்கலைக் கல்லூரிச் சேர்ந்த பேராசிரியர்கள், முன்னாள் ஓவியக் கல்லூரி மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டு இந்த மாணவ மாணவிகளுக்கு களிமண் ஓவியம், சிற்பம் வடித்தல், ராஜஸ்தான் ஓவியம், தஞ்சாவூர் ஓவியம், சுடுமண் ஓவியம், பேப்பர் டிசைனிங் உள்ளிட்ட பல்வேறு வகையான ஓவியங்களை வரைவதற்கான தொழில்நுட்பங்களை மாணவ மாணவிகளுக்கு கற்பித்தனர்.

மேலும், இன்று முதல் 26.12.2016 முதல் 30.12.2016 வரை பெரம்பலூர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் இம்முகாமில் சிறப்பாக ஓவியங்களை வரையும் சுமார் 50 மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து சென்னை மற்றும் கும்பகோணத்தில் உள்ள அரசு நுண்கலை கல்லூரியில் பயிற்சி வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இம்முகாமில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர்கள் பிரேம்குமார், மணிவண்ணன், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கோபால், இம்முகாம் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.09.2026 - 16:37:26
Privacy-Data & cookie usage: