Perambalur: Electricity Board issues warning regarding the prevention of electrical accidents during the Northeast monsoon!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி, பெரம்பலூர் மாவட்ட மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பு;
சூறைக் காற்றினால் மின் பாதையில் மின் கம்பி அறுந்து கிடந்தால், பொது மக்கள் யாரும் அதனைத் தொடாமலும் அருகில் செல்லாமலும் உடனடியாக அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். மின் கம்பம் பழுது அல்லது சாய்ந்தாலோ மின் கம்பியில் தொய்வு இருந்தாலோ பொதுமக்கள் சேவை மையமான ‘மின்னகத்தை’ 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள் மற்றும் மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க கூடாது; வீட்டின் மின் சுவிட்சுகளை ‘ஆன்’ செய்யும் போது கவனத்துடன் இயக்க வேண்டும்.
வீட்டின் உள்புற சுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்க கூடாது மற்றும் வீடுகள், கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். நீரில் நனைந்த அல்லது ஈரப்பதமான மின்சாதனங்களை (பேன், லைட் உள்பட) மின்சாரம் வந்தவுடன் இயக்கக் கூடாது. மின்அளவி (Meter) பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் அதன் அருகில் செல்வதையோ அல்லது மின்சாதனங்களைப் பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும். வீட்டில் மின்சாரம் இல்லையென்றால், அருகில் இருந்து தாங்களாகவே ஒயர் மூலம் மின்சாரம் எடுக்கக் கூடாது.
அறுந்து கிடக்கும் மின்கம்பிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் (Transformers) இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மின்கம்பிகளில் துணிகளை உலர்த்துவது கூடாது. சாலைகளிலும் தெருக்களிலும் மின் கம்பங்கள் மற்றும் மின் சாதனங்களுக்கு அருகே தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் நடப்பதோ, ஓடுவதோ, விளையாடுவதோ மற்றும் வாகனத்தில் செல்வதோ தவிர்க்கப்பட வேண்டும். தாழ்வாகத் தொங்கிக் கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும்.
மின்கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் ஸ்டே (Stay) கம்பிகளிலோ கால்நடைகளைக் கட்டி வைக்க வேண்டாம்.
மின் துறை சாராத நபர்கள் எவரும் மின் தடையை சரி செய்யும் பொருட்டு மின் கம்பத்திலோ அல்லது மின் மாற்றியிலோ தன்னிச்சையாகப் பணி செய்யக் கூடாது. மின் தடை ஏற்பட்டால் அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் தகவல் தெரிவித்து, மின் வாரிய பணியாளர்கள் மூலமாக மட்டுமே சரிசெய்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் Earth Leakage Circuit Breaker (ELCB) பொருத்துவதன் மூலம் மின்கசிவால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கலாம். மேற்கண்ட வழிமுறைகளை பருவ மழைக் காலங்களில் பொதுமக்கள் அனைவரும் தவறாது எச்சரிக்கையுடன் பின்பற்றி செயல்பட்டு மின் விபத்துகளை தவிர்க்குமாறு தெரிவித்துள்ளார்.