Perambalur: Extension of time to register child’s name on birth certificate: Collector’s information!
பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை, பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி. குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு இறப்பு பதிவு சட்டம், 1969 வழி வகை செய்கிறது. பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகும். பிறப்பு சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் பெற, பாஸ்போர்ட், விசா உரிமம், அயல்நாட்டில் குடியுரிமை பெற இன்றியமையாத ஆவணமாக உள்ளது.
ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்மந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமுமின்றி பெயர் பதிவு செய்திடலாம். 12 மாதங்களுக்குப் பின் பதினைந்து வருடங்களுக்குள் ரூ.200/- தாமதக் கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரினை பதிவு செய்திடலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய இயலாது.
இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறிவுரைபடி, 01.01.2000-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும், 01.01.2000 -க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும், குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்றிதழ் பெற 26.09.2026 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள நகராட்சி, மாநகராட்சி அல்லது சம்மந்தப்பட்ட வட்டாட்சியர், பேரூராட்சி அலுவலரிடம் உரிய ஆதாரங்களுடன் (கல்வி சான்று. ஓட்டுநர் உரிமம்) விண்ணப்பிக்கலாம்.
கால வரையறை முடிவுற்ற பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்வதற்காக ஏற்கனவே 01.01.2015 முதல் 31.12.2019 மற்றும் 31.12.2024 வரை என இரண்டு முறை கால அவகாச நீட்டிப்பு செய்து வழங்கப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக கால அவகாச நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான கால அவகாச நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்கிட இயலாது என இந்திய தலைமை பிறப்பு-இறப்பு பதிவாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அரிய வாய்பிபினை பயன்படுத்திக் கொண்டு பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் எனவும், அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளும் தங்களுடைய பிறப்பு நிகழ்வு பதிவு செய்யப்பட்டிருப்பின் அந்த பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதனை உறுதி செய்யவும், பெயர் பதிவு செய்யப்படாமல் இருப்பின் அந்த பிறப்பு சான்றிதழ் எந்த பதிவுப்பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த பகுதியின் பிறப்பு இறப்பு பதிவாளர் அல்லது அந்த பகுதிக்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகி பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரி முதல்வர்கள் தங்கள் நிறுவனத்தில் பயிலும் மாணவ மாணவிகளின் பெயரில்லாத பிறப்புச் சான்றிதழில் 26.09.2026 க்குள் பெயரினை பதிவு செய்து பிறப்புச்சான்றிதழ் பெற்றுக்கொள்ள அறிவுரை வழங்குமாறு கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.