பெரம்பலூர்: உழவர் சந்தை வெள்ளி விழா: கேக் வெட்டி கொண்டாட்டம்; எம்.எல்.ஏ பிரபாகரன் காய்கனி தொகுப்புகளை வழங்கினார்!

schedule
2025-05-07 | 08:31h
update
2025-05-07 | 08:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Farmers Market Silver Jubilee: Cake cutting celebration; MLA Prabhakaran presented vegetable packages!

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில், கலைஞர் கருணாநிதி ஆட்சியின் போது, உழவர் சந்தை தொடங்கப்பட்டு 25 வது ஆண்டுகள் நிறைவடைந்து வெள்ளி விழா கொண்டாட்டம் இன்று காலை உழவர் சந்தையில் நடந்தது. அதில் கலந்து கொண்ட பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் உழவர் சந்தையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தும், 4 விவசாயிகளுக்கு உழவர் சந்தை அடையாள அட்டை அட்டையினையும், காய்கனி வாங்க வருகை தந்த 50 நுகர்வோர்களுக்கு 1 கிலோ காய் தொகுப்பினை இலவசமாகவும் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரால், 1999 ஆம் ஆண்டு காய்கறிகள், பழங்கள் பயிரிடும் விவசாயிகள் அவர்கள் பயிர் செய்தவற்றை அவர்களே இடைத் தரகர்கள் யாருமின்றி நேரடியாக விற்பனை செய்வதற்காக தமிழகத்தின் பல இடங்களில் உழவர் சந்தைகள் அமைக்க ஆணையிட்டார்கள். அதன்படி, கடந்த 2000-ம் ஆண்டு மே மாதம் 7-ந் தேதி பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட வடக்கு மாதவி சாலையில் தமிழ் நாட்டின் 42 வது உழவர் சந்தையாக பெரம்பலூர் உழவர் சந்தை தொடங்கப்பட்டது.

Advertisement

மேலும், 50 கடைகளுடன் துவங்கப்பட்ட இந்த உழவர் சந்தையானது தற்பொழுது 74 கடைகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பெரம்பலூர் உழவர் சந்தையானது 2025-ம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதியுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்து 26-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. தினசரி காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படும் உழவர் சந்தையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள் மற்றும் பழங்களை நேரடியாக உழவர் சந்தையில் விற்பனை செய்து பயன் அடைகிறார்கள்.

பெரம்பலூர் உழவர் சந்தையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 7.10 லட்சம் மதிப்புள்ள 14 மெ.டன் அளவு காய்கறி மற்றும் பழங்கள் பரிவர்த்தனை நடைபெறுகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 75 விவசாயிகளும் 2,950 நுகர்வோர்களும் பயன் அடைந்து வருகிறார்கள். பெரம்பலூர் உழவர் சந்தையில் ஒவ்வொரு நாளும் விற்பனை செய்யப்பட்டது போக மீதம் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை வீணாகாமல் சேமித்து வைக்க 5 மெ.டன் அளவிளான சூரிய ஒளியில் இயங்கும் குளிர்பதன சேமிப்பு கிடங்கும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு வரும் விவசாயிகளுக்கு இலவசமாக தராசு, குடிதண்ணீர், மற்றும் கழிப்பறை வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இதனை விவசாய பெருமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், குறைந்த விலையில் தரமாகவும் தினந்தோறும் புதிய காய்கனி பழங்கள் உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படுவதால் நுகர்வோர்கள் வாங்கி பயன்பெறுமாறு தெரிவித்தார்.

முன்னதாக 25 வது வெள்ளி விழாவை முன்னிட்டு, உழவர் சந்தையில் மரக்கன்றுகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் நட்டு வைத்தும், உழவர் சந்தையில் வியாபாரம் செய்து வரும் விவசாயிகளிடமும், காய்கனி வாங்க வருகை தந்து நுகர்வோர்களிடமும் உழவர் சந்தையின் செயல்பாடுகள், சேவைகள் குறித்து கலந்து உரையாடினார். தொடர்ந்து, தோட்டக்கலைத்துறை சார்பில் உழவர் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள டான் ஹோடா மூலம் அரசு தோட்டப் பண்ணையில், உற்பத்தி செய்யப்பட்ட மா ஒட்டு கன்றுகள், கொய்யா, சப்போட்டா, மாதுளை, எலுமிச்சை, மல்லிகை உள்ளிட்ட செடிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டார்.

பின்னர் நடைபெற்ற விழாவில், வெள்ளி விழா கேக் வெட்டி விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களுக்கு வழங்கினார். காய்கனி விற்பனை செய்யும் 4 விவசாயிகளுக்குப் பிரத்யேகமான அடையாள அட்டையும், 50 நுகர்வோர்களுக்கு 1 கிலோ காய்கறி தொகுப்பினை இலவசமாக வழங்கினார். திமுக பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் அரசு வழக்கறிஞருமான என். ராஜேந்திரன், வேளாண்மை துறை அலுவலர்கள், பொதுமக்கள், நுகர்வோர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 02:16:15
Privacy-Data & cookie usage: