பெரம்பலூர்: சிறுவாச்சூர் வாரந்திர ஆட்டுச்சந்தையை பகலில் நடத்த விவசாயிகள், குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை!

schedule
2026-06-25 | 14:41h
update
2026-06-25 | 14:41h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Farmers request at the grievance redressal meeting that the weekly goat market in Siruvachur be held during the day.

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஷரண்யா தலைமையில் நடந்தது. வேளாண்மை இணை இயக்குநர் செ.பாபு வரவேற்று பேசுகையில் பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மி.மீ.. நடப்பு ஜூன் மாதம் பெய்ய வேண்டிய மழையளவு 32 மி.மீ. தற்போது வரை பெய்த மழையளவு 78.45 மி.மீ., ஆகும். விதை இருப்பு பொறுத்தவரை விவசாயிகள் பயன்பாட்டிற்காக 53.947 மெட்ரிக் டன்கள் நெல், 5.142 மெ.டன்கள் சிறுதானியங்களும், 3.710 மெட்ரிக் டன்கள் பயறு வகைகளும், 0.665 மெ.டன்கள் எண்ணெய்வித்துக்களும் இருப்பு உள்ளதாக தெரிவித்தார்.

தோட்டக்கலை துறையின் மூலமாக தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் பரப்பு அதிகரித்தல், சிப்பம் கட்டும் அறை அமைக்கும் பணிகளும், மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் மாடித்தோட்ட தளைகள், பழச்செடிகள் தொகுப்புகள் வழங்குதல், பண்ணை கருவிகள் மற்றும் உபகரணங்கள் விநியோகம் மற்றும் காளான் குடில் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement

வேளாண் பொறியியல் துறை மூலமாக உழுவை வாடகை திட்டம், வேளாண்மை இயந்திரமயமாக்கல் உபஇயக்கம் – தனிநபர் விவசாயிகளுக்கு மானியம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டங்களில் உருவாக்கப்பட்ட அமைப்புகளை தூர்வாருதல், மின்மோட்டார் மாற்றிக் கொள்ள மானியம் வழங்குதல் போன்ற பணிகளும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயிர்கடன் தள்ளுபடியினை மறுபரிசீலனை செய்ய கேட்டுக் கொண்டனர். ராமராஜன்: விசுவக்குடி நீர்தேக்கத்திற்கு கட்டுமான பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும், விசுவநாதன்: சின்ன வெங்காய விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியம் வழங்க வேண்டுமெனவும், கரும்பு உற்பத்தியை அதிகரித்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாலகிருஷ்ணன்: சிறுகன்பூர் மற்றும் கொளக்காநத்தம் இடையே உள்ள காட்டாற்று பாலம் சீரமைக்கும் பணி விரைவில் முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மக்காச்சோளத்திற்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டுமெனவும், மணி: சின்ன வெங்காயத்திற்கான கொள்முதல் விலையை அதிகரித்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், ஜெயராமன்: அனைத்து அரசு பள்ளி, கல்லூரிகளிலும் தண்ணீர் மற்றும் கழிவறை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.

முத்து: பாலிற்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டுமெனவும், மாட்டுத்தீவனம் மானியத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், சத்தியசீலன்: நேரடி நெல் கொள்முதல் நிலையம் அரசு கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தன்ராஜ்: மருதடி பகுதியில் சிசிடிவி கேமரா அமைக்கவும், தெருவிளக்கு சீர் செய்திட வேண்டுமெனவும், ராஜாசிதம்பரம்: நபார்டு திட்டப்பணிகளை விரைவில் முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், நாரணமங்கலம் மேம்பால பகுதியில் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டுமெனவும்,

ராஜா: தெரணியில் உள்ள பை ஏரி வரத்து வாய்க்கால் சீரமைத்து நீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கண்ணபிரான் பெரம்பலூர் நகரில் உள்ள நீர்வழி ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஏரிகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பூபதி: மருதடி பகுதியில் உள்ள இடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் அமைத்திட வேண்டுமெனவும், சிறுவாச்சூரில் நடைபெறும் வாராந்திர ஆட்டுச்சந்தை பகலில் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், செல்லதுரை: விவசாய நிலங்கள் குரங்குகளால் பாதிப்படைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் விளைநிலங்களில் குரங்குகளால் ஏற்படும் பிரச்சினைக்கு வனத்துறையிடம் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வனப்பகுதிகளில் பழ மரங்கள் வளர்ப்பதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஷரண்யா தெரிவித்தார். இதில் விவசாயிகள் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 14:50:41
Privacy-Data & cookie usage: