Perambalur: 4 arrested including a BJP functionary who fled after murdering the mother of a woman in Pudukkottai for refusing to consent to their marriage.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நெடுவாசல் மேற்கு பகுதியில் உள்ள வடக்கிக்காடு கிராமத்தில் இன்று அதிகாலை 03.30 மணியளவில், சுரேஷ் என்பவரின் முதல் மனைவி காளியம்மாள்(37), என்பவர் குடும்பத் தகராறில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட போலீசார் அளித்த தகவலின் பேரில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியில் சென்னை நோக்கி சென்ற TN 19 BR 1116 என்ற பதிவெண் கொண்ட இனோவா காரில் இருந்த செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்த விவின்(33), மற்றும் அவனது கூட்டாளிகளான அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(37), விக்னேஸ்வரன்(17), தினேஷ்(18), ஆகிய நான்கு பேரையும், எஸ்.எஸ்.ஐ., அன்பழகன் தலைமையிலான நெடுஞ்சாலை ரோந்து போலீசார் உதவியுடன் மங்கல மேடு போலீசார் சினிமா பாணியில் சுற்றி வளைத்து கைது செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள பஞ்சர் கடை நடத்தி வரும் விவின், பாரதிய ஜனதா கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட அமைப்பு சாரா தொழில் பிரிவு மாவட்டத் தலைவரும், சுரேஷின் 2வது மனைவி விஜயலட்சுமியின் சகோதரர் என்பதும், கொலை செய்யப்பட்ட காளியம்மாளின் மகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பிகாம் படித்து வரும் கல்லூரி மாணவியுமான சுப தர்ஷினி(19), காதலரும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுபதர்ஷினியும்- விவினும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், இவர்களது திருமணத்திற்கு காளியம்மாள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இது தொடர்பாக நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நெடுவாசல் பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது ஏற்பட்ட தகராறில், விவின் உள்ளிட்ட அவனது கூட்டாளிகளால் காளியம்மாள் வெட்டி கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது.