Perambalur: Gold Chain Snatched from Elderly Woman Who Went to Hospital to Buy Medicines!
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய்க்கான மாத்திரை வாங்க சென்ற மூதாட்டியிடம் முதியோர் உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறி தங்கசெயினை அபகரித்து சென்ற டிப் – டாப் ஆசாமியை டவுன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மனைவி லட்சுமி (76). இன்று காலை பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவனையில், சர்க்கரை நோய்க்கான மாதாந்திர மருந்து வாங்குவதற்காக வரிசையில் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு கருப்பு பேண்ட் வெள்ளை சட்டை அணிந்து வந்த ஆசாமி உங்களுக்கு முதியோர் உதவித்தொகை வாங்கித் தருகிறேன் அதற்கு கையெழுத்து போடுங்கள் என்று கூறி வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கியுள்ளான். பின்னர். கழுத்தில் தங்க நகை அணிந்து இருந்தால் முதியோர் உதவித்தொகை அதிகாரிகள் கொடுக்க மாட்டார்கள், தங்க செயினை கழட்டி பர்சில் வைத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். லட்சுமி தனது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பர்சில் வைத்த உடன் போட்டோ எடுத்த ஆசாமி பர்சில் இருந்த தங்க சங்கிலியை மூதாட்டியிடம் கொடுக்காமல் அபகரித்து கொண்டு தலைமறைவானார். இது குறித்து மூதாட்டி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் டவுன் போலீசார், அவர் தெரிவித்த அங்க அடையாளங்களை வைத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து மோசடி பேர்வழியை அடையாளம் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.