Perambalur: Higher Education Mentoring Program for +2 Passed Students : Over 2,200 Participants!

பெரம்பலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (09.05.2024) தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நான்முதல்வன் திட்டத்தின் கீழ் இந்த கல்லூரிக்கனவு நிகழ்ச்சி இரண்டாம் முறை நடைபெறுகின்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் நான் முதல்வன்திட்டத்தின் மூலம் இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 21,061 பள்ளி மாணவ மாணவிகளும், 2,731 பொறியியல் மாணவ மாணவிகளும், 7,900 கலை அறிவியல் படித்த மாணவ மாணவிகளும் என மொத்தம் 31,692 மாணாக்கர்கள் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டிற்கான கல்லூரிக்கனவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 42 அரசு மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த சமார் 2200க்கும் மேற்பட்ட மாணவ மணாவிகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வெழுதி வெற்றி பெற்று பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப்பணியாளராக பல்வேறு துறைகளில் பொறுப்பேற்றுள்ளவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மரக்கன்றுககளை வழங்கி வாழ்த்தினார்.

அரசுப்பணியில் சேர்ந்துள்ளவர்கள் தங்கள் அனுபவங்களை, போட்டித்தேர்வுகளை எதிர்கொண்ட விதத்தை உரையாற்றி அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கமளித்தார்கள்.

மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு வரவேற்றார். சார் ஆட்சியர் சு.கோகுல் போட்டித் தேர்வுகள் எதற்கு? என்ற தலைப்பில் மாணாக்கர்களிடையே உரையாற்றினார்.

இதில் கலந்து கொண்ட கலெக்டர் தெரிவித்ததாவது:

பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவ மாணவிகள் உயர்கல்வியில் என்ன படிக்கலாம் என்பது குறித்து கல்வியியல் வல்லுநர்களின் அறிவுரைகள், வழிகாட்டுதல்கள் என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் சிறப்பு நிகழ்ச்சி இந்த கல்லூரிக்கனவு நிகழ்ச்சியாகும்.

பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த அனைத்து மாணவர்களும் உயர் கல்வியில் ஏதாவது ஒரு துறையை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்பதே, எங்களின், உங்கள் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகும். நீங்கள் என்னென்ன படிக்கலாம் எந்தெந்த துறையை தேர்வு செய்யலாம் என்னென்ன படித்தால் எங்கு வேலை கிடைக்கும் என்பது சம்பந்தமான அனைத்து தகவல்களையும் உங்களுக்கு இந்த நிகழ்ச்சியில் எடுத்துக் கூற இருக்கிறார்கள். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கு பொருளாதாரம் எந்த விதத்திலும் ஒரு தடையாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது.

அதன் அடிப்படையில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படுவதைப் போலவே, மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் என்கின்ற திட்டம் இந்த ஆண்டு அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கல்விக்காக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதனை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு கல்லூரி அல்லாமல் தனியார் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு வங்கிகளின் மூலம் கல்வி கடன் வழங்க சிறப்பு முகாம்கள் உள்ளிட்ட தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. எனவே நீங்கள் அனைவரும் தமிழக அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி சிறந்த நிலைக்கு வர வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் நோக்கம் அதுதான் மாவட்ட நிர்வாகத்தின் நோக்கமாகும்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கக்கூடிய மாணவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வராதவர்களிடமும், உங்கள் நண்பர்களிடமும் இந்த திட்டங்களை பற்றி எடுத்துக் கூற வேண்டும். நிச்சயமாக பொருளாதார சூழ்நிலை மாணவ, மாணவிகள் உயர் கல்வி பெறுவதற்கு ஒரு தடையாக இருக்கக் கூடாது அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் மாவட்ட நிர்வாகத்தை உடனடியாக அணுகலாம் அதற்கான உதவிகளை செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.

இங்கு உயர் கல்வியில் என்னென்ன படிப்புகள் உள்ளது, எந்த படிப்பிற்கு என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளது, உயர்கல்விக்கு கல்விக்கடன் எவ்வாறு பெற வேண்டும் என்பது குறித்து, அரசுத்துறைகள், பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்கள், வங்கிகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது, இந்த அரங்குகளை அனைவரும் பார்வையிட்டு பயன்பெற வேண்டும் இந்த நிகழ்ச்சியை நீங்கள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டு உயர் கல்வி பயின்று வாழ்க்கையில் சிறந்த நிலைக்கு வர வேண்டும் என வாழ்த்துகின்றேன். இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், உங்கள் எதிர்காலத்தை எப்படி தேர்ந்தெடுப்பது என்ற தலைப்பில் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக விரிவாக்கம் மற்றும் தொழில் துறை பேராசிரியர் பி.மஞ்சு, பொறியியல் படிப்புகள் குறித்து அரியலூரில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முதல்வர் பி.செந்தில்வேலன், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூடுதல் பதிவாளர் கே.இளங்கோவன், கலை பாடங்கள் குறித்து வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரி ஆங்கிலத்துறைத் தலைவர் ஜி.மூர்த்தி, தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி முதல்வர் என். வெற்றிவேலன் உரையாற்றினர்.

மேலும், அறிவில் பாடங்கள் குறித்து வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரி இயற்பியல் துறைத் தலைவர் பி.பாஸ்கரன், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழத கலை அறிவில் கல்லூரி வணிகவியல் துறைத் தலைவர் கே.நீலமேகம், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் அரசு மாதிரிப்பள்ளிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ராஜ. பாண்டியன் உரையாற்றினர்.

கத்தார் நாட்டில் தொழிலதிபராக இருக்கும் ரமேஷ் நல்லதம்பி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உரையாற்றினார். விழாவில் உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டது. பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கல்லூரிக்கனவு வழிகாட்டி கையேடுகளும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

முதன்மைக்கல்வி அலுவலர் எஸ்.மணிவண்ணன், திறன் மேம்பாட்டுத் துறை உதவி இயக்குநர் செல்வம், துணை காவல் கண்காணிப்பாளர் வளவன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர்கள் ந.சிவா, பாரதிவளவன் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் முதல்நிலை அலுவலர்கள், அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!