பெரம்பலூர்: கேள்விக்குறியாய் இருந்த உயர்கல்வி, அரசின் சலுகைகளால் எளிதாகி உள்ளது; வேப்பூர் அரசு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலெக்டர் பேச்சு!

schedule
2026-07-28 | 16:08h
update
2026-07-28 | 16:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Higher education, once a question mark, has become accessible thanks to government concessions; Collector speaks at the Vepur Government College convocation ceremony.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த 8வது பட்டமளிப்பு விழாவில் 363 மாணவிகளுக்கு கலெக்டர் ஷரண்யா பட்டங்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்த அவர் பேசியதாவது: பட்டம் பெற்ற மாணவியர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் இன்றைய தினம் பட்டம் பெறும் பல பேர் முதல் தலைமுறை பட்டதாரிகளாக இருப்பீர்கள். மாவட்டம் தோறும் உள்ள பல்வேறு கிராமப்புறங்களில் இருந்து வந்து பயின்று பட்டம் பெறுகின்ற நீங்கள் அனைவரும் வறுமை முதலான பல பிடிகளிலிருந்து மீண்டு வந்துள்ளீர்கள். உங்கள் பகுதியை உங்கள் ஊரினை இந்த சமுதாயத்தினை முன்னேற்றுவதற்கும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் கல்வி பெரும் துணையாய் இருக்கும். பெண்கள் அனைவரும் கல்வி கற்று இந்ததேசத்தை உயர்த்திட வேண்டும்.

முன்னொரு காலத்தில் உயர்கல்வி கேள்விக்குறியாய் இருந்தது. இன்று, அரசின் பல்வேறு சலுகைகள் உயர் கல்விக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது. பள்ளி தொடங்கி கல்லூரி வரை அரசின் திட்டங்களை நீங்கள் பயன்படுத்தி வருகின்றீர்கள். உங்களில் பலர் நாளைய அரசை நிர்வகிக்கும் ஆட்சியாளர்களாகவோ, அதிகாரிகளாகவோ வரக்கூடும். இதே கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற பலர் எதிர்காலத்தில் காவல்துறை, கல்வித்துறை, ஆட்சித்துறை எனப் பல துறைகளில் பணியாற்ற வாய்ப்புள்ளது. பட்டம் பெற்ற அனைவரும் வேலை வேண்டும் என்று நாட்களை நகர்த்தாமல், நீங்களே வேலை தருபவர்களாக மாற வேண்டும். பலருக்கு நீங்கள் வேலைவாய்ப்பை அளிக்கவேண்டும். ஒன்றுசெய், நன்று செய், அதுவும் இன்றே செய் என்ற வாக்கிற்கிணங்க பட்டம் பெற்ற இந்தநாளிலியே நீங்கள் முயற்சியில் இறங்க வேண்டும்.
இன்றைய நாளில் கலை மற்றும் அறிவியல் படிப்பில் பயில மாணவியர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
மாணவியர்கள் தாங்கள் தேடிப்போகும் துறை அவர்கள் விரும்பியதாக இருக்க வேண்டும். எண்ணங்களை மற்றவர்களிடம் இருந்து பெறாமல், அது உங்களிடமிருந்தே உருவாகவேண்டும். நீங்கள் செல்லும் பாதைகளில் பல்வேறு முட்செடிகள், கரடுமுரடுகள், தேக்க நிலைகள் வரலாம். அதனை துச்சமென எண்ணி வெற்றி நடைபோட வேண்டும். தானும் வளர்ந்து, தன்னைச் சார்ந்தவர்களையும் வளர்க்கும் ஒரு தென்னையின் வாழ்க்கையைப் போல உங்கள் வாழ்வு அமைய வேண்டும். அவ்வாறே நீங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும்.

Advertisement

கல்வி என்பது அறியாமையைப் போக்கக்கூடியது. அறிவினைத் தேடிச் செல்லக்கூடியது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் சொன்னதைப்போல் வெற்றி என்னும் கனவினை நீங்கள் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். செல்கின்ற பாதை நேர்வழியானதாக இருக்கிறதா என்று நீங்கள் உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். லட்சியங்ளை அடைய போராட வேண்டும். இயன்றவரை நீங்கள் கற்ற கல்வி பிறருக்குப் பயன்பட வேண்டும். பட்டம் பெறும் மாணவியர்கள் அனைவரும் குன்றின் மேலிட்ட விளக்காய் திகழ வேண்டும்.

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வணிகவியல், மேலாண்மையியல் முதலான பல துறைகளில் பட்டம் பெற்ற நீங்கள் இயன்றவரை அந்தந்த துறைகளின் வழியாகப் பயணிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களின் பிறப்பிடமாக இருக்கின்றன. தீய செயல்கள் தீமைகளை மட்டுமே தருகின்றன. நாம் கற்ற கல்வி நமக்கும் சமுதாயத்திற்கும் நல்லனவற்றையே தர வேண்டும். ஒரு போதும் தீயவற்றைத் தரக்கூடாது. மாணவியர்களாகிய நீங்கள் நேர்மறை சிந்தனைகளை மட்டும் வளர்த்துக்கொள்ள வேண்டும். எதிர் மறை சிந்தனைகளால் எந்தவித பயனும் இல்லை. நல்லனவற்றையே நினைத்துப் பேசி செயல்கள் மூலம் நிறைவேற்றி வந்தால் வாழ்க்கை மேம்படும். ஏதோ படித்தோம் பட்டம் பெற்றோம் என்றில்லாமல் நம்மாலான சிறு நன்மையை பெற்றோருக்கும், இந்த சமுதாயத்திற்கும் ஆற்ற நீங்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

குடும்பத்திலும், சமூகத்திலும் சில சட்ட திட்டங்கள் உள்ளன. அதனைப் பின்பற்றி நடத்தல் உங்களின் கடமையாகும். பொது வெளியில் நீங்கள் நடந்துகொள்ளும் நடத்தை தான் உங்களின் கல்வியாற்றலைத் தீர்மானிக்கிறது. சமுதாயத்தில் அன்றாடம் பெண்களுக்கு எதிராக நிகழும் குழந்தை திருமணம், பெண்களுக்கு கல்விதர மறுப்பது, பாலியல் வன்கொடுமை போன்ற பொதுப் பிரச்சனைகளில் உங்கள் தலையீடு இருக்க வேண்டும். மேலும், நீங்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சி பெற்று அரசு உயர் அலுவலராக வளர நான் உளமார வாழ்த்துகிறேன், என பேசினார்.

பின்னர், இன்று பட்டம் பெற்றுள்ள நாங்கள், எண்ணம், சொல் மற்றும் செயல் ஆகியவற்றால் சிறிதும் தவறின்றி, நேர்மையுடன் எங்கள் பணியின் கடமைகளை மேற்கொள்வோம் எனவும், எங்கள் பணியின் கண்ணியத்தையும், நேர்மையினையும் பாதுகாப்போம் எனவும் மேலும் நமது பல்கலைக்கழகத்தின் பெருமையினை நிலை நிறுத்துவோம் எனவும் உறுதியளிக்கிறோம். சமூக ஒழுங்கினையும், உடன் வாழ்வோரின் சமூக நலனையும் யர்த்துவோம் என்றும் நமது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் மதச் சார்பின்மையிணை வளர்ப்போம் என்றும் உறுதியளிக்கிறோம்.” என பட்டம் பெற்ற மாணவியர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதில், பல்கலைக்கழக பணியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.07.2026 - 16:32:10
Privacy-Data & cookie usage: