இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட குழு கூட்டம், தீரன் நகரில் உள்ள அலுவகத்தில் நடந்தது. அதில் கலந்து கொள்ள வந்த அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கலந்து கொள்ள வந்திருந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
டெல்டா பகுதி முழுவதுமே வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொண்டோம். பெரம்பலூரும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. குடிநீர் பிரச்சனை, மானாவாரி நிலப்பகுதி என்பதால் விவசாயம் பொய்த்துப் போயிருக்கிறது. மழைக்குறைவு, எப்போதுமே மழைக்குறைவு இந்தப் பகுதியில்.
வறுமை சூழ்ந்த, பல்வேறு பகுதிகளில் வறுமை சூழ்ந்த சூழல் இருக்கிறது. எனவே இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு, டெல்டா பகுதியை அறிவிக்கிற பொழுது, வறட்சி மாவட்டமாக அறிவிக்கிற பொழுது, பெரம்பலூர் மாவட்டத்தையும் வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
பெரம்பலூர் காவல் நிலையம் முன்பு கடந்த ஆக.11 அன்று அருணாசலம் டீ கடை சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் ஏற்பட்டு 16 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள். 7 பேர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் கூறுகிறது.
இழப்பீடுகளை கொஞ்சம் அதிகரித்துத் தர வேண்டும். இதுபோன்ற மக்கள் கூடுகிற இடங்களில் சிலிண்டர்கள் இருக்கிற இடம், தொழிற்சாலைகள், பணிமனைகள், தேனீர் கடைகள், பேருந்து நிலையங்கள் இங்கெல்லாம் அதிகபடியான சிலிண்டர்கள் இருக்கிற இடங்களில், மக்கள் புழங்குகிற பெரும் உணவகம், டீ கடைகளில், சிலிண்டர்கள் இருக்கிற இடங்களில் கூடுதல் கண்காணிப்பு தேவைப்படுகிறது. அரசு இதில் கூடுதல் கண்காணிப்பு செய்ய வேண்டும் என்றும்,
அதேபோன்று பெரம்பலூர் மாவட்டம் உட்கோட்டம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் சித்ரா காபி பார் அருகில் ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் கொடியேற்றுவதற்காக அனுமதி கேட்டிருக்கிறார்கள். ஏராளமான கேள்விகளை எழுப்பி, இதற்கெல்லாம் நீங்கள் பதில் கூறுங்கள் என்று சொல்லி காவலர்கள் அனுமதியை ரத்து செய்திருக்கிறார்கள். மிக மிக சாதாரணமானது, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், நடைபாதைக்கும் இடையூறு இல்லாமல், யாருடைய சொந்த நிலங்களும் இல்லாமல் தெருவோரங்களிலே கொடியேற்றுவது இயல்பு. தொழிலாளர்களுக்கு இருக்கிற உரிமை அது. இதனால் பெரிய இடையூறுகள் இல்லை, பெரிய சிரமங்கள் இல்லை. இதைக் காவல்துறை மறுபரிசீலனை செய்து தொழிலாளர்களுக்கு அந்த சங்கம் அமைக்கிற உரிமையும், கொடியேற்றுகிற உரிமையும் என்பது நீண்ட நெடுகாலமாக சட்ட உரிமையில் இருக்கிறது. அதை அனுமதிக்க வேண்டும், தடை விதிக்கக் கூடாது என்றும், முறைப்படி விண்ணப்பங்களில் ஏதாவது பிழை இருக்குமேயானால் அதை திருத்தித் தாருங்கள் என்று சொல்லலாமே தவிர, அந்த கொடியேற்றத்திற்கே அனுமதி மறுப்பது என்பது ஏற்புடையது அல்ல. இது தொழிலாளர்களின் உரிமை. எனவே காவல்துறை மறுபரிசீலனை செய்து அந்த கொடியேற்ற விழாவிற்கு அனுமதி அளிக்க வேண்டும். இது தொழிலாளர் பிரச்சனை என்றும்,
ஏற்கனவே பயிர்க்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், இதற்கு ஒன்றிய அரசு நிதி, நமக்குரிய நிதியைத் தர வேண்டும். அந்த நிதியை நாம் கேட்டும் பெற வேண்டும் என்றும், ஏற்கனவே பல நிதிகள் மாநிலத்திற்கு வரவேண்டிய நிதிகள் கிடப்பில் இருக்கிறது. பல நலத்திட்டங்கள் கிடப்பில் இருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும் தமிழக அரசு அழுத்தம்தர வேண்டும், மத்திய அரசும் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதியை கொடுக்க வேண்டும். எத்தகைய நலத்திட்டங்களோ, தொலைநோக்குத் திட்டங்களோ கிடப்பில் போடக்கூடாது, அதை நிறைவேற்ற வேண்டும் என்றும்,
குறிப்பாக மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள், அதை நிறைவேற்ற வேண்டும் என்றும், மேகமலை பழங்குடிகள், தொல்குடிகள், மலை சார்ந்து வாழ்கிற மக்கள் அவர்களின் உரிமை அது. நீதிமன்ற தீர்ப்பை நாம்திக்கிறோம். சட்டத்தின் ஆட்சி முறையில் நீதிமன்ற தீர்ப்பிற்கு மிக உயர்ந்த இடம் இருக்கிறது. ஆனால் நீதிமன்றம் எளிய மக்கள், ஏழைகள், தொல்குடிகள், பழங்குடிகள், அலைகுடிகள் இந்த வாழ்வின், வாழ்வின் கடைக்கோடியில் இருக்கிற அந்த எளிய மக்களின் நலன்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், வன விலங்குகளின் உயிரை விட மனித உயிர் மிக முக்கியமானது. வனம் சார்ந்து வாழ்கிற மக்களால் வனம் இதுவரைக்கும் சூறையாடப்பட்டதாக வரலாறே இல்லை. நாடு கடந்த நிறுவனங்கள் தான் வனங்களைச் சூறையாடுகிறது, மலைகளைச் சூறையாடுகிறது, நமது இயற்கையைச் சூறையாடுகிறது. அதற்கு கதவை திறந்து விடுகிற அரசு, மத்திய அரசு, மலை சார்ந்த இந்த தொன்மை தொல்குடிகளுக்கு…அருகில் இருக்க வேண்டும்; அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், மாநில அரசு உரிய மேல்முறையீடுகள், சட்டபூர்வமான மேல்முறையீடுகள் செய்து, மலைசார்ந்த அந்த மக்களின் வாழ்வை, வாழ்வாதாரங்களை பாதுகாக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் சார்பில் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
செப்டம்பர் 1 டெல்லியில் ஒரு பிரம்மாண்டமான பேரணியை நாங்கள் நடத்துகிறோம். மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட வேண்டும், பன்முகம் காக்கப்பட வேண்டும், சட்டத்தின் ஆட்சிமுறை பாதுகாக்கப்பட வேண்டும், நாடாளுமன்ற ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும், மாநிலங்களின் உரிமைகளில் ஒன்றிய அரசு தலையிடக் கூடாது.
எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவினுடைய உலகில் வேற எந்த நாட்டிலும் நிகழாத குட்டி சேவை இந்தியாவில் நிகழ்கிறது. அந்த குட்டி சேவையை சிதைக்கிற காரியங்களில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது.
வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் பெருகுவதோடு திறன்பெற்றவர்கள் கூட புலம்பெயர்கிறார்கள் வாழ்விற்காக. எனவே, வேலையின்மையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு மத்திய அரசு கூடுதல் முன்முயற்சிகளை, திட்டங்களை உருவாக்க வேண்டும். கிராமப்புறங்களில், நகர்ப்புறங்களில் வாழ்கிற ஏழை, எளிய மக்களுக்கு கூடுதல் திட்டங்கள்; அவர்கள் வறுமை ஒழிப்பு திட்டங்களை அதிகப்படுத்த வேண்டும். ஒன்றிய அரசின் ஆட்சியில் இதுவரை எவ்வளவு வேலைகள் கிடைத்திருக்கிறது? பழங்குடிகள், மலைக்குடிகள், ஏழைகள், எளியவர்கள், கிராமப்புற மக்கள்… இவர்களின் வாழ்வாதார மேம்பாடு குறித்த ஒரு அறிக்கை தேவைப்படுகிறது. தேசிய மாதிரி ஆய்வு அறிக்கை இப்பொழுது வெளியிடப்படுவதில்லை. எனவே, எவ்வளவு பேர் வறுமைக் கோட்டில் இருக்கிறார்கள், எவ்வளவு பேர் வாழ்க்கை சூழல் கடைகோடியில் இருக்கிறது என்பதைப் பற்றி நாடாளுமன்றத்தில் எல்லாம் ஒரு அறிக்கை தர வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். மத்திய அரசும், மாநில அரசும் நாடுகடந்த நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கிறார்கள். இன்றுள்ள உலகச் சூழலில் அது தவிர்க்க இயலாதது. ஆனால் அந்த முதலீடுகளை ஈர்க்கிறபோது, மத்திய அரசு, மாநில அரசு இவ்வளவு முதலீடுகளை ஈர்க்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் எவ்வளவு லாபம் கொண்டு செல்கிறார்கள் என்பதைப் பற்றி சொல்வதே இல்லை. இதனைப் பற்றி இந்திய நாடாளுமன்றத்தில் சொல்ல வேண்டும். மாநில அரசும் இதுபற்றி விளக்க வேண்டும்.
நாடுகடந்த நிறுவனங்களின் முதலீடுகளால் நாடு முன்னேறிவிடாது. அது ஒரு பங்கு வகிக்கலாம், ஆனால் முழுநிறை முன்னேற்றம் என்பது நம்முடைய தற்சார்பில் அடங்கியிருக்கிறது. சிறுதொழில், குறுதொழில், கிராமம், காடு சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருக்கிற மக்களுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் பின்பலமாக இருந்து அவர்களை ஊக்குவிக்கிற போதுதான் நாடு தன்னிறைவு அடையும், வளர்ச்சி எட்டும். மாறாக நாடுகடந்த நிறுவனங்கள் நாட்டைச் சூறையாடும். “நாடுகடந்த நிறுவனங்களின் முதலீட்டை எதிர்க்கிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள்” என்று மிக எளிதாக எங்களைக் கடந்து செல்லக்கூடாது என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
நாங்கள் சொல்வது முதலீடுகளை ஈர்க்கலாம், முதலீடுகள் வரட்டும், ஆனால் அதில் நமது உள்ளூர் தொழில்களை அழித்துவிடக்கூடாது. நமது தொன்மைத் தொழில்களை, கிராமத் தொழில்களை, நமது பண்பாட்டுத் தொழில்களை, குடிசைத் தொழில்களை, சிறு-குறு தொழில்களை அழித்துவிடக்கூடாது; மாறாக அதற்கு உறுதுணை செய்ய வேண்டும்.
இயற்கைச் சூழலை அழித்துவிடக்கூடாது. இயற்கைச் சூழல் மீது ஒரு பெரும் பேரழிவை நிகழ்த்துகிற தொழிற்சாலைகள் இந்தியாவில், தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது. இதுதான் எங்கள் கொள்கை. மற்றபடி நமது தொழிலுக்கு, நம்முடைய தற்சார்புக்கு துணைபுரிகிற எத்தகைய மூலதன முதலீட்டையும் நாங்கள் வரவேற்கிறோம்.
செய்தியாளர்: பெரம்பலூர்ல டீக்கடை விபத்தில் உயிரிழந்தவங்களுக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம், சார்பில் நிவாரணம் கொடுக்கப்பட்டிருக்கு. இது பாமக, தவெக கட்சிகள் கூட அவங்களுக்கு வந்து அதிகப்படியான நிதியைக் கொடுக்கணும், ஏன்னா அவங்க எல்லாருமே ஏழை எளிய மக்கள், அப்பாவி மக்கள்; அவங்களுக்கு வந்து இந்த நிதி உதவியை வந்து அரசாங்கம் உயர்த்திக் கொடுக்கணும் அப்படிங்கிற மாதிரி ஒரு கேள்வியை எழுப்பியிருக்காங்க. நம்மளுடைய நிலைப்பாடு?
.
தலைவர்: அரசு சார்பில் நிவாரணத்தை அதிகரித்து அறிவிக்க வேண்டும். மனித உயிர் போன்றது எதுவும் கிடையாது. அரசுதான் பக்கபலமாக இருந்து அந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தம் கொடுக்கிறது.
செய்தியாளர்: இப்ப பாத்தீங்கன்னா தவெக அரசு பொறுப்பேற்றதுக்கு அப்புறம், சில விஷயங்கள் அவங்களுக்கு வந்து அந்த முதிர்ச்சி இல்லா… அதாவது அனுபவமின்மை காரணமா சில சம்பவங்கள் நடக்குது. அதுமாதிரி சமூக வலைதளங்களிலும் சரி, சபாநாயகரும் மிகுந்த சிரமப்படுறாரு, எதிர்க்கட்சிகள் கிட்டயும் சிரமப்படுறாரு, ஆளுங்கட்சி அமைச்சர்கள்ட்ட இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள்ட்டயும் சில சங்கடங்களை அவர் சந்திக்க வேண்டிய சூழல் இருக்கு. அதை நம்ம வந்து நேரலையிலயும் நேர்லயும் பார்க்கக்கூடிய ஒரு சூழல் வருது. இப்படி தமிழக மாநில அரசியலேயே இவ்வளவு தடுமாற்றங்கள் இருக்கும் பொழுது, பிரதமராவதற்கு அவருக்கு தகுதி இருக்கு அப்படிங்கிற மாதிரியான ஒரு பேச்சு போயிட்டு இருக்கு. அது சம்மந்தமா சில வார்த்தைகளையும் முக்கியஸ்தர்கள், அந்த கட்சியினுடைய முக்கிய நிர்வாகிகளே வந்து மறைமுகமா சொல்லியிருக்காங்க. இதை எப்படி பாக்குறீங்க?
தலைவர்: நம்முடைய ஜனநாயகத்தில் நூறு பூக்கள் பூக்கட்டும் என்பார்கள். கருத்து சுதந்திரம் இந்தியா போல் நிலவுகிற நாடு எதுவுமில்லை…அவரவர் கட்சி, அவரவர் தலைவர்களைப் பற்றி அவர்கள் கருத்துச் சொல்கிறார்கள். பிரச்சனை அதுவல்ல. சட்டமன்றம் விவாத அரங்கம், பழிதீர்க்கும் இடமல்ல. பகை சொல்லும் இடமல்ல. அவதூறு சொல்கிற இடமல்ல.
மக்கள் நலன் குறித்து விவாதித்து அவர்களுக்காக சட்டமேற்றுகிற இடம். எனவே மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் உரையாடல் நடைபெற வேண்டும். கருத்துக்கள் முட்டி மோத வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவ்வளவுதான். அடுத்து…
செய்தியாளர்: சிபிஐயின் அதாவது கம்யூனிஸ்ட் கட்சியோட நிலைப்பாடு என்னன்னா, அரசு வந்து எந்த காலத்துலயும் விவசாய நிலங்களை வந்து பாழ்படுத்தி அதுல வந்து தொழிற்சாலைகள் தொடங்கக்கூடாது, வேஸ்ட் லேண்ட்ல (பாழ் நிலத்தில்) வந்து நீங்க பண்ணிக்கலாம் அப்படின்னுதான் சொல்றீங்க. ஆனா நேற்று செங்கோட்டையன் வந்து என்ன பதிவு பண்ணிருக்காருன்னா, இப்ப வந்து ஓசூர்ல நாங்க விமான நிலையத்துக்கு இடம் எடுத்தாலும் அது விவசாய நிலத்தைதான் எடுப்போம். எங்க எடுத்தாலும் நாங்க விவசாய நிலத்தைதான் எடுக்க முடியும், வேற நிலம் கிடையாதுன்னு ஒரு பதில் சொல்லிருக்காரு. அதுக்கு பரந்தூர்லயே பண்ணிட்டு போயிடலாமே? விவசாய நிலத்தை எடுத்துட்டாங்க.
தலைவர்: ஏராளமான பினாமி நிலங்கள் இருக்கிறது. கேட்பாரற்ற நிலங்கள் இருக்கிறது. அந்த நிலங்களையெல்லாம் கண்டறிந்து, இது போன்ற நவீன திட்டங்களை உருவாக்கலாம். வாழ்விடங்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. விவசாயிகளுக்கு நிலம் ஆதாரம். நீண்ட நெடுங்காலமாக, பல்லாண்டுகள் அதை நம்பி வாழ்கிறார்கள். எனவே இயற்கை சூழல் பாதிக்காமல், எளிய மக்களின் வாழ்விடங்கள் பாதிக்காமல் நவீன திட்டங்களை, பெருந்திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம்.
செய்தியாளர்: அதாவது மோடி, அதுக்கடுத்து ராகுல் காந்தி, அதுக்கடுத்து பட்டியலில் மூன்றாவது இடத்தில், சமீபத்தில் கட்சி தொடங்கி முதல்வராகி, இப்ப தமிழ்நாட்டிலிருந்து ஒருத்தர் வந்து முதல்வர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் வைக்கப்பட்டிருக்கு. இது நாடு முழுவதும் பெரிய கருத்தா பேசப்பட்டிருக்கு. இதப் பற்றி, பிரதமர் என்ற விஷயத்திற்கு… இந்த கருத்தை எப்படி பார்க்கிறீங்க? குறுகிய காலத்தில் மூன்றாவது இடத்திற்கு போயிருக்காரு?
தலைவர்: கேள்வி கேட்கிற உங்களை நான் பிரதமராக வருவீர்கள் என்று என்னால் சொல்ல முடியும். நான் அடுத்து என்னால் ஆட்சி செய்ய முடியும் என்று உங்களால் சொல்ல முடியும். நாங்கள் ஒரு கட்சி ஆரம்பித்து அதிகாரத்திற்கு வர முடியும் என்று உங்களால் சொல்ல முடியும். உலகத்திலேயே பல கட்சி இயங்கும் முறை கொண்ட நாடு நம்முடைய நாடு. வியப்புக்குரியது. இங்கே இந்தியா போல் ஒரு கருத்து சுதந்திரம், பல கட்சி இயங்கும் முறை கொண்ட நாடு இல்லை. எனவே கருத்து சுதந்திரத்தின் மிக சிறப்பு என்று அதை நாம் கடந்து செல்ல வேண்டுமேன்றி, ஒவ்வொன்றின் மீதும் சவாரி செய்வது ஏற்புடையதல்ல.
செய்தியாளர்: சார், சட்டமன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் கடன் தருவதாக சொன்னார்கள் அல்லவா? நம்ம கட்சியின் நிலைப்பாடு?
தலைவர்: நாங்கள் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். அவ்வாறு வாய்ப்பு இல்லாதவர்களுக்கு கடன் வழங்கி தருவது குறித்து எங்களுக்கு வேறுபட்ட கருத்து இல்லை.
செய்தியாளர்: இப்ப இடதுசாரிகளைப் பொறுத்தவரையில, அம்பேத்கரையோ, பெரியாரையோ யாரையுமே வந்து இன்னைக்கு வரைக்கும் ஒதுக்குனது கிடையாது. அப்படிங்கறப்ப நேற்று வந்து இடஒதுக்கீடு சம்பந்தமான மானியக் கோரிக்கையில பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் பேர் எல்லாமே அந்த இடஒதுக்கீடு மசோதா இது பண்ணிருக்காங்க… மானியக் கோரிக்கையில. அதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?
தலைவர்: மிக மிக தவறு. ஜவகர்லால் நேருவினுடைய பெயர் எந்தக் காலத்திலும் நாடு கடந்து சென்றுவிடக்கூடாது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், விடுதலைப் போரில் மகத்தான பங்காற்றியவர், சிறையேந்தியவர், வழக்குகளை சந்தித்தவர். அவரது காலத்தில் தான் 5 ஆண்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. மாண்புமிகு நரேந்திர மோடியின் காலத்தில் அல்ல. அவர்தான் விண்வெளி ஆய்வுக்கு திட்டமிட்டார். ஒரு சாராபாய், ஒரு அப்துல் கலாம் நமக்கு கிடைத்ததற்கு காரணம் ஜவகர்லால் நேரு. அவர்தான் அடித்தளம். எனவே அவர் பெயரை கடந்து சொல்வது நாட்டிற்கு செய்யும் தீங்கு. அதேபோன்று தந்தை பெரியார், வெறும் சொல் அல்ல. சுயமரியாதையின் குறியீடு, பகுத்தறிவின் குறியீடு. எனவே, பெரியார் என்ற சொல்லே ஒரு வகையில் சமூக நீதியின் சொல். அதை கடந்து செல்வதும் ஏற்புடையதல்ல. டாக்டர் அம்பேத்கர்தான் அரசியல் சாசனத்தின் குறியீடாக இருக்கிறார்.
உலகத்தில் சிறந்த நாட்டிலும் இல்லாத ஒரு அரசியல் சாசனத்தை நமக்கு அளித்த மகத்தான மனிதர்களில் அவர் ஒருவர். எனவே இத்தகைய மனிதர்களை, தலைவர்களை கடந்து செல்வது கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்புடையதல்ல. அவர்கள் பெயர் இடம்பெற வேண்டும்.
செய்தியாளர்: இப்போது இறுதியான கேள்வி… தலைவர்: நிறைவான கேள்வி.
செய்தியாளர்: நிறைவான கேள்விதான்… இப்போது திருவாரூர்ல வந்து மக்கள் நலத்திட்டங்களை முறையாக செயல்படுத்தினால், இப்ப வெளியில இருந்து கொடுக்கிற ஆதரவை உள்ளுக்குள்ள கொடுக்க வாய்ப்பு இருக்கிற மாதிரி ஒரு கருத்தை நீங்க நேத்தைக்கு பதிவிட்டு இருக்கீங்க. இப்ப வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் விஜய் வந்து பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், நம்மளுடைய நிலைப்பாடு என்ன? ஆதரவு எப்படி இருக்கும்?
தலைவர்: இப்ப நாங்க திருவாரூரில் ஒரு பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம், தொலைக்காட்சியில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். டெல்டா பகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்க வேண்டும். குறுவை சாகுபடி பொய்த்துப் போற சூழல் இல்லை, எனவே ₹15,000 வழங்க வேண்டும். விவசாயக் கூலி ஏழைத் தொழிலாளர்களுக்கு ₹10,000 வழங்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை முன்மொழிந்தோம். எங்களைப் பொறுத்தவரைக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரைக்கும் வெளியில் இருந்து ஆதரிக்கிறோம்.
ஆரம்பத்தில் முதல் ஆதரவை நாங்கள் தெரிவித்த பொழுதும் நாங்கள் சொன்னது மதச்சார்பின்மை, மக்கள் நலன், தமிழ்நாட்டின் நலன், அவ்வளவுதான். இந்த மக்கள் நலனில், தமிழக நலனில் முரண்பாடு செல்கிற வரை அதை ஆதரிப்போம். தடம் புரளும் சூழல் ஏற்பட்டால், அல்லது மக்கள் நலனுக்கு எதிரா…எதனால சூழல் ஏற்பட்டது? நாங்கள் மக்களுக்கு அருகில் இருந்து அரசு எதிர்ப்போம். சமரசம் இல்லாமல் எதிர்ப்போம். ஜனநாயகத்தில் திமுக, அதிமுகவை விட அதிக இடங்களை தவெக பெற்றது. எனவே, தவெகவை ஆட்சி அமைப்பது தான் ஆட்சி அமைக்க அழைப்பது தான் ஜனநாயகம் என்று ஆளுநருக்கு நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம்.
காலதாமதம் ஏற்பட்டு மக்கள் அதிகாரத்தில் ஆளுநர் அமர்ந்து விடக்கூடாது என்பதற்காக தவெகவை நாங்கள் ஆதரித்தோம். மற்றபடி எந்த நிபந்தனையும் நாங்கள் விதிக்கவில்லை. எங்கள் நிபந்தனை எல்லாம் சார்பின்மை, மதச்சார்பின்மை. ஏழை மக்கள், எளிய மக்கள், தொழிலாளர்கள் இவர்களுக்கு அருகில் இருக்க வேண்டும்.
அதிகாரிகளுக்கு அருகில் இருக்கலாம், அதிகார ஐபிஎஸ், ஐ.ஏ.எஸ், ஐ.எஃப். எஸ் நிர்வாக குறியீடு; ஆட்சி அதிகாரத்தின் குறியீடு அல்ல. மக்கள் அதிகாரத்தின் குறியீடு முதல்வர். எனவே, முதல்வர் சொல்வதை ஐபிஎஸ், ஐஏஎஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் கேட்க வேண்டும். நடைபெறுவது எங்கே யும் இந்திய ஜனநாயகத்தில் அதிகாரிகள் ஆட்சி அல்ல, மக்கள் ஆட்சி.
தமிழ்நாட்டில் மக்கள் ஆட்சியின் குறியீடு முதல்வர், மாண்புமிகு விஜய் அவர்கள். எனவே, அதிகாரிகள் சொல்வதைக் கேட்டுக்கொள்ள வேண்டும், ஆனால் மக்கள் கோரிக்கைகளுக்கும் குரலுக்கும் தான் அவர் செவிமடுக்க வேண்டும்.
நிருபர்: அத்தியாவசிய பொருட்கள்… அத்தியாவசிய பொருட்களோட விலை ஏற்றம் கடுமையா போயிட்டு இருக்கு. தடுக்கறதுக்கு தமிழ்நாடு அரசு என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க?
தலைவர்: மத்திய அரசு, தமிழ்நாடு அரசு பொறுப்பேற்க வேண்டும். இதன் முழுப் பொறுப்பும் மத்திய அரசைச் சார்ந்தது. சர்க்கரை, அதேபோன்று அரிசி பதுக்கப்படுகிறது. இந்த பதுக்கலை வெளிக்கொணர வேண்டும். பதுக்கல் ஆன்லைன் ஒரு நாட்டிலிருந்து கப்பலில் சரக்கு வருகிற போதே நடுக் கடலிலேயே பதுக்க முடியும். பழைய படி குடோனில் பதுக்க வேண்டிய அவசியமில்லை. கலப்படம், கள்ள மார்க்கெட் அதிகரித்திருக்கிறது. கருப்பு பணமும் அதிகரித்திருக்கிறது. புதிய வர்த்தக முறைக்கு, பண பரிவர்த்தனை முறைக்கு நாடு செல்கிறபோது இவையெல்லாம் ஒழிந்துவிட்டது என்று பிரதமர் சொன்னார். இவையெல்லாம் அதிகரித்திருக்கிறது. ஒரு 10, 12 ஆண்டுகளில் செல்வம் படைத்தவர்களின் இருப்பு அதைவிட 3 மடங்கு அதிகரித்திருக்கிறது; ஏழைகள் அதைவிட கூடுதலாக ஏழைகளாக மாறியிருக்கிறார்கள். எனவே, ஒன்றிய அரசு தோற்றுவிட்டது. எங்களைப் பொறுத்தவரை உழைக்கும் மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகரிக்கப்பட வேண்டும்.
விவசாயிகளின் உற்பத்திப் பொருளுக்கு மிக நியாயமான விலை கிடைக்க வேண்டும். கள்ள மார்க்கெட், கருப்பு பணங்களை ஒழிக்க வேண்டும். எளியவருக்கும் செல்வருக்கும் இருக்கிற இடைவெளியைப் போக்குவதற்கு ஒன்றிய அரசு கடும் முயற்சி எடுக்க வேண்டும். மாநில அரசும் தன்பங்கிற்கு தன் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விலையைக் குறைப்பதற்கு கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இடதுசாரிகள் எந்தச் சூழலிலும் 100 பொருட்களின் பட்டியலைக் கொடுத்து மருந்து, பிஸ்கட், பால் பவுடர், பால் உள்ளிட்ட 100 பொருட்களின் விலையை எந்தச் சூழலிலும் உயர்த்தக் கூடாது சட்டமாக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டோம். அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கடந்து சென்றுவிட்டார்கள். மீண்டும் நாங்கள் அதை வலியுறுத்துகிறோம். என அவர் தெரிவித்தார்.
சிபிஐ கட்சியினுடைய செயற்குழு உறுப்பினர் பக்கிரிசாமி, மாவட்ட செயலாளர் ஜெயராமன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், முன்னணி ராஜேந்திரன், பத்மாவதி, ராஜாங்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.