Perambalur: “I will serve with eternal gratitude for having been elected to the Kunnam constituency for the third time,” says MLA Sivasankar.
பெரம்பலூர்: குன்னம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று அவர் ஆலத்தூர் ஒன்றியத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இது தேர்தல் பிரச்சாரத்திற்கு நிகராக நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. அவருக்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்கள் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும், பட்டாசுகள் வெடித்தும் வரவேற்கின்றனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வாழ்த்தினர். நொச்சிக்குளம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்.எல்.ஏ சிவசங்கர் பேசியதாவது:
அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் வேட்பாளராக, கூட்டணி கட்சியான தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்… விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவோடு போட்டியிட்ட எனக்கு பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்த உங்களுக்கு எல்லாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
நடைபெற்ற கழக ஆட்சியில் நம்முடைய பகுதியிலே பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று இருக்கிறது. நம்முடைய குன்னம் தொகுதியிலே ஒரு அரசு கலைக்கல்லூரி நம்முடைய பிள்ளைகளுக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. மின்சாரப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஒரு துணை மின்நிலையம் அமைக்கின்ற பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எல்லா முக்கிய ஊர்களுக்குமான சாலைகள் எல்லாம் புதிய சாலைகளாகச் சிறப்பான முறையிலே போடப்பட்டிருக்கிறது. பழைய பேருந்துகள் எல்லாம் புதிய பேருந்துகளாக மாற்றப்பட்டு.
நம்முடைய தொகுதியிலே மகத்தான வெற்றியை அளித்திருக்கிறீர்கள். அதற்கு நம்முடைய தொகுதி மக்களுக்கு நன்றி கடனாக பணியாற்ற வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்க்கட்சியாக இருந்தாலும் சட்டமன்றத்திலே நம்முடைய இளம் தலைவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையிலே, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக நம்முடைய தொகுதியினுடைய குரலாக, நம்முடைய மக்களின் குரலாக இன்றைக்கும் ஒலிப்பேன். அமைச்சராக இருந்தாலும், சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் இன்றைக்கும் தொகுதியுடைய வளர்ச்சி பணியிலே முழுமையாக பணியாற்றுவேன் என்ற உறுதியளித்து, 3வது முறையாக நம்முடைய குன்னம் தொகுதியிலே உங்கள் வீட்டு பிள்ளையாக என்னை இந்த மகத்தான வாய்ப்பை அளித்திருக்கிறீர்கள். அதற்கு என்றைக்கும் நன்றியோடு பணியாற்றுவேன், உங்களுடைய தொண்டனாக பணியாற்றுவேன் என்பதை தெரிவித்து, இந்த நன்றியுரை நிகழ்ச்சியிலே சிறப்பான முறையிலே கலந்து கொண்டு அன்பான வரவேற்பு அளித்திருக்கின்ற தாய்மார்களுக்கும், பெரியோர்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன், நன்றி நன்றி வணக்கம் என பேசினார்.
மாவட்ட திமுக பொறுப்பாளார் வீ.ஜெகதீசன், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, கொளக்காநத்தம் முன்னாள் ஊராட்சித் தலைவர் ராகவன், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் சுந்தரராஜ், அகிலா ராமசாமி, மற்றும் மாவட்ட விவசாய பிரிவு துணை அமைப்பாளர் புஜங்கராயநல்லூர் காட்டுராஜா, நொச்சிக்குளம் கிளை செயலாளர் துரை @ கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக இன்று காலை கொளக்காநத்தம் கிராமத்தில் வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்த எம்.எல்.ஏ சிவசங்கர், அயினாபுரம், அணைப்பாடி, கொளத்தூர், கூடலூர், இலுப்பைக்குடி, பிலிமிசை, கூத்தூர், ஜெமீன்பேரையூர், புஜங்கராயநல்லூர், நொச்சிக்குளம், பாலம்பாடி, ஜெமீன் ஆத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், மேத்தால், காரைப்பாடி, சில்லக்குடி, திம்மூர், அருணகிரிமங்கலம், மாக்காய்குளம், பகுதிகளில் சென்று ஊர் ஊராக வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்தார். கூட்டணி கட்சியை சேர்ந்த விசிக உள்பட தேமுதிக மாவட்ட செயலாளர் துரை.சிவா ஐயப்பன் உள்ளிட்ட பலர் உடன் சென்றிருந்தனர்.