பெரம்பலூர்: அரசு ஏரிகளை தூர் வாராவிட்டால் பிஜேபி தூர்வாரும்; வறட்சி குறித்த விழிப்புணர்வு பேரணியில் மாவட்டத் தலைவர் முத்தமிழ்ச்செல்வன் பேச்சு!

schedule
2026-07-21 | 16:38h
update
2026-07-21 | 16:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: If the government does not desilt the lakes, the BJP will do so; District President Muthamizhselvan speaks at a rally raising awareness about drought.

பெரம்பலூர் பாலக்கரை அருகே இன்று பிஜேபி மாவட்டத் தலைவர் முத்தமிழ்ச்செல்வன் தலைமையில் வறட்சி விழிப்புணர்வு பேரணி நடந்தது. அதில், பெரம்பலூர் மாவட்டத்தில், வரவிருக்கும் காலகட்டத்தில் வறட்சி அபாயம் இருப்பதாக பல்வேறு அறிக்கைகள் வெளியாகியுள்ளது குறித்தும், பொதுமக்களிடையே நீர் சேமிப்பு, மழைநீர் சேகரிப்பு, மரக்கன்றுகள் நடுதல் மற்றும் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில்,

“நீரை சேமிப்போம் – வருங்காலத்தை காப்போம்!”
நீரை சேமிப்போம்
மழைநீர் சேகரிப்போம்
மரக்கன்றுகள் நடுவோம்
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவோம்
வறட்சியை எதிர்கொள்வோம்
இயற்கையை பரதுகாப்போம்
“வறட்சியை எதிர்கொள்வோம்

-என விழிப்புணர்வு கோசங்களை எழுப்பியவாறு மதனகோபாலபுரம், வெங்கடேசபுரம், சங்குப்பேட்டை, கடைவீதி வழியாக பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே வந்தடைந்தது. அதில் மாவட்ட துணைத் தலைவர் ஜெயபாலாஜி தேவந்திரன், மாவட்ட பொருளாளர் வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

பின்னர் சிறப்புரையாற்றிய பிஜேபி மாவட்டத் தலைவர் முத்தமிழச்செல்வன் பேசியதாவது: அனைவருக்கும் வணக்கம்! மத்த கட்சியல்லாம் அரசியல் போராட்டமெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்குறப்போ, “பாரதிய ஜனதா கட்சி என்னடா? இந்த மாதிரி ஏதோ ஒரு பேரணி நடத்துறாங்களே?” அப்படின்னு சொல்லிட்டு ஆச்சரியமா பாத்துட்டு இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

உங்களுக்கெல்லாம் ஒரு அதிர்ச்சியான விஷயத்தைச் சொல்றேன். கொரோனாவை விட கொடிய காலத்தை பெரம்பலூர் பார்ப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது, இதே நாள் அடுத்த வருடத்தில்!

என்னன்னு கேட்டீங்கன்னா, ‘எல் நினோ’ (El Niño) அப்படின்னு சொல்லிட்டு ஒரு இயற்கை பேரழிவை வந்து அறிவிச்சிருக்காங்க. அந்த இயற்கை பேரழிவோட விஷயத்துல வந்து ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகள் வந்து வரும் ஆண்டு—அதாவது வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போகும். நமக்கு வரது வந்து வடகிழக்கு பருவமழை. ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ல மட்டும்தான் நமக்கு கொஞ்சம் மழை கிடைக்கும். அதுவும் பெரம்பலூர் பார்த்தீங்கன்னா வானம்பார்த்த பூமி.

இங்க எந்த ஒரு ஆற்றுப் பாசனமும் கிடையாது. எந்த நீர்வளமும் கிடையாது. நம்மளோட விவசாயம் வானம்பார்த்த பூமி. அதையும் தாண்டி ஒரு சில இடத்துல பார்த்தீங்கன்னா கிணறு வெட்டி… எங்க ஊரு பேரளிலாம் பார்த்தீங்கன்னா கிணறு வெட்டி, கிணத்துலலாம் இன்றைக்கே தண்ணி ட்ரை ஆயிட்டு இருக்கு (வற்றி வருகிறது).

இப்ப அதே மாதிரி பார்த்தீங்கன்னா, வானம்பார்த்த பூமியில அதை நம்பி மக்காச்சோளம் போட்டா… மக்காச்சோளத்துக்கு விலையில்லைன்னு சொல்லிட்டு போன வருஷமெல்லாம் புலம்பிக்கிட்டு இருந்தோம். ஆனா இந்த வருஷம் பார்த்தீங்கன்னா, அதை விட மழை குறைவாக இருக்கும். மழை இருக்காது அப்படின்னு சொல்லிட்டு ஆராய்ச்சியாளர்கள் சொல்லிருக்காங்க.

அதைப் பற்றி வந்துட்டு பார்த்தீங்கன்னா, மக்கள்ட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அரசாங்கத்தோட கடமை. ஆனா இந்த மாநில அரசாங்கம் அதை செய்யத் தவறி, இந்த விளம்பர மாடலிங் அரசாங்கம், தினம் தினம் பார்த்தீங்கன்னா அவங்களுக்குள்ள போட்டோஷூட் போட்டுக்கிட்டு, இந்த திமுகவுக்கும் தவெகவுக்கும் (TVK) உள்ள வந்த பிரச்சனைகளை மட்டுமே கையாண்டு கிட்டு இருக்காங்க.

Advertisement

சோ, அவங்களுக்கு மக்களைப் பத்தி சிந்திக்க நேரமில்லை. விவசாயத்தைக் காப்பாத்துவார் அன்புமணி ராமதாஸ் அண்ணன் சொன்ன மாதிரி, சினிமால வேணா விவசாயத்தைக் காப்பாத்துவாரு; ஆனா ரியல் லைஃப் விவசாயிகளோட கஷ்டம் வந்து அண்ணனுக்கு தெரியுமா என்னன்னு தெரியல, முதல்வர் விஜய் அண்ணணுக்கு!

இது வந்து அவேர்னஸ் (விழிப்புணர்வு) கொடுக்கணும். அவேர்னஸ் கொடுத்து என்ன பண்ணப்போறோம் அப்படின்னு பார்த்தீங்கன்னா, நம்ம வானம்பார்த்த பூமிங்றதால சில பல பயிர்கள் வந்து வெயில் தாங்கும். உதாரணத்துக்கு நம்ம நாட்டுப் பயிர் கம்பு, சோளம், வரகு இதெல்லாம் வெயில் தாங்கும். அதே மாதிரி பார்த்தீங்கன்னா பயறு வகைகள்—அவரைப் பயறு, நரிப் பயறு, மொச்சப் பயறு—இந்த மாதிரி வகைகள் எல்லாம் வெயில் தாங்கும்.

நம்ம இதெல்லாத்தையும் அழிச்சுட்டு இன்னைக்கு பார்த்தீங்கன்னா மக்காச்சோளத்தைப் போட ஆரம்பிச்ச்ட்டோம். மக்காச்சோளம் வந்து பார்த்தீங்கன்னா உங்களுக்கே தெரியும்—விதை போட்டு சரியா மேல மழையில்லைன்னா முளைக்காது. அதுக்கப்புறம் திரும்ப மழையில்லைன்னா பார்த்தீங்கன்னா கருது வாங்குற டைம்ல வந்து காய்ஞ்சு போயிடும். அதுக்கப்புறம் கருது வாங்குனதுக்கப்புறம் பார்த்தீங்கன்னா மழையில்லைனாலும் அது முத்தாது. எல்லாம் பதரு மாதிரி ஆயிடும், ஈல்டு (மகசூல்) வராது.

அதேபோல பார்த்தீங்கன்னா, இந்த வறட்சி வந்துச்சுன்னா முதல்ல பாதிக்கப்படுறது உணவுப் பொருட்களோட விலையேற்றம்தான். அதனால தயவுசெய்து என் அன்புத் தாய்மார்களே, என் அன்பு மக்களே… உங்களோட காட்டுல உங்க குடும்பத்துக்குத் தேவையான, ஒரு வருடத்துக்குத் தேவையான கம்பு, சோளம், வரகு இந்த மாதிரி உணவுப் பொருட்களைத் தயாரித்து நீங்க பத்திரப்படுத்தி வச்சுக்கோங்க. இது ஒன்னு!

இந்த அரசாங்கத்துக்கு நம்ம கேட்குறது என்னன்னு கேட்டீங்கன்னா, பெரம்பலூர் மாவட்ட அரசாங்கத்துக்கிட்ட நம்ம கோரிக்கையா வைக்கிறது என்னன்னு கேட்டீங்கன்னா, பெரம்பலூர்ல கிட்டத்தட்ட ஆயிரம் ஏரிகுளங்கள் இருக்கு. 73 பாசன ஏரிகள் வந்து பொதுப்பணித்துறை (நீர்வளத்துறை) ல இருக்கு. அந்த 73 ஏரிகளையாவது குறைந்தபட்சம்… இந்த ஏரியைத் தூர்வாருவோம், ஏரியைத் தூர்வாருவோம்னு சொல்வாங்கள்ல? வெறும் ஏரியைத் தூர்வாரிட்டா ஏரி ரொம்பாது. அது…

..அந்தப் பாதையில் இருக்கிற ஒரு தடுப்புகளை, அந்த அடைப்புகளை, இந்த குப்பை கூளங்களை, இதுங்களை வந்து போர்க்கால அடிப்படையில் உடனடியாக, தயவு செஞ்சு மாவட்ட நிர்வாகம் உங்களை மன்றாடி கேட்டுக்கிறோம், நீங்க வந்து அதை உடனடியாக தூய்மைப்படுத்தி, கொஞ்சம் மழை பெஞ்சாலும் அந்த மழை வந்து தண்ணி வந்துட்டு ஏரியில வந்து ரொம்புற மாதிரி, ஏரிக்கு வர மாதிரி இந்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கணும்.

அதுக்காகத்தான் இந்த விழிப்புணர்வு பேரணி. “இந்த விழிப்புணர்வு பேரணின்னு சொன்ன உடனே கூட பிஜேபிக்காரன் விழிப்புணர்வு பேரணி பண்றாங்களா, நம்ம அனுமதி தரதா வேணாமா?”ன்னு காவல்துறை கூட பல டைம் யோசிச்சாங்க. விழிப்புணர்வு பேரணிக்கு எதுக்கு அனுமதி தரதுக்கு யோசிச்சாங்கன்னு தெரியல. அதுக்கப்புறம் வந்துட்டு அதை அப்படியே நியூட்ரலா விட்டாங்க.

நம்ம எந்த கட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கும், ஆளுங்கட்சிக்கு கண்டனம் தெரிவிப்பதற்காகவும் நம்ம வரல. நம்ம மக்களுக்கு சில விஷயங்களை தெரியப்படுத்தணும்னு நினைக்கிறோம். ஏன்னா அந்த ‘எல் நினோ’ங்கறது வந்து கொரோனாவை விட கொடிய காலம் வரதுக்கான வாய்ப்பு இருக்கு. அப்பேர்ப்பட்ட அந்த பேராபத்து இருக்கிறதை மக்கள்ட்ட வந்து தெரியப்படுத்த வேண்டியது அரசாங்கத்தோட கடமை. அதை விளம்பரம் செய்ய வேண்டியது அரசாங்கத்தோட கடமை. ரீல்ஸ் விளம்பரம் மூலம் ஆட்சிக்கு வந்த இந்த ஆட்சியாளர்களோட கடமை.

அதனால தயவு செஞ்சு மக்கள் வந்து தன்னைத் தாங்களால்தான் பாதுகாத்துக்கணும். குடிநீருக்கு பஞ்சம் வரும். ஆல்ரெடி இப்பயே நிறைய ஊர்ல பஞ்சம் வந்துருக்கு. நம்ம பக்கத்து நகரமான திருச்சி மாநகரத்துக்குள்ள துறையூர்லதான் பாத்தீங்கன்னா குடிநீருக்கு வந்து ரொம்ப பஞ்சம் வந்துருச்சுன்னு சொல்றாங்க.

இந்த எல் நினோவால் பாதிக்கப்படுறதுல வந்து பார்த்தீங்கன்னா அண்ணன் ஏழாவதுன்னு சொன்னாருன்னு நினைக்கிறேன். எனக்கு தெரிஞ்சு ஏழு மாவட்டமும் சமமா பாதிக்கும்; அதுல முதல் இடத்துல கூட நம்ம பெரம்பலூரை எடுத்துக்கலாம். ஏன்னா வானம்பார்த்த பூமி பெரம்பலூர். பெரம்பலூர்ல உங்களுக்கு வந்து எந்த ஒரு ஆறும் கிடையாது. ஆறெல்லாம் இப்ப ஊருக்கு அழகு பார்வைன்னு சொல்வாங்க. இந்த பெரம்பலூர் மாவட்டத்துல ஆறு கிடையாது.

அந்தப்பக்கம் ஒரு ஆறு இருக்கு, நம்ம மழையில மழை பெஞ்சு தண்ணி ஓடும். அதை வந்து கடலூர் மாவட்டத்துல சேர்த்துட்டாங்க. இந்த எல்லையில ஒரு ஆறு இருக்கு, அது திருச்சி மாவட்டத்துக்குப் போயிடுச்சு. ஆறில்லாம பாழாப்போன ஊரு நம்ம பெரம்பலூர் மாவட்டம். அதனால தயவு செஞ்சு மக்களே நீங்க கொஞ்சம் விழிப்போட இருங்க. பயிர் வகையில வந்து உணவுப் பொருள்களை பயிரிட்டு, நம்ம உணவுப் பொருள்களைச் சேர்த்து வச்சுக்கோங்க. அதேமாதிரி பாத்தீங்கன்னா, நம்ம காட்டுல பயிர் பண்ணும்போது வறட்சி தாங்குற பயிரா பயிர் பண்ணுங்க. இந்தத் தண்ணி அதிகமா தேவைப்படுற பயிரா பயிர் பண்ணிடாதீங்க இந்த வருடம்.

அதனால உங்களை மன்றாடி கேட்டுக்கிட்டு, இந்த நிகழ்ச்சிக்கு அழைத்த உடனே நூற்றுக்கணக்கான பேர் வந்து இதுல கலந்துக்கிட்டு கிட்டத்தட்ட ஒரு ரெண்டு கிலோமீட்டர்… என்ன சொல்லப்போனா விவசாயிக்காக யாரு நின்னப்போனாலும் பிஜேபிக்காரன் மட்டும்தான் நிப்பான். இந்த பிஜேபிக்காரனுக்கு வந்துட்டு விளம்பரம் பண்ணத்தான் தெரியாது, பிஜேபிக்காரனுக்கு வந்து ரீல்ஸ் போடத்தான் தெரியாது. பிஜேபிக்காரன் ரியல் விவசாயி, உண்மை விவசாயி! விவசாயிக்கு ஒன்னுன்னா என்னைக்குல இருந்து இன்னைக்கு வரைக்கும் என்னைக்குமே இங்க இருக்கிறது பிஜேபிக்காரன் மட்டும்தான் நிப்பான்.

அதனால தயவு செஞ்சு பொதுமக்களாகிய, வியாபார பெருமக்களாகிய அனைவருக்கும் மன்றாடி கேட்டுக்கிறது என்னன்னு கேட்டீங்கன்னா, எல் நினோவை எதிர்கொள்ள தயாராயிருப்போம். கவனமா இருப்போம். நிச்சயமா மழை குறைவா இருந்துச்சுன்னா தண்ணீர் பஞ்சம் மட்டும் கிடையாது, உணவுப் பஞ்சமும் வரும். உணவுப் பஞ்சம் மட்டும் கிடையாது, பல பல நோய்கள் வரும். அதனால தண்ணீர்களை வந்து பாத்தீங்கன்னா ரொம்ப கவனமா செலவு பண்ணுங்க. முடிஞ்ச அளவுக்கு மரம் வையுங்க. முடிஞ்ச அளவுக்கு ஏரிகளைத் தூர்வாருருங்க.

அப்புறம் அரசாங்கத்துக்கு ஒரே ஒரு கோரிக்கை வச்சுக்கிறோம்… அந்த கோரிக்கையை நிறைவேற்றாத பட்சத்தில், நாங்களே இறங்கி ஏரிகளைத் தூர்வாரக்கூடிய சூழல் உருவாகும். நிச்சயமா பெரம்பலூர் பாரதிய ஜனதா கட்சி இதை உறுதியா செய்யும். நிச்சயமா வர்ற ஞாயிற்றுக்கிழமையில இருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எங்க நண்பர்களோட சேர்ந்து, ஒவ்வொரு ஏரியை… ஏரிக்கு வர்ற நீர்வரத்துத் தடங்களை நிச்சயமா வந்து நாங்க வந்து ஒழுங்குபடுத்துவோம், ஒழுங்குபடுத்த முயற்சிப்போம். அரசாங்கம் இதை செய்யணும்னு கேட்டுக்கிறேன். இதெல்லாம் நிச்சயமா பாஜாக செய்யும். அப்புறம் பாஜாக செய்யறதால வந்து நீங்க அனுமதி வாங்குனியா, அதை வாங்குனியா, இதை வாங்குனியான்லாம் கேட்கக் கூடாது. நன்றி என பேசினார்.

இதில், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள், இளைஞர் அணி, மகளிர் அணி, விவசாய அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.07.2026 - 17:56:53
Privacy-Data & cookie usage: