Perambalur: Legal awareness camp for school students on the Right to Education Act!
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சரண்யா தலைமையில் ‘கட்டாய கல்விச் சட்டம்’ குறித்து சட்ட விழிப்புணர்வு முகாம் பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளருமம், சார்பு நீதிபதியுமான சரண்யா பேசியதாவது: அனைவருக்கும் கட்டாய கல்விச் சட்டம் குறித்தும், குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த சட்டம் குறித்தும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் குறித்தும், மாணவர்கள் ஆகிய தாங்கள் சட்டப்பணிகள் குறித்து தங்களது பெற்றோர்களிடம் எடுத்துரைக்குமாறும், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் குறித்தும், போக்குவரத்து சாலைவிதி மீறல்கள் குறித்தும், போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
14 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் பயிலுமாறு கேட்டுக் கொண்டார். மாணவர்கள் கல்வியின் மீது நாட்டம் கொண்டு சிறப்பாக படிக்க வேண்டும் என்றும், படிப்பு மட்டும் தான் உலகில் உள்ள அனைத்து மதிப்பு மரியாதைகளை ஈட்டித்தரும் என்றும், இன்று உயர் பதவியில் இருக்கக்கூடிய அனைவருமே படிப்பின் வாயிலாகதான் உயர்ந்துள்ளார்கள். எனவே, மாணவர்கள் செல்போனை படிப்பிற்கு மட்டுமம் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். மாணவ மாணவியர்களுக்கு எந்த பிரச்சனைகள் என்றாலும் 15100 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் அல்லது மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை நேரில் அணுகுமாறு கேட்டுக்கொண்டார்.
வழக்கறிஞர் திருஞானம் மாணவ மாணவியர்களுக்கான போக்சோ சட்டம் குறித்து பேசினார். முன்னதாக ஸ்கூல் பிரின்ஸ்பல் பாஸ்கர் வரவேற்றார். பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் காயத்ரி நன்றி தெரிவித்தார். நிகழ்சிக்கான ஏற்பாடுகளை ஸ்கூல் வைஸ் பிரின்ஷ்பல் கோமதி செய்திருந்தார்.