Perambalur: Loan distribution camp for the public; Collector’s announcement!
பெரம்பலூர்: தமிழக அரசு சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தின் அடிப்படையில் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் நலனுக்காகவும், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து வங்கிகளின் ஒத்துழைப்போடு கடன் வசதியாகல் முகாமினை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, அரசு துறைகளான மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், கூட்டுறவுத்துறை, வேளாண்மை துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, கைத்தறி துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம், தாட்கோ, மீன்வளத்துறை உள்ளிட்ட துறைகளால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் வாயிலாக கடன் வழங்க அனைத்து வங்கிகளையும் இணைத்து மாபெரும் கடன் வசதியாக்கல் முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை 18.12.2025 அன்று பிற்பகல் 3:30 மணியளவில்; மாவட்ட ஆட்சியர் அலுவலக 2வது தளத்தில் உள்ள கூட்டரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, சுயதொழில் செய்ய கடன் உதவி தேவைப்படுவோர் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமிற்கு வரும் போது, தங்களது பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்-2, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மாற்றுச் சான்றிதழ் (தகுதியிருப்பின்) ஆகியவற்றின் நகலினை முகாம் நடைபெறும் நாளன்று எடுத்து வரவேண்டும். தங்களுக்கு ஆர்வம் உள்ள துறைகளின் கீழ் பதிவு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், விவரங்களைப் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பொது மேலாளர், மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை நேரிலோ அல்லது உதவி பொறியாளரை 8925533978 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை பெற்று பயன்பெறலாம் என கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.