Perambalur: Migratory birds from abroad arrive at Pandakapadi Lake!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பாண்டகப்பாடி ஏரியில் அண்மையில் பெய்த மழையாலும் ஏற்கனவே இந்த ஏரியில் வற்றாமல் இருந்த நீரின் காரணமாகவும் ஏரியில் 30 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது.
வழக்கமாக ஆண்டு தோறும் இந்த பருவமழை காலங்களில் ஐரோப்பிய உள்ளிட்ட பல்வேறு கண்டங்களில் இருந்து வலசை போதல் எனப்படும் உணவுக்காக இருப்பிட மாற்றத்திற்காக மற்றும் இனப்பெருக்கத்திற்காக என பறவைகள் மற்றும் பல விலங்கினங்கள் இடம் மாறும் நிலை ஏற்படும்.
சூழ்நிலை மாற்றத்தில் மிக முக்கிய அங்கமாக கருதப்படும் இந்த நிகழ்வு, தற்போது நிலவும் கடுமையான எல் நினோ வெப்ப அலை தாக்கத்தால் ஆசிய கண்டத்தை நோக்கி படையெடுக்கக்கூடிய பறவைகள் மற்றும் விலங்கினங்கள் பெரும்பாலும் வருகைதராத நிலை ஒரு பக்கமும், வழக்கமான பருவ மழை தொடராததாலும் தமிழக உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போதிய மழை இன்றி வெளிநாட்டு பறவைகளின் வரத்து குறைந்துள்ளது.
ஆனால், கடுமையான வெயில் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காணப்படும் பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை அருகே உள்ள பாண்டகப்பாடி கிராமத்தில் ஏரியில் காணப்படும் நீர் மற்றும் அமைதியான சூழல் சைபீரியன் கொக்கு எனப்படும் (செங்கால் நாரை), யூரேசியா ஸ்பூன்பில் எனப்படும் (கரண்டி வாயன்) ஆகிய இரு பறவை இனங்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவைகள் அழையா விருந்தாளியாக தஞ்சமடைந்துள்ளது.
ஏரியில் உணவுக்காக அழகான தனது இறகுகளை விரித்து ஒற்றைக்காலுடன் மீன்களைப் பிடிக்க அசையாமல் காத்திருக்கும் அந்த காட்சி பார்ப்போரை பரவசப்படுத்துகிறது. கொக்கு இனங்களில் ஒன்றான இவை வழக்கமான அளவை விட பெரியதாகவும் கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறத்துடன் வானில் பறந்து வட்டமடித்து தனது கூட்டத்துடன் காற்றில் தழும்பும் நீரில் மெல்ல நடை போட்டு நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
கரண்டிவாயன் வாத்தின் அழகும் கொக்கின் உருவத்திலும் வெள்ளை நிறத்தில் உருவத்தில் பெரியதாய் காணப்படும் இவை ஏரியில் உள்ள மீன்களைப் பிடித்து தனது கூட்டத்துடன் பறந்து பறந்து விளையாடி வருகிறது. காலநிலை மாற்றத்தால் ஐரோப்பிய கண்டத்தில் இருந்து சுமார் 20ஆயிரம் கிலோ மீட்டரை கடந்து உணவு இருப்பிடம் மற்றும் இனப்பெருக்கம் இவற்றிற்காக தமிழகம் நோக்கி வரும் பறவை கூட்டம் இம்முறை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாண்டகப்பாடி ஏரியை தேர்வு செய்து அங்கு தனது கூட்டத்துடன் சுற்றி வருவது காண்போரை வெகுவாக கவர்ந்து வருவதுடன் தீடீர் வேடந்தாங்கல் ஆகமாறியதால் அக்கம் பக்கம் கிராமத்தினர் கூட்டம், கூட்டமாக பார்த்து செல்கின்றனர். தமிழ்நாட்டில் வேடந்தாங்கல், கரை வெட்டி பறவைகள் சரணாலயம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும், அரிய வகை அயல்நாட்டு பறவைகள் பெரம்பலூர் மாவட்ட ஏரிகளில் வலசை போதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.