Perambalur: Minister S.S. Sivashankar inaugurated the project by providing bicycles to 270 students!
பெரம்பலூர் மாவட்டத்தில் 2025-2026 ஆம் நிதிஆண்டிற்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பதினோராம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில், கலெக்டர் ந.மிருணாளினி தலைமையில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 270 மாணவ – மாணவிகளுக்கு ரூ.13.04 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், 2025-2026 ஆம் ஆண்டிற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் 46 பள்ளிகளைச் சேர்ந்த 2,070 மாணவர்களுக்கும், 2,460 மாணவிகளுக்கும் என மொத்தம் 4,530 மாணவ மாணவிகளுக்கு ரூ.2.18 கோடி மதிப்பிலான மிதிவண்டிகள் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தை தொடங்கி வைத்திடும் வகையில், மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் இன்று பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் 138 மாணவர்களுக்கு தலா ரூ.4,900 வீதம் ரூ.6,76,200 மதிப்பிலும், 132 மாணவியர்களுக்கு தலா ரூ.4,760 வீதம் ரூ.6,28,320 மதிப்பிலும் என மொத்தம் 270 மாணவ, மாணவிகளுக்கு ரூ.13,04,520 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரெ.சுரேஷ்குமார், மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவர் ஆதவன், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) செல்வக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) லதா, பள்ளி தலைமையாசிரியர் முத்துசாமி மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.