Perambalur: “Mr. Stalin, had you not been born into the Karunanidhi family, you would not have been able to become even a Councilor!” — AIADMK General Secretary Edappadi K. Palaniswami.
இரு பெரும் தெய்வங்களை வணங்கி, பெரம்பலூர் மாவட்டம், அரியலூர் மாவட்டம், இரண்டு மாவட்டத்தைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியின் சார்பாக, கூட்டணியின் சார்பாக அறிவிக்கப்பட்டு உங்கள் முன் நிற்கின்றார்கள்.
இன்றைக்கு அவர்களுக்கு வாக்கு சேகரிப்பதற்காக உங்களை நாடி வந்திருக்கின்றேன். இந்த, நான் வருகின்ற பொழுது இந்த பிரதான சாலையிலே மக்கள் வெள்ளத்திலே நீந்தி உங்களை வந்து சந்தித்திருக்கிறேன். இந்த பெரம்பலூர் நகரம் அதிர்கின்ற அளவிற்கு மக்களுடைய வெள்ளம். நம்முடைய ஆரவார எழுச்சி, நடைபெறுகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் நம்முடைய வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு அறிகுறி. கிராமத்துல சொல்லுவாங்க ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்று. நம்முடைய வெற்றி உங்களுடைய மகிழ்ச்சி ஆரவாரமே சான்று.
வேட்பாளர்கள் அறிமுகம் நமது கூட்டணியிலே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வெற்றி வேட்பாளராக: அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கு தாமரை எஸ். ராஜேந்திரன், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கு – மாவட்டச் செயலாளர் இளம்பை ஆர். தமிழ்ச்செல்வன் நிறுத்தப்பட்டிருக்கிறார். “இருவருக்கும் இரட்டை இலைச் சின்னத்திலே வாக்களியுங்கள்!
கூட்டணியை சேர்ந்த பாமக டாக்டர் ராமதாஸின் ஆசிபெற்ற வேட்பாளர், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கா. வைத்தி -க்கு மாம்பழச் சின்னத்திலே வாக்களியுங்கள். ஐஜேக: ஐயா பாரிவேந்தரின் ஆசிபெற்ற வேட்பாளராக, குன்னம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சரண்யாவிற்கு இரட்டை இலைச் சின்னத்திலே வாக்களியுங்கள்.
திமுக தலைவர் ஸ்டாலின் மீதான விமர்சனம் இன்றைய தினம் திரு. ஸ்டாலின் எதை எதையோ பேசுகிறார். திரு. நரேந்திர மோடியைப் பற்றிப் பேசுகிறார், பாரதிய ஜனதா கட்சியைப் பற்றிப் பேசுகிறார், என்னைப் பற்றிப் பேசுகிறார். அவர் சொல்வதெல்லாம்: “எடப்பாடி பழனிசாமி பிஜேபிக்கு அடிமை.” “அதிமுக கட்சி அலுவலகம் டெல்லியில் இருக்கிறது.” இப்படித்தான் பேசுவார், வேறு ஒன்றும் பேசுவதற்கு சரக்கு இல்லை. திரு. ஸ்டாலின் அவர்களே, உங்களுக்கு தில்லு, திராணி, தெம்பு இருந்தால் அதிமுகவைப் பற்றிப் பேசுங்கள், அதற்குப் பதில் சொல்லத் தயார். அதை விடுத்து மக்களைக் குழப்பி அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தால் உங்களுக்கு 100 சதவீதம் தோல்விதான்.
ஸ்டாலின் அவர்கள் மோடியைப் பற்றி ஏதேதோ பேசுகிறார். ஆனால் அவரது தந்தை திரு. கருணாநிதி அவர்கள், “நரேந்திர மோடி மிகவும் நல்லவர்” என்று பேசியிருக்கிறார். தன் அப்பா வழியில் நடப்பதாகக் கூறும் ஸ்டாலின், அவர் சொன்னபடி மோடி நல்லவர் என்ற வழியில் அல்லவா நடக்க வேண்டும்?
நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் போல உதயநிதி அவர்கள் பஞ்ச் டயலாக் பேசுகிறார். ஒரு காலகட்டத்தில் திரு. கருணாநிதி அவர்கள் காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்தபோது, “கூடா நட்பு கேடாய் முடியும்” என்று கூறி உறவை முறித்துக் கொண்டார். அதேபோல் 2014-ல் ஸ்டாலின் சொன்னார்:
“யாருடன் கூட்டணி என்பதை விட, யாருடன் கூட்டணி இல்லை என்பதே முக்கியம். இனி ஒருபோதும் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை.” அப்படியிருக்கும்போது இப்போது எதற்கு அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்கள்? உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளவர்கள் யாரென்று பாருங்கள். ஒரு காலத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்தவர்கள் தான் இன்று அங்கு இருக்கிறார்கள். மதிமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் இவர்கள் எல்லாம் திமுகவைப் பற்றி என்னென்ன பேசினார்கள் என்பது திரு. உதயநிதிக்கும், ஸ்டாலினுக்கும் தெரியாதா? இன்று அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு எங்களை விமர்சிப்பதற்கு ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை.
நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். விவசாயம் செய்த கைகள் இவை. யாருக்கும் பயப்படமாட்டேன். திரு. ஸ்டாலின் அவர்களே, நாவடக்கம் தேவை. இல்லையெனில் எங்கள் தொண்டர்களே உங்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள். திரு. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அண்ணா திமுகவில் இருந்த திரு. செந்தில் பாலாஜியைப் பற்றியும், ஒரு பெண்மணியைப் பற்றியும் எவ்வளவு கேவலமாகப் பேசினார் என்பது ஊருக்கே தெரியும். ஆனால், இன்று அவர் திமுகவில் இருப்பதால் ‘நல்லவர்’, ‘வல்லவர்’ என்று புகழ்கிறார்கள்.
திமுகவில் திரு. கருணாநிதி குடும்பத்தைத் தவிர வேறு யாரும் தலைவராகவோ, ஆட்சி அதிகாரத்திற்கோ வர முடியுமா? அது ஒரு சர்வாதிகாரக் கட்சி, ஒரு குடும்பத்திற்காக மட்டுமே செயல்படுகிறது. ஆனால் அண்ணா திமுக ஒரு ஜனநாயகக் கட்சி. இங்கே உழைப்பவர்களுக்கும், விசுவாசமாக இருப்பவர்களுக்கும் என்றும் இடமுண்டு.
ஸ்டாலின் சொல்கிறார், நான் ஏதோ படுக்கையில் படுத்துக்கொண்டே முதலமைச்சர் ஆகிவிட்டேன் என்று. திரு. ஸ்டாலின் அவர்களே, நீங்கள் மட்டும் கருணாநிதி குடும்பத்தில் பிறக்கவில்லை என்றால் ஒரு கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது.
நான் கிளைச் செயலாளர், ஒன்றியப் பொறுப்பு, மாவட்டப் பொறுப்பு, மாநிலப் பொறுப்பு, எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் என படிப்படியாக உழைத்து இந்த நிலைக்கு வந்தவன். உங்கள் அப்பாவின் அடையாளத்தை வைத்து அரசியலுக்கு வந்தவர் நீங்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி யார் என்பது இன்று தமிழ்நாடு முழுவதற்கும் தெரியும். பதவிக்காக எதையும் செய்யத் துணியும் கூட்டத்தை இந்தத் தேர்தலோடு விரட்டியடிப்போம்!”
“வடிவேலு நடிச்ச ஒரு படம்… வடிவேலு நடிச்ச ஒரு படம், ’23-ஆம் புலிகேசி’-ன்னு ஒரு படத்தை பார்த்திருப்பீங்க. பார்த்தீங்களா? அப்படித்தான் திரு. ஸ்டாலின் அப்பாவும், மகன் உதயநிதியும் அஞ்சு வருஷம் இந்த ஆட்சி நடத்துனாங்க. 23-ஆம் புலிகேசி மாதிரி ஆட்சி நடத்தி நாட்டை குட்டிச்சுவராக்கிட்டாங்க.”
“அப்புறம், இன்னொன்னு இந்த மண்ணுல ஒருத்தர் பிறந்தாரு… ஆ. ராசா! அவரு அண்மையில ஒரு ஆடியோ வெளியீட்டு செய்தி… ஆடியோ செய்தி. அது எல்லா வலைதளங்களிலும் வந்திருக்குது, பார்த்தீங்களா? தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய அளவுல பரபரப்பா பேசுகின்ற ஒரு பேசுபொருளாகிடுச்சு.” “இதைத்தாங்க நான் கிருஷ்ணகிரில பேசினேன். அந்த வந்த செய்தியை கிருஷ்ணகிரில பேசினேன். இது மாதிரி ஆ. ராசா அவர்கள் இந்த கருணாநிதி குடும்பத்தைப் பற்றி கிழி கிழி-ன்னு கிழிச்சு வெளியிட்டிருக்காரு அப்படின்னு சொன்னதையும் முதலமைச்சருக்கு பொத்துக்கிட்டு வருது கோவம்!”
“திரு. ஸ்டாலின் அவர்களே, உங்களுக்கு தில்லு, திராணி, தெம்பு இருந்தா ஆ. ராசாவை கண்டிங்க. எங்க மேல கோவப்பட்டு என்ன பிரயோஜனம்? திரு. ராசா திமுக கட்சியினுடைய துணைப் பொதுச்செயலாளர், முன்னாள் அமைச்சர், இப்போ நாடாளுமன்ற உறுப்பினர். ஏன் அவர் ஒரு செய்தியை ஆடியோ மூலமாக வெளியிட்டதாக பரவலான செய்தி? அந்த செய்தியைத்தான் நான் கிருஷ்ணகிரி பொதுக்கூட்டத்துல பேசினேன். இதுல என்ன தவறு இருக்குது? தவறு இருக்கா?”
“நீங்க கண்டிக்க வேண்டியது உங்களுடைய கட்சி துணைப் பொதுச்செயலாளர் ராசா அவர்களை. ஆனா ராசா தெளிவா சொல்லிட்டாரு, ஏன்னா கண்டிச்சா இன்னும் பல ஆடியோ இருப்பதாக அவர் மிரட்டிட்டாரு. அதனால ஸ்டாலினால ஒன்னும் பண்ண முடியல, நடுங்கிக்கிட்டு இருக்காரு. அடுத்த ஆடியோ எப்போ வரப்போகுதோ தெரியல!”
கண்ணுக்கு தெரியாத காற்றுல கூட ஊழல் செய்த ஒரே கட்சி திமுக கட்சி!” “இப்படி நாட்டை சுரண்டுகின்ற கட்சி வேணுமா? மீண்டும் தொடர வேண்டுமா? இங்கதான் கொள்ளையடிச்சது பத்தாதுன்னு, டெல்லில போய் கொள்ளையடிச்சு நம்முடைய மானமே போயிட்டது. மானத்தை கப்பலேத்திட்டாங்க. இன்னைக்கு நம்ம வேட்டியைப் பார்த்தாலே ஒரு மாதிரியா பார்க்குறான் டெல்லிக்கு போனா. 1,76,000 கோடி 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருக்குது.
இந்தியா மட்டுமல்லீங்க, உலக அளவுல பெரிய மெகா ஊழல் 2G ஸ்பெக்ட்ரம் ஊழல்.”
“இப்படி இவ்வளவு ஊழல் செஞ்சுட்டு, இன்னைக்கு மத்தியில காங்கிரஸ் தலைமையில ஆட்சி, திமுக அதுல அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தாங்க. அந்த காலகட்டத்திலே 2G ஸ்பெக்ட்ரத்துல குற்றம் சாட்டப்பட்டு இரண்டு பேர் ஜெயிலுக்கு போனாங்க, தெரியும்ல்ல? யார் ஜெயிலுக்கு போனாங்க? ஆமாம், நான் சொன்னா கோவிச்சுப்பீங்க, இந்த ஊர் மக்களே சொல்லுங்க… ஆமாம், இரண்டு பேர் சிறைக்கு சென்றவர்கள் எப்போ? இன்றைக்கு காங்கிரஸ் ஆளுது, திமுக மத்தியில அமைச்சரவை இடம்பெற்றிருக்கு, அந்த காலகட்டத்திலே அவருடைய காங்கிரஸ் ஆட்சியிலேயே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் இரண்டு பேர்.”
போதைப்பொருள் மற்றும் சட்டம் ஒழுங்கு “இன்றைக்கு நீதிமன்றம் என்ன சொல்லியிருக்குது? தகுந்த ஆதாரத்தைச் சமர்ப்பிக்காத காரணத்தினால் இன்றைக்கு கேஸ் வந்து நிலுவையில்தான் இருக்குது, இன்னும் முடியல. இன்னும் வழக்கு முடியல, எப்ப வேணா அந்த வழக்கு நடக்கும்.”
“அதோட, இந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் எங்கே பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை. விக்குதுல்ல? இன்னைக்கு கிராமம் முதல் நகரம் வரை மூலை முடுக்கு பட்டி தொட்டி எல்லா இடத்திலயும் கஞ்சா விற்பனை அமோகமா விக்குது. இந்த கஞ்சா போதை ஆசாமிகளால்தான் தமிழ்நாட்டில் நிறைய குற்றங்கள் நடக்குது. இன்னைக்கு இந்த போதை ஆசாமிகளால்தான் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் கொடுமை நடக்காத நாளே இல்லை.” “இப்படிப்பட்ட ஒரு மோசமான ஆட்சி தேவையா? அதை கட்டுப்படுத்த இந்த ஆட்சியாளருக்கு துப்பில்லை, புள்ளி கிடையாது. இந்த ஆட்சியில போதை ஆசாமிகளை ஒழிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கல. ஏன்னா திமுக காரர்களே போதை ஆசாமிகளுக்குத் துணை நிற்பதாகப் பரவலான செய்தி. அப்புறம் எங்க போய் போதையை ஒழிக்க முடியும்? போதைப்பொருள் விற்பனையை எப்படி தடுக்க முடியும்?”
தமிழ்நாட்டிலே கஞ்சா விற்பனை முற்றிலுமாக ஒழிக்கப்படும். இன்னும் மூன்று மாதத்தில் தமிழ்நாட்டில் கஞ்சா என்ற பேச்சே இருக்காது. கஞ்சா விற்பனை முற்றிலுமாக ஒடுக்கப்படும், அழிக்கப்படும். முற்றிலுமாக தமிழ்நாட்டிலே விற்பனை என்ற பேச்சுக்கே இல்லாமல் முற்றுப்புள்ளி வைக்கப்படும். அப்புறம் எப்ப பார்த்தாலும் ஸ்டாலின் சொல்கிறார், ‘இந்தியாவிற்கே முதல் மாநிலம் தமிழ்நாடு’ என்று. எதிலே முதல் மாநிலம்? ஊழல் செய்வதிலே முதல் மாநிலம், கடன் வாங்குவதிலே முதல் மாநிலம். இந்தியாவிலேயே பல மாநிலங்கள் இருக்கிறது, அதிலே அதிகமாக கடன் வாங்குவதில் நம்பர் ஒன் மாநிலம் தமிழ்நாடு. நம்மளையெல்லாம் கடன்காரன் ஆக்கியதுதான் மிச்சம்.
திமுக ஆட்சிக்கு வந்து நம்மளையெல்லாம் கடன்காரன் ஆக்கிவிட்டது. 5 லட்சம் கோடி கடன்ங்க! நல்லா சிந்திச்சு பாருங்க. ஏதோ வந்தோம், இந்த கூட்டத்திலே நான் பேசுறதைக் கேட்டோம்னு போயிடாதீங்க. போய் வீட்டுல சிந்திக்கணும். ஒவ்வொருத்தர் மேலேயும் லட்சக்கணக்கான ரூபாய் கடனாக்கிட்டாங்க. நம்மளையெல்லாம் கடன்கார பயலாக்கிட்டாங்க, வீணாப்போச்சு. அஞ்சு வருஷம் நாசம் பண்ணிட்டாங்க, குட்டிச்சுவர் பண்ணிட்டாங்க தமிழ்நாட்டை. கடன் அதிகமாக வைத்து இன்னைக்கு தமிழகம் திவாலாகும் நிலைக்கு கொண்டு வந்த அரசாங்கம் மீண்டும் வேண்டுமா?
யாரை ஏமாற்றுவது? எவ்வளவு கஷ்டம் மக்களுடைய வரிப்பணம். எங்க போச்சு? எதுக்கு கடன் வாங்கினீங்க? என்ன திட்டத்தை கொண்டு வந்தீங்க? நாங்கள் அதிமுக ஆட்சியில் பக்கத்திலுள்ள அரியலூர் மாவட்டத்திலே பிரம்மாண்டமாக அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை கொண்டு வந்தோம். நீ அப்படி ஒரு பெரிய திட்டத்தையாவது கொண்டு வந்திருக்கிறாயா? ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தாயா? ஒரு சட்டக் கல்லூரி கொண்டு வந்தாயா? ஒன்றுமே கிடையாது.
எவ்வளவு கஷ்டம், மக்கள் எப்படி இதையெல்லாம் சமாளிப்பார்கள்? இன்றைக்கு ஆட்சி யாரிடம் கிடைக்கக்கூடாதோ அவரிடம் போய் கிடைத்துவிட்டது. அதனால்தான் இவ்வளவு பெரிய துன்பத்தை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு பக்கம் விலைவாசி உயர்வு, சிந்திச்சு பாருங்க. அரிசி விலை உயர்ந்து போச்சு, ஒரு கிலோவிற்கு 30 ரூபாய் அரிசி விலை உயர்ந்து போச்சு. மளிகைப் பொருட்கள் எல்லாம் உயர்ந்துவிட்டது.
பச்சரிசி, சாப்பாட்டு அரிசி ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 40 ரூபாய், திமுக ஆட்சியில் 75 ரூபாய் – 35 ரூபாய் அதிகம். பொன்னி புழுங்கல் அரிசி ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 45 ரூபாய், திமுக ஆட்சியில் 75 ரூபாய். இட்லி புழுங்கல் அரிசி ஒரு கிலோ 30 ரூபாய் அதிமுக ஆட்சியில், இன்றைக்கு திமுக ஆட்சியில் 55 ரூபாய். கடலை எண்ணெய் ஒரு லிட்டர் 130 ரூபாய் அதிமுக ஆட்சியில், இன்றைக்கு 200 ரூபாய்க்கு விற்கிறது. நல்லெண்ணெய் ஒரு லிட்டர் 250 ரூபாய், திமுக ஆட்சியில் 500 ரூபாய். துவரம் பருப்பு ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 74 ரூபாய், திமுக ஆட்சியில் 120 ரூபாய். உளுத்தம் பருப்பு ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 79 ரூபாய், இன்றைக்கு 120 ரூபாய்.
இப்படி இவ்வளவு விலையேறினால், இது பெரம்பலூர் மாவட்டம், அரியலூர் மாவட்டம் ஏழைகள் நிறைந்த மாவட்டம். அன்றாடம் உழைத்தால் தான் வீட்டில் அடுப்பு எரியும். அப்படிப்பட்ட அடித்தட்டு மக்களுடைய கஷ்டம் இந்த அரசாங்கத்திற்கு புரியவில்லையா? விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தீர்களா? உணவுப் பொருட்கள் விலை இந்த அளவுக்கு உயர்ந்தால் ஏழைகள் பாதிக்கப்படுவார்கள் என்று இந்த அரசாங்கத்திற்கு தெரியாதா?
இதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை, கவலைப்பட மாட்டார்கள். இதுவே அதிமுக அரசு இருந்த பொழுது, நான் முதலமைச்சராக இருந்த பொழுது உணவுப் பொருட்கள் விலை ஏறியபோது அதை கட்டுப்படுத்த 100 கோடி ஒதுக்கீடு செய்து, எந்த உணவுப் பொருள் விலை உயருகிறதோ அந்தப் பொருளை எந்த மாநிலத்தில் குறைந்த விலைக்கு கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து கூட்டுறவு மூலமாக விற்பனை செய்து அந்த விலை உயர்வை தடுத்தோம். இது அதிமுக அரசின் சாதனை. ஏனென்றால் நான் உங்களோடு வாழ்ந்தவன், கிராமத்திலிருந்து வந்தவன். விவசாயத் தொழிலோடு வாழ்ந்தவன். என்ன கஷ்டம், நஷ்டம், துன்பம், துயரம் என்பதை அனுபவ ரீதியாக அனுபவித்தவன். ஏழைகள் படுகின்ற கஷ்டம் ஒருவருக்கு தெரிந்தால் தான் அதை நிவர்த்தி செய்ய முடியும், எனக்குத் தெரிந்தது, என் ஆட்சியில் அதைச் சரி செய்தோம்.
அதேபோல ரேஷன் கடை. ரேஷன் கடையில் போடுகின்ற அரிசி தரமான அரிசி இல்லை என்று பல புகார்கள் வந்து கொண்டிருந்தன. இனி அதிமுக ஆட்சி அமைந்தவுடனே ரேஷன் கடையில் போடுகின்ற அரிசி, நீங்கள் மளிகைக் கடையில் வாங்குவது போல தரமான அரிசி வழங்கப்படும். அது எவ்வளவு செலவானாலும் கவலை இல்லை, ஏழைகளுக்கு அற்புதமான தரமான அரிசி இலவசமாக வழங்கப்படும்.
ஆந்திராவில் அரிசி ஆலை அதிபர்களை அழைத்து எங்களூர் அரிசி இப்படி இருக்கிறது, ஆந்திராவில் இவ்வளவு அருமையாக இருக்கிறதே என்ன செய்யலாம் என்று கேட்டேன். அவர்கள் நவீன அரிசி ஆலையைப் பயன்படுத்தினால் நல்ல அரிசியை வழங்கலாம் என்று கூறினார்கள். அதன் படி தான் சொல்கிறேன், அதிமுக ஆட்சி மீண்டும் வரும்பொழுது ஏழை மக்களுக்கு தரமான அரிசி வழங்கப்படும். அதோடு இப்போது அரிசி மட்டும் தான் இலவசம், அதிமுக ஆட்சி வந்தவுடன் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும்.
பெரம்பலூர், அரியலூர் மாவட்டம் கிராமங்கள் நிறைந்த பகுதி. இங்கே ஏழை மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியைத் தேர்ந்தெடுத்து 2,000 ‘அம்மா மினி கிளினிக்’ திட்டத்தைத் தொடங்கினோம். ஒவ்வொரு கிளினிக்கிலும் ஒரு MBBS டாக்டர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளரை நியமித்தோம். மக்களுக்கு அந்தந்தப் பகுதியிலேயே சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. ஆனால் ஸ்டாலினால் அதைப் பொறுக்க முடியவில்லை, அதிமுகவிற்கு செல்வாக்கு வந்துவிடும் என்று அந்தத் திட்டத்தை ரத்து செய்துவிட்டார். ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதைக் கூட பொறுக்க முடியாதவர் ஒரு மனிதாபிமானமுள்ள மனிதரா? சிந்திச்சு பாருங்க.
அரசாங்கம் ஒரு நல்ல திட்டத்தைக் கொண்டு வரும்போது, அடுத்த அரசாங்கம் அதைத் தொடர்ந்து செய்வது தான் முறை. ஆனால் திமுகவிற்கு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கடுகளவும் கிடையாது. அதிமுக ஆட்சி மலரும் போது மீண்டும் ‘அம்மா மினி கிளினிக்’ கொண்டு வரப்படும்.”
“ஆட்சியில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை கொண்டுவந்து சட்டமன்றத்தில் அமல்படுத்தப்பட்டு, இன்றைய தினம் இந்த இட ஒதுக்கீட்டில் 3000 பேர் மருத்துவக் கல்லூரிக்கு செல்கிறார்கள். 3000 பேர் அரசுப் பள்ளியில் படித்த ஏழை மாணவர்கள் இன்றைக்கு மருத்துவக் கல்லூரிக்கு கிடைத்திருக்கிறது, இது அண்ணா திமுகவின் சாதனை.
அதுமட்டுமல்ல, இந்த இட ஒதுக்கீட்டில் கிடைத்த மாணவர்கள் அத்தனை பேரும் ஏழைகள், அவர்களுக்கு மருத்துவக் கல்லூரி கட்டணம் செலுத்த முடியவில்லை. என்னுடைய கவனத்திற்கு வந்தவுடனே, இந்த இட ஒதுக்கீட்டில் இடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு இனிமேல் மருத்துவக் கல்லூரி கட்டணம் செலுத்தத் தேவையில்லை, அரசாங்கமே செலுத்தும்.
ஒரு ரூபாய் செலவில்லாமல் அரசு பள்ளியில் படிக்கிற மாணவச் செல்வங்கள் மருத்துவக் கல்லூரிக்கு கிடைக்கச் செய்த அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம். இப்படி ஒரு திட்டத்தைதான் கொண்டு வர முடிந்தது. கொரோனா காலம், 11 மாசம் ரேஷன் கடையில் விலையில்லா அரிசி, விலையில்லா பருப்பு, விலையில்லா எண்ணெய், குடும்பத்திற்கு 1,000 ரூபாய் முதற்கட்டமாக கொடுத்தோம். பொங்கல் வந்து தைப்பொங்கல், எல்லா குடும்பத்திற்கும் 2,500 ரூபாய் கொடுத்தோம்.
அரசாங்கத்திற்கு வருவாய் கிடையாதுங்க, ஒரு வருடம் ஜிஎஸ்டி கிடையாது, கலால் வரி கிடையாது, டாஸ்மாக் கடை கிடையாது, பத்திரப் பதிவு வருமானம் கிடையாது, ரோட் டாக்ஸ் கிடையாது. இப்படி ஒரு ரூபாய் வருமானம் இல்லாத போதே சிறப்பான ஆட்சி கொடுத்த அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம்.
அதுமட்டுமல்ல நான் முதலமைச்சராக இருந்தபோது கடுமையான வறட்சி. அப்படி வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இந்தியாவிலேயே வறட்சி நிவாரணம் விவசாயிகளுக்கு கொடுத்த அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம். 2,240 கோடி விவசாயிகளுக்கு கொடுத்தோம். இன்றைக்கு புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரணம் கொடுத்தது அண்ணா திமுக.
இப்படி முதலில் வறட்சி, இரண்டாவது புயல், வெள்ளம், மூன்றாவது கொரோனா. இப்படிப்பட்ட காலத்தில் கூட சிறப்பான ஆட்சி கொடுத்தது அண்ணா திமுக ஆட்சி. திமுக ஆட்சியில் புயல் வந்ததா? வெள்ளம் வந்ததா? கொரோனா வந்ததா? வறட்சி வந்ததா? ஒண்ணுமே இல்லை. கடன் 5 லட்சம் கோடி ஆகிவிட்டது. பெரிய திட்டங்கள் எதுவுமில்லை. ஒரு பக்கம் அண்ணா திமுக ஆட்சி இருந்ததை விட திமுக ஆட்சியில் 1,36,000 கோடி கூடுதலாக வருமானம் வந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் கூடுதலாக வருமானம் அண்ணா திமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில். ஒரு பக்கம் கடன் 5 லட்சம் கோடியாக உயர்ந்து விட்டது. 73 ஆண்டுகால தமிழகத்தில் பல கட்சி ஆட்சி செய்தது. 73 ஆண்டுகளில் 2021 வரை தமிழ்நாட்டின் கடன் 4,85,000 கோடி. அஞ்சு வருஷத்துல 5 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறது. இப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா?
அதுமட்டுமல்ல, இந்த ஆட்சியில் மின் கட்டணம் 67 சதவீதம் உயர்ந்தாச்சு. நகராட்சியில் கடைக்கு 150 சதவீதம் வரி, வருஷம் 6 சதவீதம் உயர்த்தப்படும். வீட்டுக்கு 100 சதவீதம் வரி உயர்வு, வருஷம் 6 சதவீதம் உயர்வு. குடிநீர் வரி உயர்வு, குப்பைக்கு வரி. இப்படி மக்கள் மீது வரி சுமத்திய காரணத்தினால் மக்கள் கடும் சோதனையில் தத்தளிக்க கூடிய நிலையை இந்த ஆட்சியில் பார்க்க முடியும் என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டி அண்ணா திமுக ஆட்சி வந்தவுடனே பல திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
இன்றைக்கு வரிச்சுமை, விலைவாசி இதையெல்லாம் கருத்தில் கொண்டு அண்ணா திமுக ஆட்சி உங்களால் அமைந்தவுடனே முதற்கட்டமாக எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவரவர் வங்கியில் 10,000 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். ஸ்டாலின் தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார், அந்த தேர்தல் அறிக்கையில் பார்த்தீர்கள் என்றால் 8,000 ரூபாய்க்கு கூப்பன் கொடுக்கிறார். அதில்தான் கொள்ளையடிக்க முடியும், அதில்தான் ஊழல் பண்ண முடியும். அதே குடும்பத்திற்கு வருமானம் வரும். நாம அப்படி இல்ல, மக்களுக்கு நேரடியாக அரசு அறிவிக்கின்ற திட்டம் போய் சேர வேண்டும். அந்த அடிப்படையில் வங்கிக் கணக்கில் 10,000 செலுத்தப்படும் என்ற அறிவிப்பு நம்முடைய அறிவிப்பு.
எல்லா குடும்ப அட்டைக்கும் விலையில்லா மிக்ஸி வழங்கப்படும். எல்லா குடும்பத் தலைவிக்கும் மாதம்தோறும் 2,000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும். 5 லட்சம் பெண்களுக்கு 25,000 மானியத்தில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும். அதே போல ஒவ்வொரு தைப்பொங்கலுக்கும் பொங்கல் தொகுப்போடு 1,000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர் மானியமாக வழங்கப்படும். நகரப் பேருந்தில் மகளிர்தான் கட்டணமில்லாமல் பயணம் செய்கிறார்கள். இனி ஆண்களும் நகரப் பேருந்தில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம். அதே போல தீபாவளி பண்டிகை அன்று நம்முடைய தாய்மார்கள் மகிழ்ச்சியோடு பண்டிகை கொண்டாடுவதற்கு அனைத்து தாய்மார்களுக்கும் பட்டு சேலை வழங்கப்படும்.
இன்றைய தினம் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிலாளர் சங்கத்தில் பதிவு செய்த ஆட்டோ ஓட்டுநர்கள் புதிய ஆட்டோ வாங்கினால் 75,000 மானியம் வழங்கப்படும். அதேபோல இன்றைக்கு அம்மா இல்லம் திட்டம், ஏழைகள் அத்தனை பேருக்கும் வீடு இல்லாத ஏழைகள் அனைவருக்கும் ஜாதி மதமே கிடையாது, அனைத்து ஏழைகளுக்கும் அற்புதமான கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும். பட்டியல் மக்கள், ஆதிதிராவிட மக்கள், அருந்ததிய மக்கள், யார் குடும்பத்தில் திருமணமாகி ஆண்கள் தனிக்குடித்தனம் போகின்ற பொழுது வீடு இல்லாமல் சிரமப்படுகிறார்கள். இனி அவர்களை கணக்கிட்டு அரசாங்கமே அப்படிப்பட்ட திருமணமாகி தனிக்குடித்தனம் போகுபவர்களுக்கு அரசாங்கமே சொந்தமாக இடம் வாங்கி அற்புதமான கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும்.
அதேபோல நம்முடைய விவசாயி வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். இப்படி பல திட்டங்கள் 297 அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறோம். விவசாயிகள் குடிமராமத்து திட்டம் கொண்டு வந்தோம், அற்புதமான திட்டம். அந்த திட்டத்தை அண்ணா திமுக ஆட்சி வந்தவுடனே தொடரப்படும். இன்றைக்கு நதியின் குறுக்கே தடுப்பணை கட்டி நிலத்தடி நீரை உயர்த்தி மக்களுக்கு தேவையான நீர் வழங்கப்படும். இது அண்ணா திமுக ஆட்சியின் திட்டங்கள் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து, அதேபோல கட்டிடத் தொழிலாளர்கள் அந்த பணியில் ஈடுபட்டிருக்கின்ற பொழுது அவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தால் அந்த குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும்.
அதேபோல இந்த பகுதியில் மாடுபிடி திருவிழா இருக்கும் என்று நான் கருதுகிறேன். இருக்குதா? அப்படி மாடுபிடி திருவிழா இருந்தால் அதற்கு அரசாங்கமே முன்னின்று நடத்தும்.
கொரோனா காலம், பள்ளி மூடப்பட்டது, கல்லூரி மூடப்பட்டது, மாணவர்கள் மன உளைச்சலில் இருந்தாங்க, எல்லா மாணவர்களுக்கும் ஆல் பாஸ் போட்டு கொடுத்தோம். கல்லூரியில் படிக்கின்ற மாணவர்கள் மன உளைச்சலில் இருந்தாங்க, ஒரு ஆண்டு வீணாகப் போய்விட்டது என்று கருதிக் கொண்டிருந்தாங்க. அப்படிப்பட்ட மாணவ சமுதாயத்திற்கு ஆன்லைனில் வகுப்பு, ஆன்லைனில் தேர்வு, சிறப்பாகப் படிச்சாங்க, சிறப்பாகப் பரீட்சை எழுதினாங்க ஆன்லைனில். அவர்கள் அனைவருமே பட்டம் பெற்றார்கள். இது அண்ணா திமுக ஆட்சியின் வரலாறு. அதே மாதிரி மத்திய அரசாங்கம் அண்மையில் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது, இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று. அதன்படி தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும்.”
அமைச்சர் சிவசங்கர் குறித்து பேச கூட்டத்தில் ஒருவர் கேட்டுக் கொண்டார். “இங்கே.. எதற்காகப் பேசவேண்டாம்.. அவர் டெபாசிட் இழந்துவிடுவார். டெபாசிட் இழக்கச் செய்வீர்களா? அவர் இந்தத் தேர்தலோடு முடிவுகட்டப்படும். நம்முடைய கடும் உழைப்பால், உன்னுடைய பிரச்சாரத்தால் இந்தச் சிவசங்கர் டெபாசிட் இழக்க வேண்டும். செய்வீர்களா?
இங்கே அரியலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம் நம்முடைய 4 சட்டமன்ற உட்புற தேர்தல் பிரச்சாரக் கூட்ட நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்திய இரண்டு மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கும், அவர்களோடு துணை நின்று பணியாற்றிய கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், நம்முடைய கழகத்தைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் இருக்கின்ற நிர்வாகிகள், கூட்டணியிலே பொறுப்பு வகிக்கின்ற நிர்வாகிகள்… வழிநெடுகிலும் சிறப்பித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி!
மக்களைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்! ஸ்டாலின் மாடல் அரசு – பெயிலியர் (Failure) மாடல் அரசு! பை பை (Bye Bye) ஸ்டாலின்! வணக்கம்.” என பேசினார்.
அரியலூர் அதிமுக மாவட்ட செயலாளரும், வேட்பாளருமான தாமரை எஸ். ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ,வும் பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளருமான இளம்பை இரா. தமிழ்ச்செல்வன், முன்னாள் எம்.பி இளவரசன், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பா. இளவழகன், ஜே.கே.என். ராமஜெயலிங்கம், பூவை செழியன் மற்றும் முன்னாள் எம்.பி-க்கள் மருதராஜ், சந்திரகாசி, முன்னாள் அமைச்சர்கள் பா. மோகன், வரகூர் அருணாசலம், பா.ஜ.க நிர்வாகிகள் பி. முத்தமிழ்செல்வன், பரமேஸ்வரி, ஐயப்பன், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கா. செந்தில்குமார், கோ. தமிழ்மாறன், அமமுக மாவட்டச் செயலாளர் எஸ். கார்த்திகேயன், புகழேந்தி, வடியல் முருகன், த.மா.கா-வைச் சேர்ந்த சித்தார்த்தன், எஸ்.ஆர்.எம் குமார் , இந்திய ஜனநாயகக் கட்சியினுடைய தலைவர் அழகர்வேல், அன்பழகன், சி. வெற்றிச்செல்வன், பாலு என்ற பாலசுப்ரமணியன், தமிழ்நாடு மகாஜன கூட்டமைப்பினுடைய தலைவர் ரெங்கராஜ், மக்கள் ராஜ்ஜியம் கட்சி மாநிலத் தலைவர் பி.ஆர். சிவசுப்ரமணி, முத்தரையர் சங்கத்தினுடைய மாவட்டத் தலைவர் செல்வம், மற்றும் தேஜ கூட்டணி கட்சி நிர்வாகிகளே, தலைவர், தொண்டர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கின்ற பல்வேறு பொறுப்பிலிருக்கின்ற பொறுப்பாளர்கள் என சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.