Perambalur: On the orders of Trichy Regional Police IG Balakrishnan, the absconding leader of the gang of Gravel robbers has been sent to jail!
பெரம்பலூர் அருகே கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்த கிராவல் மாஃபியா கும்பல் தலைவன் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் மனோஜ் என்கிற மனோபாலன் (29), பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்சன் ஏஜென்ட் ஆக பணியாற்றி வந்த மனோபாலன், அந்த வேலையை கை விட்டு விட்டு கவுல்பாளையம், எளம்பலூர், செங்குணம், எறையூர், நெடுவாசல் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலையடிவாரங்களில் கடந்த பல வருடங்களாக கிராவல் மண் உள்ளிட்ட கனிம வளத் திருட்டில் ஈடுபட்டு வந்தான்.
அதிகளவில் பணம் கொட்டும் தொழில் என்பதால், கனிம வளம், வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை என அனைத்து தரப்பினருக்கும் பெருந்தொகையை லஞ்சமாக கொடுத்து சரி கட்டி, அவர்கள் ஆதரவுடன் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான கனிம வளங்களை கொள்ளையடித்து வந்த இவன் மீது பெரம்பலூர் காவல் நிலையத்தில் கனிம வள கொள்ளை தொடர்பாக 303(2) BNS Act and 21(1)MM Act என்ற இரு பிரிவுகளின் கீழ் மத்திய மண்டல ஐஜி., பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட தகவலை அறிந்து தலைமறைவானன். இந்நிலையில் மனோஜ் என்கிற மனோபாலனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் பெரம்பலூர் அருகே பதுங்கி இருந்த மனோபாலனை திருச்சி மத்திய மண்டல ஐஜி., பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், பெரம்பலூர் மாவட்ட தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து குன்னம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-2ல் ஆஜர் படுத்தி, வரும் 09.03.2026 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, மனோஜ் என்கிற மனோபாலன் பெரம்பலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டான்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து தரப்பினருக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த கிராவல் மாஃபியா கூட்டத்தின் தலைவனான மனோபாலன் கைது செய்யப்பட்ட சம்பவம் கனிம வளக் கொள்ளையர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே பெரம்பலூரில் உள்ள ஒரு பிரபல ரவுடி ரவிகரணின் வலதுகரமாக தன்னை காட்டிக் கொண்டு, ஊரில் உள்ள அனைவரையும் மிரட்டிக்கொண்டு நண்பர்கள் புடை சூழ சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த மனோஜ் என்கிற மனோபாலன், பெரம்பலூர் மாவட்டத்தின் முன்னாள் காவல் துறையை சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு வாரத்திற்கு 7 லட்சம் ரூபாய் என மாதம் 28 லட்ச ரூபாயை அந்த அதிகாரிக்கு கீழ் பணிபுரிந்த ஒருவர் மூலம் லஞ்சமாக கொடுத்து வந்தான் என கூறப்படும் நிலையில்,இது குறித்தும் ரகசியமாக காவல் துறையினர் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கிராவல் மாஃபியா கூட்டத்தின் தலைவன் மனோபாலன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.