பெரம்பலூர்: அரசின் கவனத்தை ஈர்க்க ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்; கல்குவாரி கிரஷர் மற்றும் எம்.சான்ட் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

schedule
2026-08-28 | 17:33h
update
2026-08-28 | 17:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: One-day token strike to draw the government’s attention; Stone Quarry, Crusher, and M-Sand Owners’ Association announces.

பெரம்பலூர் மாவட்ட கல்குவாரி கிரஷர் மற்றும் எம்.சான்ட் உரிமையாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், மாவட்ட சங்க அலுவலகத்தில் பெரம்பலூர் தழுதாழை சி. பாஸ்கர் தலைமையில் நடந்தது. அப்போது அச்சங்கத்தின் கவுரவ தலைவரும், முன்னாள் குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி. ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தாவது: பெரம்பலூர் மாவட்ட கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்களுக்கு இன்னும் 6 மாதம் முதல் 1 வருடம் வரை குத்தகை காலம் பாக்கி இருக்கிறது. கல் வெட்டி எடுப்பதற்கான அளவும் மீதமிருக்கிறது. ஆனால், எந்தவித முறையான அளவீடோ, முன்னறிவிப்போ இல்லாமல் சுரங்கத்துறை அதிகாரிகள் பழைய 30 குவாரிகளில் 20 குவாரிகளைத் திடீரென மூடியிருக்கிறார்கள். கடந்த காலத்தில் முறையாக அளந்து பர்மிட் கொடுத்த குவாரிகளை, இப்போது ட்ரோன் வைத்து ஏனோதானோவென்று அளந்து, லட்சக்கணக்கான கியூபிக் மீட்டர் அதிகமா உடைச்சிட்டீங்க என்று பொய் வழக்குப் போட்டு, அபராதம் விதிக்கிறார்கள். எங்களை ஏதோ குற்றவாளிகள் போலச் சித்தரிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக 39 குவாரிகள் ஏலம் விடப்பட்டு, சுமார் ரூ.156 கோடி அரசுக்கு ஏலத்தொகையாகக் கட்டப்பட்டுள்ளது. ஆனால், சுரங்கத்துறை ஏலம் விட்ட 6 குவாரிகளை, சியா கமிட்டி இங்கு கல் இல்லை, உடைக்க அனுமதி கிடையாது என்று ரத்து செய்திருக்கிறது. பல கோடிகள் அரசுக்குக் கட்டிய குத்தகைதாரர்கள் இன்று தொழிலை தொடங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

பல கோடிகள் கட்டி ஏலம் எடுத்த பிறகு, சியா அனுமதியும், பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டமும் குத்தகைதாரர்களா நடத்த வேண்டும்? அதை அரசாங்கம் அல்லவா முடித்துவிட்டு ஏலம் விட வேண்டும்? பல ஆண்டுகளாக தொடர்ந்து ஏலம் விடப்பட்டு வரும் நடைமுறையை மறைத்து, சட்டமன்றத்தில் (மாண்புமிகு) கனிமவளத்துறை அமைச்சர் ஒரே நாளில் பெரம்பலூரில் மலைகள் காணாமல் போய்விட்டது என்று பொத்தாம் பொதுவாகப் பேசியது எங்களுக்கு மிகுந்த வேதனையை தருகிறது. எனவே, அரசு அதிகாரிகள், குத்தகைதாரர்கள் மற்றும் (மாண்புமிகு) அமைச்சர் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து நேருக்கு நேர் பேசி இந்தப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும்.

அரசு அதிகாரிகள் தமிழக அரசிடமும், அமைச்சர்களிடமும் நல்ல பெயர் வாங்குவதற்காக தவறான கருத்தை கூறி வருகின்றனர். முறையாக ஏலம் எடுத்து, வாரம் தோறும் அரசு அதிகாரிகளிடம் முறையாக பர்மிட் பெற்று மாதம் ஒருமுறை, 3 மாதம் ஒரு முறை என அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வெட்டி எடுக்கப்பட்ட குவாரிகளில் எவ்வாறு வரம்பு மீறி அளவுக்கு அதிகமாக எடுக்க முடியும். 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அளவை வைத்து கணக்கிடாமல் பொதுவாக முதலில் கணக்கீடு செய்து அதனை வைத்து குவாரிகளை கணக்கீடு செய்ய வேண்டும்

அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வருகின்ற 31.8.26 ந் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்கிறோம். அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், மதுரை, சிவகங்கை மாவட்டங்களைப்போல, மாநில சங்கம் மூலமாக ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிலும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும். மாவட்டத் தலைவர் எஸ். நந்தகுமார், மாவட்ட செயலாளர் சத்யராஜ், பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். பொருளாளர் ரவி நன்றி கூறினார் .

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.08.2026 - 17:35:03
Privacy-Data & cookie usage: