Perambalur: “Over the past 10 years, I have brought development projects worth more than ₹100 crore to Arumbavur; vote for the ‘Two Leaves’ symbol!” — Candidate Tamilselvan campaigns.
பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட அரும்பாவூர் பேரூரில் அதிமுக வேட்பாளர் இளம்பை இரா. தமிழச்செல்வன், கூட்டணி கட்சியினருடன் சென்று நேற்று தீவிர பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தார். பாலக்கரை பகுதியில் அவர் பேசியதாவது:
“வர்த்தகப் பிரமுகர்களே, விவசாயப் பெருங்குடி மக்களே, படித்தவர்களே, அரசியல் நன்கு தெரிந்தவர்களே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகளே!
இந்தியத் திருநாட்டை வல்லரசாக்குவேன் என்று நாளும் உழைத்துக் கொண்டிருக்கிற பாரதிய ஜனதாவினுடைய நம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினுடைய ஆதரவு பெற்ற வேட்பாளராக, இன்றைக்கு தமிழினப் போராளி மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியினுடைய தலைவர் அவருடைய ஆதரவு பெற்ற வேட்பாளராக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினுடைய ஆதரவு பெற்ற வேட்பாளராக, தமிழ் மாநில காங்கிரஸ்-னுடைய ஆதரவு பெற்ற வேட்பாளராக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினுடைய ஆதரவு பெற்ற வேட்பாளராக, நாயுடு கூட்டமைப்பினுடைய ஆதரவு பெற்ற வேட்பாளராக…
மொத்தத்தில் நல்லவர்கள், இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒருங்கிணைந்து அமைத்திருக்கிற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் அத்தனைப் பொறுப்பாளர்களே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய முதற்கண் மாலை வணக்கத்தைப் பணிவோடு உங்கள் கமல பாதங்களிலே சமர்ப்பிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இன்றைக்கு எடப்பாடியார் முதலமைச்சர் ஆக வேண்டும். முதலமைச்சர் ஆனால் தான் ஒரு விவசாயினுடைய கஷ்டம் ஒரு விவசாயிக்குத் தெரியும். ஆகையால், இரட்டை இலைச் சின்னத்திலே முத்திரையிட்டுப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நீங்களே என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும். உங்களில் ஒருவனாக, உங்கள் வீட்டுப் பிள்ளையாக இரண்டறக் கலந்து உங்களுடன் நன்கு பழகி உங்களுடைய பேரன்பைப் பெற்றவன்.
இந்த அரும்பாவூர் பேரூராட்சிக்கு மட்டும் 10 ஆண்டுகாலத்தில் 100 கோடி ரூபாய்க்கும் மேலான வளர்ச்சிப் பணிகளைக் கொண்டு வந்து அத்தனைப் பகுதிகளையும், அது கழிவுநீர் சாக்கடை வசதியானாலும், தார் ரோடு சாலையானாலும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வசதியானாலும் என அத்தனைப் பகுதிகளுக்கும் ஒவ்வொன்றையும் என்னால் கோடிட்டுக் காட்டினாலும் நேரம் போதாது.
100 கோடி ரூபாய்க்கும் மேலான வளர்ச்சிப் பணிகளை அரும்பாவூர் பேரூராட்சிக்குக் கொண்டு வந்திருக்கிறேன். இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியில் இங்கே வெற்றி பெற்ற ஒருவர், ஏதாவது உருப்படியான மக்கள் மனதிலே நிற்கிற திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்களா என்று சொன்னால் அவர்கள் வருகிறபோது கேள்வி கேளுங்கள். இல்லை, அடிக்கடி நீங்கள் பார்த்ததாவோ அந்த முகத்தைப் பார்த்ததாவோ உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என்பதைக் கேளுங்கள்.
ஆனால், நான் மாறுபட்டவன். வாக்களித்த நீங்களே எஜமானர்கள், உங்கள் வாக்கைப் பெற்ற எம்.எல்.ஏ என்பவன் ஒரு வேலைக்காரன் என்பதைக் கருத்திலே கொண்டு, உங்களிடத்திலே கனிவோடு எளிமையோடு பழகிப் பல வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம்.
அதிலே முன்னோடித் திட்டம் தான் வேப்பந்தட்டையிலே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைக் கொண்டு வந்து ஏழைப் பிள்ளைகள் 1400 பேர் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இது பசுமரத்தாணி போல் ஓங்கி உயர்ந்து வேப்பந்தட்டையில் நின்று கொண்டிருக்கிறது. கல்வி அறிவை வளர்க்கிற ஒரு ஆலயமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியில், உங்களால் எம்.எல்.ஏ ஆன தமிழ்ச்செல்வன் கொண்டு வந்திருக்கிறேன்.
நீண்டநாள் கோரிக்கையான விவசாயிகளுடைய கோரிக்கை, நம்முடைய விசுவக்குடி திட்டம். 34 கோடியிலே அந்த அணைக்கட்டைக் கொண்டு வந்து விவசாயிகளின் பாசன வசதிக்கு ஏற்பாடு செய்தவன், சிறுகுறு விவசாயினுடைய புதல்வன், உங்கள் வீட்டுப் பிள்ளை தமிழ்ச்செல்வன் என்பதை இந்த நேரத்திலே சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
நம்முடைய பெரியேரியினுடைய கடைக்கால் உடைக்கப்பட்டு, அதற்குக் நடைமேடை அமைக்கப்பட்டு, சீர் செய்யப்பட்டு விவசாய நிலங்களுக்கு மழைக்காலங்களில் நீர்கள் சீராகச் செல்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தவன்.
அது மாத்திரமல்ல, நீண்டநாள் கோரிக்கையான சின்னமுட்லு அணைத் திட்டம் கிடப்பிலே இருக்கிறது. அதற்கு நான் 2018-ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது ஆய்வுப்பணி மேற்கொள்வதற்கு 10 லட்சத்தை நிதியை ஒதுக்கி, ஆட்சி மாற்றம் வந்தவுடன் இன்றைக்கு ஸ்டாலின் அரசாங்கம் அண்ணா தி.மு.க-விலே கொண்டு வந்த திட்டம் என்கிற காரணத்தினால் அந்தத் திட்டத்தைக் கிடப்பிலே போட்டுவிட்டார்கள்.
உங்களில் தோழனாக, உங்கள் வீட்டுப் பிள்ளையாக உங்கள் ஆதரவோடு மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகப் போகும்போது சின்னமுட்லு அணைத் திட்டத்தைக் கொண்டு வருவேன், கொண்டு வருவேன்! வாக்களியுங்கள், வெற்றி பெறச் செய்யுங்கள் என்று உங்கள் பாதம் பணிந்து கேட்டு நன்றியோடு விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!” என பேசினார்.
அரும்பாவூர், அ. மேட்டூர் பகுதிகளில் பாமக, பாஜக, தமாக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுடன் வாக்குகளை சேகரித்த அவருக்கு, பெண்கள் தெருக்கள் தோறும் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு அனுப்பி வைத்தனர். குரும்ப கவுண்டர்கள் சமூக சங்கதின் சார்பில் வேட்பாளர் தமிழச்செல்வனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கவும் முடிவு செய்து அறிவிப்பு செய்தனர்.
அரும்பாவூர் பேரூர் செயலாளர் விவேகானந்தன், மேட்டூரை சேர்ந்த ரமேஷ், சிக்கன், பேரூர் அதிமுக நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர் டி.என். சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றிய செயலாளர் கண்ணுசாமி, செல்வம், பாஜக முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வராஜ், பாஜக மாவட்ட பொறுப்பாளர் உமாஹைமாவதி, தேவேந்திர பாலாஜி, தவசி. அன்பழகன், உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பாமக கண்ணபிரான், இமயவரம்பன், ரவி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் திராளக கலந்து கொண்டு வாக்குகளை சேகரித்தனர்.
முன்னதாக நேற்று காலை, வெண்பாவூர், பெரியவடகரை, பாண்டகபாடி, மாவிலங்கை, நெற்குணம் காலனி, நெற்குணம், நூத்தப்பூர், பாளையம், உடும்பியம், கள்ளப்பட்டி, மேற்கு பெரியம்மாபாளையம், அம்பேத்கர் நகர், கிழக்கு பெரியம்மாபாளையம், இந்திரா நகர், வெங்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு இரட்டை இலை சின்னத்திற்கு அதிமுக வேட்பாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டார்.