Perambalur: Party funds of ₹50 per day being collected from workers of the 125-day employment scheme! Video of the heated argument goes viral!!
பெரம்பலூர் மாவட்டத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட 100 நாள் வேலைத்திட்டம், 125 நாட்களாக மாற்றம் செய்யப்பட்டு, கடந்த 1ம் தேதி முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு இப்பணிக்கு வருபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.450 வரை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. 125 நாட்கள் பணிக்கு சென்றால் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.56,250 வரை சம்பளம் கிடைக்கும்.
இப்பணிக்கு வருபவர்களிடம் நாள் ஒன்றுக்கு தலா ரூ. 50 வசூலிப்பதாக சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது. செட்டிகுளம் கிராமத்தில் நல்ல தண்ணீர் குளத்தின் அருகே வரத்து வாய்க்கால் பணி நடந்து வருவதாகவும், அதில் சுமார் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி செய்வதாகவும், வாரம் 6 நாட்கள் வேலை நடப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை கண்காணிக்க பணித்தள பொறுப்பாளர், ஊராட்சி செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அங்கு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடம் நாள்தோறும் ரூ.50 கட்டாயம் வசூல் செய்யப்படுவதாகவும், அந்த வீடியோவில் தொழிலாளர்கள் ஒரு கட்சியை சேர்ந்த சிலர் 2 பேர் தினமும் வந்து ஒவ்வொரு தொழிலாளர்களிடமும் கட்சி நிதி (பார்ட்டி பண்ட்) என கூறி ரூ.50 வசூலிக்கின்றனர். ரூ.50 கொடுத்தால் தான் உங்களுக்கு சம்பளம் முழுமையாக கிடைக்கும். அதேபோல் தொடர்ந்து வேலையும் கிடைக்கும் என்று மிரட்டுகிறார்கள். வேறு வழியின்றி நாங்களும் 50 ரூபாய் கொடுத்து விடுகிறோம் என்றும் வீடியோவில் வாக்குவாதம் செய்கின்றனர். மேலும், இரு கட்சியினர் இடையே நீங்கள் உங்கள் ஆட்சியில் வாங்க வில்லையா என்கிறார். அதற்கு அவர் நாங்கள் இவ்வளவு வாங்கவில்லை. என வாக்குவாதம் தொடர்ந்து நடக்கிறது. இந்த வீடியோ தொடர்பாக ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் உரிய அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தொழிலாளர்களிடம் வசூல் செய்த பணம் யார் யாருக்கு பங்காக சென்றுள்ளது என்பதையும் விளக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.