பெரம்பலூர்: மக்களுக்கு தேவையான மரக்கன்றுகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்; கலெக்டர் தகவல்!

schedule
2025-04-26 | 17:36h
update
2025-04-26 | 17:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: People can get the necessary saplings for free; Collector informs!

பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட எசனை, இரட்டைமலை சந்து, ஆலம்பாடி, நாரணமங்கலம், காரை மற்றும் ஜெமீன் ஆத்தூர் ஊராட்சிகளில் நாற்றங்கால் முறையில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதன் செயல்பாடுகளை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எசனை இரட்டைமலை சந்து பகுதியில் வனத்துறையின் சார்பில் ”பசுமை தமிழ்நாடு” என்ற திட்டத்தின் கீழ் 10,000 எண்ணிக்கையிலான புங்கன், வேம்பு, மகாகனி, பாதாம், நீர்மருது, ஈட்டி, நாவல், பூவரசு, தேக்கு, செம்மரம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நாற்றங்கால் முறையில் வளர்க்கப்பட்டு வருவதை கலெக்டர் ஆய்வு செய்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக வளர்க்க விரும்பும் மரங்களை கேட்டறிந்து மரக் கன்றுகளை வழங்கிட வனச்சரக அலுவலர்களுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் அறிவுறுத்தினார். மேலும், காகித உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சவுக்கு மரக்கன்றுகளை விவசாயிகளின் விருப்பத்தின்பேரில் தேவையான எண்ணிக்கையில் மரக்கன்றுகளை உருவாக்கி விவசாயிகளிடம் ஆதார் அட்டை நகல், சிட்டா, புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்கள் பெற்று இலவசமாக ஏக்கருக்கு 3,800 முதல் 4,000 மரக்கன்றுகள் வரை வழங்கிட வனத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Advertisement

தொடர்ந்து, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலம்பாடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.18.04 லட்சம் மதிப்பீட்டில் 3,000 மரக்கன்றுகளும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாரணமங்கலம் ஊராட்சியில் ரூ.9.95 லட்சம் மதிப்பீட்டில் 25,000 மரக்கன்றுகளும், ஜெமீன் ஆத்தூர் ஊராட்சியில் ரூ.13.49 லட்சம் மதிப்பீட்டில் 25,000 மரக்கன்றுகளும் பசுமை குடில் அமைத்து சொட்டு நீர் மற்றும் சுழல் தெளிப்பான் முறையில் புங்கன், வேம்பு, மகோகனி, பாதாம், நாவல், பூவரசு உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி, மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வரும் பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.15 லட்சம் மதிப்பீட்டில் காரை ஊராட்சியில் காரை சமத்துவபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் நாற்றங்கால் முறையில் மரக்கன்றுகள் வளர்க்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

பின்னர், மரக்கன்றுகளுக்கு கோடை காலங்களில் அதிகமான தண்ணீர் விட்டும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் மூலமாக முறையாக பராமரிப்பு செய்திடவும், 5 அடிகளுக்கு மேல் வளர்ந்துள்ள மரக்கன்றுகளை அந்தந்த ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளுக்கு வழங்கி சாலைகள், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடங்கள், நீர்நிலைகள், அரசு அலுவலகங்களில் நட்டு பராமரித்திடவும், விருப்பத்தின் அடிப்படையில் கேட்கும் பொதுமக்கள், பல்வேறு வகையான நிறுவனங்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கிட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். பெரம்பலூர் வன சரகர் பழனிக்குமார், வனவர் பிரதீப் குமார், பெரம்பலூர் பிடிஓ செல்வகுமார், ஆலத்தூர் பிடிஓ ஜெயபால், பிரேமலதா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.06.2026 - 03:40:22
Privacy-Data & cookie usage: