பெரம்பலூர் மாவட்ட ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி; முதலமைச்சருக்கு விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் நன்றி தெரிவித்தனர்.

schedule
2024-06-28 | 14:58h
update
2024-06-28 | 14:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Permission to take silt from district lakes; Farmers thanked the Chief Minister in the redressal meeting.

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் க.கற்பகம், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் பேசுகையில்,

ராமராஜ்: பெரம்பலூர் மாவட்டத்தில் ஜமாபந்தி சிறப்பாக நடைபெற்றமைக்கு நன்றி தெரிவித்தார். கோனேரிப்பாளையம் அருகே கல்லாற்றில் தடுப்பணைகள் கட்டித்தர வேண்டுமெனவும் விவசாயிகளுக்கு மானியத்தில் மக்காச்சோளம் மற்றும் பருத்தி விதைகள் வழங்கவேண்டுமென கேட்டுக்கொண்டார். செல்லதுரை: குடிநீர் பற்றாக்குறை இன்றி வழங்க வேண்டுமெனவும் பால் உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டுமெனவும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திட வழிவகை செய்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, நீர்நிலைகளில் வண்டல் மண் அள்ளும் நடைமுறையினை எளிமைப்படுத்தியதற்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்ட அவர், பின்னர் தெரிவித்ததாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, எந்தெந்த பகுதிகளில் என்றைக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட வேண்டும் என்ற பட்டியலிடப்பட்டு அதனடிப்படையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றது. ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அரசு நிலங்கள் மீட்டெடுக்கப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றது.

Advertisement

குடிசை வீடுகளற்ற தமிழ்நாட்டை உருவாக்கவும், வீடுகளே இல்லாத நபர்களே இருக்கக்கூடாது என்ற உயரிய எண்ணத்திலும் ”கலைஞரின் கனவு இல்லம்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு அரசின் சார்பில் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வீடுகளற்ற நபர்கள், குடிசை வீடுகளில் உள்ள நபர்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளார்கள். இத்திட்டம் குறித்து கிராம மக்களுக்கு விளக்குவதற்காக 30.06.2024 அன்று சிறப்பு கிராம சபைக்கூட்டங்கள் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்தில் நீங்களும் கலந்துகொள்ள வேண்டும். அந்த கிராம சபைக் கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்லத்திற்கான பயனாளிகள் பட்டியல் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

விவசாயிகளின் பயன்பாட்டிற்கு ஏரி குளங்களில் வண்டல் மண் எடுக்கும் நடைமுறையினை அரசு எளிமைப் படுத்தியுள்ளது. அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 66 ஏரிகளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 176 ஏரி குளங்கள் என மொத்தம் 242 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை விவசாயிகள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மழைக்காலத்திற்கு முன்பாகவே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் மதகுகளின் நிலை குறித்து பொதுப்பணித்துறையினர் உரிய ஆய்வு மேற்கொண்டு சிறு பழுதுகள் உள்ள மதகுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

குன்னம் மற்றும் வேப்பந்தட்டையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று குன்னம் வட்டத்தில் காடூர், கோவில்பாளையம் மற்றும் அகரம் சீகூர் பகுதிகளிலும், வேப்பந்தட்டை வட்டத்தில் அரும்பாவூர் மற்றும் பூலாம்பாடி பகுதிகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. உரங்கள் விற்பனை நிலையங்களில் முறையான விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படுத்தப்படவில்லை என விவசாயிகளிடமிருந்து புகார்கள் வருகின்றது. எனவே, வேளாண்மைத்துறை அலுவலர்கள் அவ்வப்போது இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும். விலைப்பட்டியல் இல்லாத, அதிக விலைக்கு உரங்கள் விற்கும் விற்பனை நிலையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.

முன்னதாக வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரிவாக விளக்கிக் கூறினார்கள். இத்திட்டங்கள் குறித்த விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தனர்.

பொதுத்தகவல்:
பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மி.மீ, ஆகும். 2024 ஜூன் மாதம் பெய்ய வேண்டிய மழையளவு 32 மி.மீ., பெய்த மழையளவு 41.09 மி.மீ, ஆகும். பயிர் சாகுபடி பரப்பை பொறுத்தவரை தற்சமயம் 681 எக்டர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விதை கொள்முதலை பொறுத்தவரை விவசாயிகள் பயன்பாட்டிற்காக நெல் 62.849 மெ.டன்கள் இருப்பில் உள்ளது. சிறுதானியங்களில் 2.96 மெ.டன், பயறு வகைகளில் 2.02 மெ.டன்கள் இருப்பில் உள்ளது. எண்ணெய்வித்து பயிர்களில் 17.719 மெ.டன்கள் இருப்பில் உள்ளது.

தோட்டக்கலை துறையின் மூலமாக தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் பரப்பு அதிகரித்தல், சிப்பம் கட்டும் அறை பணிகளும், மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் மாடித்தோட்ட தளைகள், பழச்செடிகள் தொகுப்புகள் வழங்குதல், பண்ணை கருவிகள் மற்றும் உபகரணங்கள் விநியோகம் மற்றும் காளான் குடில் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.

வேளாண் பொறியியல் துறை மூலமாக உழுவை வாடகை திட்டம், வேளாண்மை இயந்திரமயமாக்கல் உப இயக்கம் – தனிநபர் விவசாயிகளுக்கு மானியம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டங்களில் உருவாக்கப்பட்ட அமைப்புகளை தூர்வாருதல், மின்மோட்டார் மாற்றிக் கொள்ள மானியம் வழங்குதல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.08.2026 - 22:13:52
Privacy-Data & cookie usage: