Perambalur: Phase 2 begins in Oranil Tamil Nadu; Interview with District DMK in-charge V. Jagatheesan!
பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில், மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்ட மன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்தாவது:
கடந்த ஜூலை 1-ஆம் தேதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு (OTN) இயக்கத்தை தொடங்கி வைத்தார். இன்று நாம் எதிர்கொள்ளும் பண்பாடு, பொருளாதார மற்றும் அரசியல் அநீதிகளுக்கு எதிராக தமிழ்நாட்டின் ஒவ்வொருவரையும் ஒன்றிணைக்கும் இயக்கமாகும். தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் கீழடி புறக்கணிப்பு, இந்தி திணிப்பு, தமிழ்நாட்டுக்கான நிதி மறுப்பு, NEET போன்ற நியாயமற்ற தேர்வுகள், கூட்டாட்சித் ததுவத்தும் சிதைப்பு மற்றும் நமது அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையிலான தொகுதி மறுவரையறை சதி என தமிழ்நாட்டின் மண், மொழி மற்றும் மானத்தின் மீது தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றையெல்லாம் எதிர்த்து தமிழ்நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் வகையில் தொடங்கப்பட்டதுதான் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு.
ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்ட 70 நாட்களில் கழகத்தின 7 வட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 68,000 வாக்குச்சாவடிக்களிலும் உள்ள ஒவ்வொரு வீட்டையும் சென்று சந்தித்துள்ளோம். தமிழ்நாடு முழுதுவதும் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 1 கோடியைத் தாண்டியுள்ளது என்பதை சமீபத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தலைவர் அறிவித்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் அதிகளவில் குடும்பங்களை சேர்த்து சாதித்து உள்ளோம். இணைக்கப்பட்ட குடும்பங்கள் தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்க அணி திரண்டுள்ளனர்.
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் இரண்டாம் கட்டம் தொடங்குகிறது. ஓரணியில் தமிழ்நாடு குடும்பங்கள் அனைத்தும் வாக்குச்சாவடி மற்றும் மாவட்ட அளவில் ஒன்றுகூடி, ஓரணியில் நின்று போராடி தமிழ்நாட்டைப் பாதுகாக்கும் தீர்மானங்களை முன்மொழிந்து ஏற்றுக்கொள்கிறார்கள். செப் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்- ஓரணியில் தமிழ்நாடு வாக்குச்சாவடி அளவிலான உறுதிமொழி முன்மொழிவுக் கூட்டங்கள்
முதல் கட்டமாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் தமிழ்நாட்டைக் காக்கும் உறுதிமொழியை முன்மொழியும் கூட்டம் நடைபெறுகிறது. இன்றைய தினம், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்ட குடும்ப உறுப்பினர்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் ஒன்றுகூடி முன்மொழியும் தீர்மானங்களுக்கு முழு ஆதரவையும் வழங்குவார்கள். உறுதி மொழி ஏற்பார்கள்.
இதன் இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 17 அன்று கரூரில் நடைபெறும் லட்சக்கணக்கானோர் பங்குபெறும் முப்பெரும் விழாவில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலிருந்தும் முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சரால் நிறைவேற்றப்படும். இத்தீர்மானங்கள் அங்கு கூடியிருக்கும் மற்ற தலைவர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவராலும் ஆதரிக்கப்படும்.
மூன்றாம் கட்டமாக, செப்டம்பர் 20 அன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ தீர்மானக் கூட்டங்கள் நடைபெறுகிறது. முப்பெரும் விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மாவட்டக் கூட்டங்களில் கூடியிருக்கும் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்த குடும்பங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கை உயர்த்தி அல்லது ஒருமித்த குரலில் ஏற்கப்படும். ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்த ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்களும் “தமிழ்நாட்டை தலைகுனியவிட மாட்டேன்” என ஒரே குரலில் உலகிற்கு பிரகடனம் செய்யும் விதமாக இந்த கூட்டங்கள் அமையும் என்று தெரிவித்தார்.
மேலும், கூட்டத்தில், நான், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலை குனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன். நான், வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் SIR-க்கு எதிராக நிற்பேன். தமிழ்நாட்டைத் தலை குனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன். நான், நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன். நம் மாணவர்களுக்கு உரிய நிதிக்காகப் போராடுவேன். ஒருபோதும் தமிழ்நாட்டைத் தலை குனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன். நான். தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன். எதற்காகவும் தமிழ்நாட்டைத் தலை குனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன். நான், பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலை குனிய விடமாட்டேன் என உறுதி ஏற்பார்கள் என தெரிவித்தார்.