Perambalur: Pongal cultural festival organized by the Department of Art and Culture; Collector extends invitation!
தமிழ்நாட்டின் பாரம்பரிய பெருவிழாவாக திகழும் தைத்திருநாள் பொங்கலை சிறப்பிக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ந்து கொண்டாடும் நோக்குடன் தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறையால் சென்னையில் ”சென்னை சங்கமம், நம்ம ஊருதிருவிழா” நடத்தப்படுவது போன்று நமது பெரம்பலூர் மாவட்டத்திலும் பொங்கல் கலைவிழா நடத்தப்படவுள்ளது.
பொங்கல் பண்டிகையின் உண்மையான பண்பாட்டு சிறப்புகளை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதோடு பொங்கல் விடுமுறையை மகிழ்ச்சியுடனும் ,உற்சாகத்துடனும் கொண்டாட பொதுமக்களை ஈர்க்கும் வகையில் இந்த விழா வடிவமைக்கப்பட்டுள்ளது. கிராமிய வாழ்வியல், விவசாய மரபு, பாரம்பரிய உணவுகள் மற்றும் பழக்க வழக்கங்களை நினைவுட்டும் வகையில் நிகழ்ச்சிகள் கலை நடத்தப்படவுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பாலக்கரை அருகில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் பாதையில், அமைந்துள்ள திடலில் 15.01.2026 மற்றும் 16.01.2026 ஆகிய இரண்டு நாட்கள் மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை பொங்கல் கலைவிழா கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. பரதநாட்டியம், நையாண்டிமேளம், கரகம், காவடி, தப்பாட்டம், மயிலாலாட்டம், புரவியாட்டம், தெருகூத்து நாடகம் போன்ற பல்வேறு கலைவடிகங்களில் கலைநிகழ்ச்சிகள் வழங்கப்படவுள்ளது.
தமிழர் பண்பாட்டின் அடையாளமாக பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடனும், உற்சாகமாக கொண்டாடிட இக்கலைவிழாவிற்கு வருகைதந்து பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு மகிழுமாறு அழைக்கின்றோம் என கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.