பெரம்பலூர்: வெப்ப அலை நோய்களை தடுக்க முன்னெச்சரிக்கை வழிமுறைகள்; கலெக்டர் தகவல்!

schedule
2026-03-16 | 11:08h
update
2026-03-16 | 11:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Precautionary Measures to Prevent Heatwave-Related Illnesses; Collector Informs!

பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கேடை வெப்பத்தினைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் வெப்ப அலை காரணமாக ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளைத் தவிர்க்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகியவற்றில் வெப்ப அலை தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தேவையான மருந்துகள், ஓ.ஆர்.எஸ் கரைசல், போதிய குடிநீர் வசதி மற்றும் அவசர சிகிச்சை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், மாவட்ட சுகாதாரத் துறையினரால் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வெப்ப அலை நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் சுகாதார கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

பொதுமக்கள் தினமும் அதிக அளவில் தண்ணீர், நீர்மோர், இளநீர், நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்கள், மற்றும் ஓ.ஆர்.எஸ் (உப்பு சர்க்கரை கரைசல்) போன்ற திரவங்களை பருக வேண்டும். இலகுவான, வெளிர் நிறமான பருத்தி உடைகள் அணிய வேண்டும். வெளியே செல்லும்போது தொப்பி, குடை அல்லது துணியைப் பயன்படுத்த வேண்டும். மதியம் 12.00 மணி முதல் 3.00 மணி வரை தேவையற்ற வெளிச்செயல்களைத் தவிர்க்க வேண்டும். வீட்டிலும் பணியிடங்களிலும் குளிர்ச்சியான சூழலை பராமரிக்க வேண்டும். நீண்ட நேரம் நேரடி வெயிலில் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும். தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீர் குடிக்க வேண்டும். கடும் வெப்பத்தில் அதிக உடற்பயிற்சி அல்லது கடின உழைப்பு செய்ய வேண்டாம். குழந்தைகள் மற்றும் முதியவர்களை வெப்பத்தில் தனியாக விட வேண்டாம். வெளிப்புறத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அதிக தண்ணீர் குடித்து உடலை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

கடும் வெப்ப நேரங்களில் இடைவெளி எடுத்து நிழலான இடங்களில் ஓய்வு எடுக்க வேண்டும். தொப்பி அல்லது தலைக்கவசம் பயன்படுத்த வேண்டும். உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக ஓய்வு எடுத்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.முதியவர்கள், சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் நீண்டநாள் நோய்கள் (எ.கா: இருதய நோய், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவைகள்) கொண்டவர்கள் வெப்பத்திலிருந்து கூடுதல் முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் தேவையற்ற வெளியில் செல்வதைத் தவிர்த்து, போதிய அளவு தண்ணீர் குடித்து உடல் நலத்தை கவனிக்க வேண்டும்.

ஒரு ஓ.ஆர்.எஸ். முழு பாக்கெட்டினையும் 1 லிட்டர் காய்ச்சி குளிரவைத்த குடிநீரில் நன்றாக கரையும் வரை கலக்க வேண்டும். தயாரித்த ஓ.ஆர்.எஸ் கரைசலை சிறு சிறு அளவில் அடிக்கடி குடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஸ்பூன் அல்லது கப் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும். தயாரித்த ஓ.ஆர்.எஸ் கரைசலை 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். 24 மணி நேரத்திற்குப் பிறகு மீதமுள்ள ஓ.ஆர்.எஸ் கரைசலை பருக வேணடாம் மற்றும் தேவையெனில் புதிதாக தயாரிக்க வேண்டும். ஓ.ஆர்.எஸ் கரைசலில் சர்க்கரை அல்லது உப்பு கூடுதலாக சேர்க்கக் கூடாது.

குளிர்பானங்கள் அல்லது பாட்டில் ஜூஸ் போன்றவற்றிற்கு பதிலாக ORS அல்லது தண்ணீர் பருகுவது நல்லது.தலைச்சுற்றல், அதிக வியர்வை, பலவீனம், வாந்தி, மயக்கம் போன்ற வெப்ப அலை தொடர்பான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தினை அணுகி சிகிச்சை பெறுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனவே, பொதுமக்கள் அனைவரும் கோடை கால முன்னெச்சரிக்கை வழிமுறைகளை பின்பற்றி தங்கள் உடல்நலத்தை பாதுகாத்துக்கொள்ளுமாறு கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.05.2026 - 10:58:20
Privacy-Data & cookie usage: