Perambalur: Protest held to condemn the attack on journalists at the Karur stone quarry!
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தில் முறைகேடாக செயல்பட்டு வந்த கல்குவாரியை படமெடுக்க சென்ற செய்தியாளரையும், ஒளிப்பதிவாளரையும், சமூக ஆர்வலர்களையும் தாக்கிய குண்டர்கள் மீதும், ஆளும் கட்சி ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ பழனியாண்டி மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பெரம்பலூரில் பத்திரிக்கையாளர்கள் ஒன்று கூடி கவுரவ தலைவர் ஆர்.சிவானந்தம் தலைமையில் பாலக்கரை கலெக்டர் ஆபீஸ் நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட குவாரி கடந்த 2022 ஆம் ஆண்டு 23.25 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த குவாரி முறைகேடாக செயல்படுவதுடன், அரசு சொத்துகள் கொள்ளை போவதை அறிந்த நியூஸ் தமிழ் 24 x 7 திருச்சி செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் மற்றும் சமூக ஆர்வலர்களும் செய்தி சேகரிக்க காரில் நேற்று சென்றுள்ளனர். ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டியின் ஆதரவாளர்கள், குண்டர்கள் 50 பேர்களுடன் நிருபர் கதிரவன் ஒளிப்பதிவாளர் செபாஸ்டின், வழக்கறிஞர் திருமலைராஜா, சமூக ஆர்வலர் சுடலைக்கண்ணு ஆகியோர் மீது கற்கள் மற்றும் உருட்டு கட்டைகளால் கண்மூடித்தனமாக கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.அதோடு, செய்தி சேகரிக்க பயன்படுத்திய கேமராக்கள், ட்ரோன்களையும் அடித்து நொறுக்கினர்
இந்த தாக்குதலில் பாதிப்படைந்த செய்தியாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட 4 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து குளித்தலை காவல் நிலையத்தில் புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து, (பிரஸ் க்ளப் ஆப் பெரம்பலூர்) பெரம்பலூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், ஜனநாயகத்தின் 4வது தூணான பத்திரிகை துறையினருக்கு குற்றவாளி மற்றும் கொள்ளையர்களிடம் இருந்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், அதற்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டத்தில் கோசங்கள் எழுப்பினர். கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொலைக்காட்சி, பத்திரிகை செய்தியாளர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.