பெரம்பலூர்: சிப்காட் தொழிற்பூங்காவிற்கு நிலம் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா!

schedule
2025-04-24 | 02:49h
update
2025-04-24 | 02:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Public protest against land acquisition for the Chipkot Industrial Park!

பெரம்பலூர் மாவட்டம் இரூர் கிராமத்தில் சிப்காட்ட தொழிற்பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியினை உடனே நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் இரூர் கிராமத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டத நிலையில் அந்த இடத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்று அறிவித்த அரசு, தற்போது அதே இடத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்படி ஏற்கனவே ஜவுளி பூங்காவிற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்துடன் சேர்த்து அதன் அருகே உள்ள 80 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்து வருகிறது.

Advertisement

இதற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக எதிர்ப்பு தெரிவித்து வரும், அந்த பகுதி விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் விவசாயம் என்றும், இதை தவிர வேறு ஏதும் தங்களுக்கு தெரியாது என்றும், அதனால் 80 ஏக்கர்  விவசாய நிலத்தினை கைதப்படுத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  இந்நிலையில் இதுகுறித்து கருத்து கேட்பு கூட்டம், டி.ஆர்.ஓ வடிவேல் பிரபு தலைமையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்ட, இரூர் மற்றும் ஆலத்தூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் விவசாயிகள், தங்களுக்கு இருக்கும் ஒரே வாழ்வாதாரம் இந்த விளைநிலங்கள் தான், புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ள செட்டிகுளம் சின்ன வெங்காயத்திற்கு பெயர் போன இரூர் கிராமத்தில், அதே சின்ன வெங்காயம் விளையும் விளை நிலங்களை தரிசு நிலம் என்று கூறி அரசு அதிகாரிகள் பொய்யான தகவலை கொடுத்து கையகப்படுத்த முயற்சிக்கின்றனர். அடிக்கடி வருவாய் துறை அலுவலர்கள் எங்கள் விளை நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வருவதால், அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் சிலர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். மேலும் பலர் தீராத மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே எந்த காரணத்தைக் கொண்டும் எங்கள் விளை நிலங்களை அரசிடம் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. எனவே இந்த முயற்சியை கைவிட்டு, எங்களைத் தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து கருத்து கேட்பு கூட்டம் முடிந்து வெளியே வந்த விவசாயிகள் ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து பாதுகாப்பு போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.05.2026 - 23:46:29
Privacy-Data & cookie usage: