பெரம்பலூர்: கலெக்டர் தலைமையில் தென்மேற்குப் பருவமழை காலத்திற்கான முன்னேற்பாடு பணிகளுக்கான ஆய்வுக் கூட்டம்!

schedule
2026-05-20 | 20:23h
update
2026-05-20 | 20:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Review Meeting on Preparatory Works for the Southwest Monsoon Season, Chaired by the District Collector!

தென்மேற்குப் பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மிருணாளினி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. அதில் அவர்தெரிவித்ததாவது:

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் – 2026 மாதம் தொடங்கி செப்டம்பர் – 2026 வரை நீடிக்கும் என வானிலை அறிக்கை மூலம் தெரிவிக்கபட்டுள்ளது. தென்மேற்குப் பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும், உடமைகளுக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பேரிடர் காலங்களின் போது, பொதுகட்டிடங்களை முகாம்களாக பயன்படுத்த ஏதுவாக மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் போதுமானதாகவும் தகுதியானதாகவும் உள்ளதா என ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அறிக்கை தயார் செய்திட வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்படும் கிராமங்களிலிருந்து மக்களை பாதுகாப்பாக மீட்டு தங்க வைப்பதற்கு ஏதுவாக பள்ளிக் கட்டிடங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்களின் தொடர்பு எண்களுடன் கூடிய பட்டியலை தயார் செய்து வைத்திருக்கவேண்டும்.

பேரிடர் காலத்தின்போது அமைக்கப்படவுள்ள நிவாரண முகாம்களில் அடிப்படை வசதிகளை உறுதி செய்வதுடன், முகாம்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு மருத்துவக் குழுக்கள் மூலம் உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் பொதுப்பணித்துறை கட்டிடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள கட்டிடங்களில் பழுதுகள் இருப்பின் அதனை சரிசெய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

ஆறு, ஏரி, ஓடை, வாரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், மேற்படி நீர்நிலைகளின் கரைகள் உறுதித்தன்மையை ஆராய்ந்து, பலவீனமாக இருப்பின் அவற்றை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பீடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளவதுடன் இழப்பீட்டு விவரங்களை TNSMART இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
வரத்து வாய்க்கால்களில் உருவாகியுள்ள தடைகளை தூர்வாரி நீர்வழிப் பாதையினை சீராக வைத்திருக்க வேண்டும். வட்டார அளவில் தீயணைப்பு மற்றும் மீட்புபணித் துறையின் மாதிரி செயல் விளக்கம் நடத்தி பேரிடர் காலங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். பேரிடர் காலங்களின் போது மீட்புபணி மேற்கொள்ளும் பொருட்டு பயிற்சி திறன் கொண்ட காவலர்கள் குழுவினை அமைத்திட வேண்டும்.

Advertisement

தென்மேற்குப் பருவமழை காலங்களில் தேவையான மரம் அறுக்கும் இயந்திரங்கள், படகுகள் போன்ற மீட்பு உபகரணங்கள் வெள்ளம் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் பயன்படுத்திட தயார் நிலையில் உள்ளதா என்பதை முன்கூட்டியே உறுதி செய்து கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளின் குறுக்கே விழும் மரங்களை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வெள்ளத் தடுப்பு பணிக்காக போதுமான அளவில் மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு குச்சிகளை தேவைப்படும் இடங்களில் முன்னதாகவே இருப்பு வைத்திட வேண்டும். மேலும் ஆறுகள், ஏரிகள் மற்றும் வரத்துவாய்க்கால்களின் கரைகள் உடையும்பட்சத்தில் உடன் சரி செய்ய ஜே.சி.பி. இயந்திரங்களை அதனை இயக்கும் நபருடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இருமடங்கு தேவைகளை மூன்று மாதத்திற்கு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். பண்டங்கள் நகர்வின் போது அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மழைநீரால் பாதிக்காத வகையில் தார்பாலின் போட்டு மூடி பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும். உணவுப்பொருள்கள், மண்ணெண்ணெய், காலி சாக்குப்பைகள் ஆகியவற்றை போதுமான அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும்.

பேரிடர் காலங்களில் போதுமான அளவில் மருந்துகளை இருப்பில் வைத்திருக்கவும், அத்தியாவசிய மருந்துகள், உயிர் காக்கும் மருந்துகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் ஜெனரேட்டர் வசதிகள் இருப்பதனை உறுதிசெய்வதுடன், சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். தொற்று நோய் பரவாமல் தடுத்திட ஏதுவாக பிளீச்சிங் பவுடர் மற்றும் குளோரின் மருந்துகள் போதுமானஅளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும்.

இயற்கை இடர்பாடுகளின்போது, மின் வயர்கள் அறுந்து விழுந்து அதனால் ஏற்படும் இழப்புகளை தடுத்திடவும், மின்சாரம் உடனடியாக வழங்கிட போதுமான அளவில் மின் கம்பங்கள், வயர்கள் இருப்பு வைத்திருக்கவும் வேண்டும். சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மின் விநியோகம் செய்திடவும், மின்மாற்றிகளை ஆய்வு செய்திட வேண்டும்.

தென்மேற்குப் பருவமழை காலங்களில் கால்நடை மருத்துவமனைகளில் போதுமான அளவில் கால்நடை மருந்துகளை இருப்பில் வைத்திருக்கவும், அத்தியாவசிய தடுப்பு மருந்துகள், வைத்திருக்க வேண்டும். வெள்ள காலங்களில் பாதிக்கப்படும் விவசாய பயிர்கள் மற்றும் தோட்டப்பயிர்கள் குறித்த விவரங்களை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருடன் இணைந்து ஆய்வு செய்து உடனுக்குடன் அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும்.

கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூடியிருப்பதை உறுதி செய்திட வேண்டும். ஆழ்குழாய் கிணறு சம்பவங்களைத் தடுப்பதற்கான உரிய வழிகாட்டு நடைமுறைகளை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தவறாது கடைபிடித்தல் வேண்டும். நீர்நிலைகளில் “ஆழமான பகுதிகள்” குறித்த முன்னெச்சரிக்கை விளம்பர பலகையினை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நீர்நிலைகளின் கரைகளில் வைத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.

பேரிடர் தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் புகார்கள் TNSMART APP மூலமே தெரிவிக்கப்படும் என்பதால் அனைத்து அலுவலர்களும் மேற்படி செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். மேலும் TNSMART APP மூலம் பெறப்படும் புகார்களுக்கு உடனடி தீர்வு கண்டு உடனுக்குடன் பதில் அனுப்பப்படவேண்டும். தங்கள் பகுதியில் மின்னல் வருவதை முன்கூட்டியே அறிந்திடும் வண்ணம் தாமினி (DOMINI) என்கிற APP உருவாக்கப்பட்டுள்ளது. இந்த APP (செயலியை) அனைவரும் தங்களது அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற எண்ணிலும், 18004254556 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்ற விபரத்தை பொதுமக்களிடையே தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார். அனைத்து துறை வாரியான அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.05.2026 - 21:01:56
Privacy-Data & cookie usage: