Perambalur: Road blockade in protest against officials for not taking action against quarry trucks that are destroying roads! Around 20 trucks seized!!
பெரம்பலூர் அருகே எசனை கிராமத்தில் குவாரிகள் அரசின் அனுமதியுடனும், அதிகாரிகள் ஆதரவுடனும் வெகுசிறப்பாக இயங்கி வருகின்றன. குவாரிகளுக்கு கற்கள் ஏற்ற வரும் லாரிகள் பொதுமக்கள், விவசாயிகள், பயன்படுத்தும் கிராம சாலைகளை பாழாக்குவதாக குற்றம் சாட்டி கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்பதாலும், லாரிகள் செல்லும் போது அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள பாதையில் செல்வதால் வெயிற்காலங்களில் புழுதியும், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. மேலும், லாரி காட்டுப்பாதையில் வருவதால், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், அருகில் இருக்கும் ரேசன் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் மக்கள், பள்ளிக்கு கிழக்கு பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு குவாரி லாரிகள் ஏற்படுத்தும், புழுதி, சகதி மற்றும் புகையால் பெரும் அவதியுறுவதாக தெரிவிக்கின்றனர். குவாரி நடத்துபவர்கள் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளின் பினாமி என்பதாலும், மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளை சிறப்பாக கவனிப்பதால் தங்கள் தெரிவித்த கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி இன்று அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு எசனை கிராமத்தில் அரசுமேல்நிலைப்பள்ளி அருகே இன்று காலை அப்பகுதிக்கு வந்த சுமார் 20 லாரிகளை சிறைப்பிடித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி லாரிகளை மீட்டு அனுப்பி வைத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்பு வந்த குவாரி உரிமையாளர்கள் லாரிகளை கட்டுப்படுத்தி கொள்வாதாக உறுதி அளித்து லாரிகளை அவ்வழியில் இயக்காமல் விட்டுவிட்டு மாற்றுப்பாதையில் சென்றனர். இச்சம்பவத்தால், இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.