பெரம்பலூரில் மதுக்கடை திறப்பதை கண்டித்து சாலை மறியல்

schedule
2017-04-12 | 16:31h
update
2026-09-23 | 15:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur road blockade to protest the opening of the new wine shop

பெரம்பலூர் ஆத்தூர் சாலையில், தனியார் பெட்ரோல் பங்க் அருகே புதிதாக மதுபானக்கடையை அரசு திறப்பதை கண்டித்து, பொதுமக்கள் அப்பகுதியில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் நகரில் மொத்தம் 8 டாஸ்மாக் மதுபானக்கடைகளும், அதனுடன் இணைந்து மதுஅருந்தும் கூடங்களும் இயங்கி வந்தன. இதுதவிர அனுமதிபெற்ற 4 தனியார் மதுஅருந்தும் கூடங்களும் இயங்கி வந்தது. சமீபத்தில் உச்சநீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி 500மீ தூரத்திற்குள் இயங்கிவரும் அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுஅருந்தும் கூடங்களை உடனே அகற்ற உத்திரவிட்டது. இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் நகரில் அனைத்து அரசு மதுபானக்கடைகளும், ஒரு தனியார் மதுஅருந்தும் கூடமும் இழுத்து மூடப்பட்டது.

Advertisement

இந்தநிலையில் பெரம்பலூர் புறநகர் பகுதியான ஆத்தூர் சாலையில் கோனேரிபாளையம் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட முத்துநகர் குடியிருப்பு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதனிடையை முத்துநகரில் ஆத்தூர் சாலையில் 500மீட்டர் தூரத்தில் ஒரு தனியார் காலிமனையை டாஸ்மாக் நிறுவனம் தரைவாடகை கொடுத்து அங்கு அரசு மதுபானக்கடையை திறக்க வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு தினத்தில் மது பானக் கடையை திறக்க டாஸ்மாக் நிறுவனத்தின் ஏற்பாடு செய்துள்ளனர். அதை அறிந்த முத்துநகர் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடையை அமைத்தால் பெண்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று திரும்பும் மாணவிகளும், பெண்களும் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறி இன்று காலை 9மணிஅளவில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பெரம்பலூர்-ஆத்தூர் சாலைக்கு திரண்டு வந்து சிமெண்டு பலகைகள், மரங்கள் மற்றும் கட்டிட அஸ்திவாரத்திற்கு பதிக்கும் அரளை கற்களை சாலையில் வைத்து தடுத்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், ஆத்தூர் மார்க்கத்தில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோனரிபாளையம் புறவழிச் சாலைவழியாக பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் வருவாய்த் துறையினர், டாஸ்மாக் நிறுவனத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி இங்கு மதுபானக்கடை அமைக்கமாட்டோம், துறையூர் சாலையில் செஞ்சேரி பகுதியில் அமைக்க உள்ளோம் என உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்தனர். பின்னர், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.09.2026 - 15:09:40
Privacy-Data & cookie usage: