Perambalur: Robber snatches woman’s jewelry; flees after dropping jewelry as public chases him!
பெரம்பலூர் அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய கெர்ளையர்களை பொதுமக்கள் துரத்தியதால், பறித்த நகையை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அடுத்துள்ள புதுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி மல்லிகா (38). இவர் இன்று அதே பகுதியில் உள்ள தனது வயலுக்குச் சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, புதுக்குறிச்சி மாணவர்கள் விடுதி அருகே வந்த போது, பைக்கில் மல்லிகாவை பின்தொடர்ந்து வந்த, மர்ம நபர் அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பியோடினான். இதை பார்த்த மல்லிகா, திருடன், திருடன் என கூச்சலிட்டார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது அவர்களில் காரை கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பவர் மர்மநபரை பின்தொடர்ந்து சென்றார். இதனால் பதற்றம் அடைந்த மர்மநபர் மல்லிகா கழுதில் இருந்து பறித்த 5 பவுன் தங்க நகையை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து செந்தில் அந்த நகையை மீட்டு மல்லிகாவிடம் வழங்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மர்மநபர் குறித்த தடயங்களை சேகரித்த போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்வம் இன்று அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.