Perambalur: Social issues are more capable of disrupting the collective mindset of the people than natural disasters; Minister Rajmohan speaks at a review meeting.
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் தமிழ்நாடு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் கலெக்டர் ஷரண்யா முன்னிலையில்
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மாவட்ட தொழில்மையம், நகராட்சி, பேரூராட்சிகள் துறை, ஊரக வளர்ச்சி முகமை, தாட்கோ, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியம், கனிமவளத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் விரிவாக கேட்டறிந்து, பேசியதாவது;
நிர்வாகம் என்பது, ஒரு பிரச்சனையை கண்டறிந்து, அதற்கு ஏற்ற தகுந்த ஒரு தீர்வை கண்டறிவதும், அந்த தீர்வை கண்டறிந்த பின் தீர்வை செயல்படுத்தும் போது எந்த வகையிலும் யாருடைய தலையீடும் இல்லாமல் அதை செயல்படுத்தி முடிப்பதும், தீர்வை செயல்படுத்திய பின், அது தரமாகவும், முழுமையாகவும் உள்ளதா என்பதை கண்டறிவதும், பிறகு அதனை முழுமையாக செயல்படுத்துவதுமே ஆகும்.
ஒரு திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட நிதி ஒதுக்கீட்டையும் செலவினங்களையும் வெறும் காகித அளவிலும் எண்களாகவும் மட்டுமே அணுகாமல், அத்திட்டத்தின் மூலம் களத்தில் ஏற்பட்ட உண்மையான தாக்கம் என்ன என்பதை நாம் உற்றுநோக்க வேண்டும். அந்த இறுதி விளைவை முதன்மையாகக் கொண்டு, இலக்கிலிருந்து திட்டமிடலைத் தொடங்கும் ‘தலைகீழ் திட்டமிடல் முறையில் உங்கள் பணிகளை அமையுங்கள். எவ்வித அரசியல் தலையீடோ அல்லது நிர்வாக அழுத்தமோ இன்றி, உங்கள் பணிகளை எளிதாக்கவும் உங்களுக்குத் துணையாக நிற்கவும் ஒரு சகோதரனாகவே நான் இங்கு வந்திருக்கிறேன்.
பொறுப்பு அமைச்சர் என்பது வெறும் அதிகாரப் பதவி அல்ல; அது மிக உன்னதமானதொரு கடமை மற்றும் பொறுப்பு ஆகும். புவியியல் ரீதியாக பெரம்பலூர் மாவட்டம் ஒரு காலத்தில் பெருங்கடல் பகுதியாக இருந்ததால், இங்கு சுனாமி, நிலநடுக்கம், பெருவெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் நேரடியாகத் தாக்குவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. கண்ணால் பார்த்து மதிப்பிடக்கூடிய இத்தகைய பேரிடர்கள் வராது என்று நாம் மகிழ்ந்தாலும், சமூகப் ரீதியாக வேலைவாய்ப்பின்மை, குழந்தைத் திருமணம் போன்ற கண்ணுக்குத் தெரியாத சமூகப் பேரிடர்களை நாம் முன்கூட்டியே கணிப்பது கடினம்.
இயற்கைச் சீற்றங்களை விடவும் இத்தகைய சமூகப் பிரச்சினைகள் திடீரெனத் தோன்றி ஒட்டுமொத்த மக்கள் மனநிலையை சீர்குலைக்கக்கூடியவை. வறட்சி போன்ற சவால்களை எதிர்கொள்ள நாம் எப்போதுமே முன்னெச்சரிக்கையுடனும் விரைந்து செயல்படும் திறனுடனும் இருக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு, துறை சார்ந்த அமைச்சர்களுடன் கலந்து பேசி, மாவட்டத்தின் நிறைகுறைகள் அனைத்தையும் களைந்து, நாம் அனைவரும் இணைந்து கல்வியிலும் வாழ்வாதாரத்திலும் சிறந்ததொரு புதிய பெரம்பலூரை உருவாக்குவோம் என அமைச்சர் ராஜ்மோகன் பேசினார். இதில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் கி.சிவக்குமார், போலீஸ் எஸ்.பி லலித்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.